For Read Your Language click Translate

Follow by Email

21 June 2014

அறியாத தகவல்கள்----பாம்புகள்

அழிந்து கொண்டிருக்கும் உயிர்.....அறியாத தகவல்கள்----பாம்புகள்                         
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனாகாட்டில் வாழும் பாம்புகளின் வாழ்நாள் குறித்து எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் அறுதியிட்டுக் கூறியதில்லை. இருப்பினும் சில வளர்ப்பகங்களில் வாழ்ந்து இறந்த பாம்புகளின் வாழ்நாள் குறித்த குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இந்திய மலைப்பாம்புகள்
34 வருடமும், மண்ணுளிப்பாம்புகள் 13 வருடம்,10 மாதமும், நாகப்பாம்புகள் 21 வருடம், 6மாதமும், அதிகபட்சமாக வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கிட்டத்தட்ட அனைத்துப் பாம்புகளும் மரம் மற்றும் செங்குத்தான பகுதிகளில் ஏறும், நீரில் நீந்தும், குறிப்பிட்ட ஒரு வகைப்பாம்பு காற்றில் பறந்து, மரத்திற்கு மரம் தாவும். இதைப் பறக்கும் பாம்பு என அழைக்கின்றனர். பல சாரை மற்றும் கொம்பேறி மூக்கன் வகை இனங்கள், தாங்கள் மரங்களில் வசிப்பதற்கேற்ற செல் அமைப்பையும், தடிமனான தோலையும் கொண்டுள்ளது. கடலில் வாழும் பாம்புகளின் வால், துடுப்பு போல் சற்று அகன்று காணப்படும். இதனால் 5 மணி நேரம் நீரினுள் மூச்சடக்கி இருக்க முடியும். மண்ணுளிப் பாம்பு போன்ற தரையின பாம்பினங்களின் தலை ,கடினமான தோலால் ஆனது. இதன் உதவியோடு இவை குழிகளைத் தோண்டவும், மறைந்து கொள்ளவும் செய்கிறது. 

பேராசிரியர் கார்ல் கேன்ஸ், பாம்புகளின் ஊர்ந்து வரும் திறன் குறித்து ,இயற்பியல் கண்ணோட்டத்தில் ஆய்வு நடத்தினார். அவரின் கருத்துப்படி பாம்புகள், ஒரே சமயத்தில் நான்கு வகையாக ஊர்ந்து செல்கின்றன. அது ,அதன் உடலின் சுருங்கி விரியும் தன்மை குறித்தும், சுற்றுப்புற நிகழ்வுகள் சார்ந்தும் உள்ளது. இதை நாம் பாலைவனத்தில் வாழ்பவை, குடியிருப்பு பகுதியில் வாழ்பவை, தோட்டங்களில் வாழ்பவை போன்றவற்றிடம் காணமுடியும். பொதுவாக பாம்புகள் ஒரே சமயத்தில் இரு வகையில் ஊர்ந்து செல்லும். ஆபத்தான காலத்தில் மட்டும் அவை தங்கள் நுட்பத்தை மாற்றிக் கொள்ளும் என்கிறார். வயது முதிர்ந்தவை இவ்வாறான செயல்முறைகளில் ஈடுபடுவதில்லை. 
ஆங்கிலத்தில் "செர்பன்டைன் மோஷன் " என அழைக்கப்படும் பாம்பின் நகர்வு ஆங்கில எழுத்தான "S" வடிவில் இருக்கும். சற்று உற்று நோக்கும் போது இரு S போல் காணப்படும். தனது அரைபாக உடலை வளைத்துக் கொள்கிறது. புல், கல்,சிறிய பாறை மற்றும் கடினமான தளங்களில் இதன் ஓட்டம் எளிமையாகிறது. வழுவழுப்பான ,கண்ணாடி தரைகளில் இது சிரமத்தைச் சந்திக்கும் அதே வேளையில் இதே உத்தியைக் கையாண்டு நீரினுள் சிறந்த முறையில் நீந்தும்.  


