For Read Your Language click Translate

25 June 2014

பாம்பும் கீரியும்

பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கலாம். பாம்பு படம் எடுத்து பல தடவைகள் கீரிப் பிள்ளையைக் கடிக்கவும் படத்தால் அடிக்கவும் முயலும். இருப்பினும் கீரிப்பிள்ளை வேகமாக விலகி தப்பிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துக் கொன்று விடும். இப்படி பாம்புகளை கீரிப்பிள்ளை வெல்வதற்குக் காரணம் அதன் வேகமான செயல்பாடுதான் என்றே சமீப காலம் வரை விலங்கியல் நிபுணர்கள் நினைத்திருந்தார்கள். நம் தமிழ் சினிமா ஹீரோ, மெஷின் கன் குண்டுகளில் இருந்து தப்பிப்பது போல, ‘‘கீரிப்பிள்ளை அதீத சுறுசுறுப்புடன் பாம்பின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கிறது. தப்பித் தவறி விஷப் பாம்பிடம் அது கடிபட்டுவிட்டால், நிச்சயமாக இறந்துவிடும்’’ என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பாம்பு கடித்தாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது.

அதன் உடலில் இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என்று தற்போது புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள். அங்குள்ள வொய்ஸ்மான் நிறுவனத்தில் பணியாற்றும் வாரா ஃப்யூடின் என்ற விஞ்ஞானி, பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தார். சாதாரணமாக மற்ற பிராணிகளின் உடலில் (மனிதன் உட்பட) அவ்விஷத்தைச் செலுத்தினால், பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் செயல் இழக்கும். விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ்! ஆனால் கீரியின் உடலில் விஷத்தைச் செலுத்தியபோது, அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக் காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது ஃப்யூடின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு. இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

தினகரன்

No comments:

Post a Comment