For Read Your Language click Translate

19 June 2014

ஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்


by Tamil and Vedas
speedoflight_chart
ச.நாகராஜன்
Written by S Nagarajan
Post No. 1117;Dated 19th June 2014.
சூரிய வர்ணனை
ஜய, அஜவ, விஜய, ஜிதபர்ணா, ஜிதக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா என்ற ஏழு குதிரைகள் மீது பவனி வருவான் சூரியன் என்று நமது புராண இதிஹாஸங்கள் கூறியதை நவீன அறிவியல் கூற்றான சூரிய ஒளி கொண்டிருக்கும் 7 வண்ணங்களான VIBGYOR-டன் ஒப்பிட்டும், சனியை மந்தன் என்று கூறியதை சூரியனைச் சுற்ற கிரகங்களிலேயே அதிக காலமான 30 வருடங்களை சனி எடுத்துக் கொள்வதை ஒப்பிட்டும் அனைவரும் மகிழ்ந்து வந்துள்ளோம்.
SpeedOfLight_Feature
ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்
சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது.
ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதி நூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம்.
“தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்” (तरणिर्विश्वदर्शतो जयोतिष्क्र्दसि सूर्य |
विश्वमा भासिरोचनम) என்ற இந்த மந்திரத்தின் பொருள்: “வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே, அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே” என்பதாகும்.
இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர் உரை எழுதுகையில்,” ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்” என்று எழுதியுள்ளார். இதன் பொருள் : சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது! சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற் கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது. இதன் படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின் படி 0.2112 வினாடிகள் ஆகும். அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்.
இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கம் தரப்படுகிறது.
பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம். இதன் படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும்.
இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்
0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது.அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது!
இது 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச் சற்று மாற்றிக் கணக்கிடுவதானாலேயே. (இந்த அளவின் படி ஒரு அங்குலம் என்பது முக்கால் அங்குலமாகக் கணக்கிடப்படுகிறது).
வேத விற்பன்னர்களின் ஆய்வுகள்
இந்த சாயனரின் உரை 1890ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் சாயனரின் கி.பி.1395 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும் வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ‘’ஃப்ராடு ‘’ என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார்.
வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும் போது பொன்னான உலகம் பிறக்கும் என்று மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர், இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரமிக்கின்றனர்.
நவகிரக நாயகனான சூரியனைப் பற்றிய வேத முழக்கத்தின் ஜய கோஷம் நம்மை பரவசப்படுத்துகிறது, இல்லையா!
Written by my elder brother S.Nagarajan to a Tamil Magazine: swami; ஞான ஆலயம் மே 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

No comments:

Post a Comment