பாம்பின் முட்டைகளையும், குட்டிகளையும் வெகு இயல்பாகத் தின்னும் எறும்புகள், மண்வண்டுகள், கீரிகள் மற்றும் நிலத்தில் வாழும் பெரு ஓணான்கள், நீர்வாழ், நிலவாழ் குருவிகள் உண்டு. இவை ஒரு வகையில் பாம்பின் எண்ணிக்கை பெருகாமல் கட்டுக்குள் வைக்கும் இயற்கையின் உபாயம் என்றும் அழைக்கலாம். நடுத்தர வயது மற்றும் முதிர்ந்தவற்றின் எதிரி மனிதன் மட்டுமே. இவ்வினத்தின் ஜென்ம விரோதி கீரி. கீரியின் இளம் குட்டி ஒன்று பெரும்பாம்போடு சண்டையிடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவை மிகச் சரியாக பாம்பின் வால் பகுதியை முதலில் கடிக்கும். இதனால் பாம்பானது முன்னால் உந்திச் செல்லும் சக்தியை இழக்கும். பின் நடுப்பகுதி, பிறகு தலையின் பின்பகுதி என தாக்கி கடிக்கும். அது ஏறத்தாழ தனது 75 சதவீத பலத்தை இழந்து எதிர்ப்பை மிக மெதுவாக கைவிடத் துவங்கும். இந்தச் சமயத்தில் கீரியானது பாம்பின் தலையையோ, அல்லது குடல் பகுதியையோ கிழித்து எறிந்து விடுகிறது. அதே சமயம், பாம்புகள் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல உத்திகளைக் கையாளும். அது தனது எதிரியின் பலத்தை உணர்ந்து செயல்படும். கட்டுவிரியன், மலைப்பாம்பு போன்றவை மிக வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் அப்போது உஸ் உஸ் என்று சீறும் ஒலி எழுப்பும். இதே உத்தியை நாகப்பாம்புகள் மேற்கொள்ளும். அப்போது அதன் பின் பகுதி விரிந்து சுருங்கும். மேலும் தனது முக்கால் பாக உடலைத் தரையிலிருந்து மேலெழும்பி நிற்கும். 
விஷமற்றவை என அழைக்கப்படும் தண்ணீர் பாம்புகள் கூட, இப்படியான உத்திகளை மேற்கொண்டு ,மனிதன் அல்லது அதன் எதிரியை மிகுந்த பயம்கொள்ள வைக்கின்றன. சில எந்த எதிர்ப்பும் காட்டாமல் இறந்தது போல் பாவனை செய்கின்றன. தகுந்த நேரம் கிட்டும்போது திடீரென்று அதன் மீது தாக்குதல் நடத்திக் கொத்தும். சில ,விஷத்தை எதிரியின் முகம் நோக்கி பீய்ச்சும். உதாரணமாக ஆப்பிரிக்க பாலை நிலங்களில் வாழும் பிளாக் மாம்பாக்கள் என்ற கருநாகப்பாம்பினம் மிகுந்த விஷத்தன்மை கொண்டவை. இது எதிரி, எதிர்பாராத தருணத்தில் விஷத்தை முகம் நோக்கி துப்ப, எதிரியின் கண்கள் பார்வையிழக்கும். விஷம் உள்ளே செல்லச்செல்ல உயிரிழப்பும் ஏற்படும். நம் இந்திய ராஜநாகத்திற்கு ஒப்பான விஷத்தன்மை கொண்டது என்கிறார் பாம்பியல் நிபுணர் டாக்டர் ஆஸ்டின் ஸ்டீவன்ஸ். அரேபிய பாலை நிலங்களில் வாழ்பவை பிடிபட்டவுடன், துர்வாடையுடன் வாந்தி எடுக்கின்றன. முடிந்தவரை ,பாம்புகள் தங்கள் எதிரியின் பார்வையில் படாமல், மறைந்து அமைதியாகவே வாழ விரும்புகின்றன! 
