For Read Your Language click Translate

24 June 2014

சிலம்பம்..!



தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.

அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.

ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.

கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.

"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.


1459276_631626926895759_471270388_n.jpg

No comments:

Post a Comment