இந்தியாவின் முரண்பாடே ஒரு சாரார் அதைத் தெய்வமாக வழிபடுவதும், மறு சாரார் தோலுக்காகவும், விஷத்திற்காகவும் நாட்டுவைத்திய முறைகளுக்காகவும் கொல்வதுதான். எப்படி பார்த்தாலும் அவை வாழ்நாள் முழுதும் பயத்துடனே வாழ்கின்றன. உலகெங்கிலும் ஒரு சிலரே பகுத்தறிவுடன், சுற்றுச்சூழல் பேணிக்காக்கப்படவேண்டிய கண்ணோட்டத்துடன் பாம்புகளைப் பார்க்கின்றனர். எலி போன்ற மிக அதிக சேதம் விளைவிக்கும் கொறிப்பான்களை கொல்வதற்கு ஒரே உயிரினம் பாம்புகள்தான் என்பதை நாம் மறுக்கலாகாது. உலக உணவு மற்றும் சுகாதார நிறுவனம் உலகம் முழுதும் விளையும் உணவுப் பொருட்களின் விளைச்சலில் 35 சதவீத உணவுகள், எலிகளால் உண்ணப்பட்டு நாசமாக்கப்படுகிறது. மற்றும் இதன் எச்சில் ,சிறு நீரால் பரப்பப்படும் நோய்கள், 21 சதவீதக் குழந்தைகளை கொல்கின்றன. இதற்குக் காரணமான எலிகளைக் கொல்ல என்னதான் வேதியியல் மருந்துகளைப் பயன்படுத்தினாலும் அவை கட்டுக்குள் வருவதில்லை என்பதும், அவ்வேதியியல் மருந்து தரும் உப விஷ விளைவு ,எலிகளைக் காட்டிலும் மிகக் கொடூரமானவை என்றும் கூறுகிறது. 
தமிழக, ஆந்திராவில் வாழும் இருளர் பழங்குடிகள், பாம்புகள் குறித்த மிகச் சிறந்த அறிவு படைத்தவர்களாக உள்ளனர். தேவகோட்டை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் வாழும் இவர்கள், தோலுக்காகப் பாம்புகளை வேட்டையாடுகின்றனர். பாம்புகளின் இருப்பிடத்தை அதன் தடம், அவை விட்டுச்சென்ற தோல் மற்றும் அதன் கழிவுகள் ஏதேனும் உள்ளதா என மிக நுட்பமாக ஆய்ந்து மிகச் சரியாக அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். கைதேர்ந்த ஒரு இருளர் ஒரு நாளைக்கு 2 முதல் 5 மிகப் பெரிய பாம்புகளைப் பிடிப்பதாக்க் கூறுகிறார் விட்டேகர். அவை எந்தக் குழியில் மறைந்துள்ளது என்பதை ஒரு குச்சி கொண்டு லேசாக தட்டுவதன் மூலம், காதை நிலத்தில் வைத்து அதன் உள்ளீட்டுத் தன்மை குழியாக உள்ளதை உணர்ந்து, குச்சியால் குத்திப் பாம்பை வெளியேற்றி பிடிப்பதைத் தான் கண்டு வியந்து போனதாகவும் இவர் கூறுகிறார். 
மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநில பாம்பு பிடிப்பவர்கள் இந்து அல்லது முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கு இவர்களுக்கென்று தனி மரியாதை உண்டு. ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்  இவர்கள் யாரும் பாம்பை உணவாக்கிக் கொள்வதில்லை. உண்மையில் அது மிகுந்த புரதச் சத்தும், பாதுகாப்பான உணவுமாகும். மிசோரம் பகுதி பழங்குடிகள் பாம்புக்கறி உண்கின்றனர்.


பாம்புகள், இரையைத் துரத்திப்பிடித்து பின் ஓய்வாக உண்ணுவதையே விரும்புகின்றன. இவ்வாறான செயலால் இதன் உடலின் வெப்பம் ,ஒளியை உறிஞ்சும் திறன் போன்றவை மேம்படுகின்றன. அதே சமயம் சில வகை பாம்புகள், கட்டாயம் ஏற்படின் அழுகிய உணவுகள், இறந்த பெரு உயிரின்  துண்டங்களையும், தங்களுக்கு ஒவ்வாத உணவுகளைக் கூட உட்கொள்ள தயாராகின்றன. வாயின் அளவை விட மூன்று மடங்கு பெரிய உணவையும் மிக எளிதாக விழுங்கும். இதற்காக எலாஸ்டிக் போல் சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைப்பகுதிகளை இதன் வாயமைப்பு கொண்டுள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு தவளை, பெருச்சாளியை கூட அப்படியே விழுங்கி விடும். இதன் பற்கள் உட்கூடிய சாய்வு அமைப்புடன், குறிப்பாக தையல் எந்திரம் அல்லது மரம் அறுக்கும் எந்திரத்தின் பெரும் சக்கர அமைப்பு போல இருக்கும். பல சமயம் பெருமான்கள், முள்ளெலி, காட்டுப்பன்றிகளை விழுங்கிய மலைப்பாம்புகள், முதிர்ந்த நாகப்பாம்புகள் செரியாமை காரணமாய் அவதிப்படுவதுண்டு. பல மாதங்கள் உணவு எடுத்துக் கொள்ளாமல் ,வயிற்று வலியால் அவதிப்படும். சில சமயம் இறந்தும் போகும். இவ்வாறான சமயங்களில் மரக்கிளையில் உடலைக் கம்பி போல சுற்றி உணவை நொறுக்கிக் கூழாக்கும் ,அப்படியும் செரியாத உணவைக் கக்கி விடும்.
பாம்புகள் பெரும்பாலும் தங்கள் இனத்திலேயே வருடத்திற்கு ஒரு முறை உடலுறவு கொள்ளும். உறவு கொள்ளும் காலம், உள் இன அடிப்படையில் மாறுபடும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை உறவு கொள்ள இரண்டு காலங்கள் உண்டு. கொம்பேரி மூக்கன், பச்சைப் பாம்புகள் போன்ற சில வகை பாம்புகள் மட்டுமே இவ்வாறு உறவு கொள்ளும்.உடலால் உறவு கொள்வதன் மூலம் இனப்பெருக்க சடங்கு நடக்கிறது. ஆணின் வால் பகுதியில் கொம்பு போல அமையப்பெற்ற ஆண் குறி, பெண்ணின் வால்பகுதியில் சிறு கீறல் போல் காணப்படும் பெண் குறியில் உட்செலுத்தப்பட்டு விந்து நீர் பாய்ச்சப்படும். இவைகளின் வால் பகுதியில் அமைந்துள்ள ஆசனவாயின் அருகில் வாடை நீர் சுரக்கும் சுரப்பி அமைந்துள்ளது. இரு பாலினத்திலும் இது உண்டு. தாங்கள் பருவ நிலையில் உள்ள போது, இச் சுரப்பி மூலம் வடியப்பெரும் வாசனை நீர் மூலம் எதிர்பாலினத்திற்கு தாங்கள் காமத்தோடு இருப்பதைத் தெரிவிக்கும். வாடையை நுகர்ந்த ஆண், பெண் ஒன்றையொன்று நாடி வரும். பொதுவாக பெண் இனத்திற்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும். அதே சமயம் இனத்திற்கு இனம் இதன் வாசனையும் மாறுபடும். இதை மனிதனால் நுகர முடியாது. மிக அதிக நுகர்வு சக்தி கொண்ட சிலராலேயே இதனை நுகர முடியும். சிலவற்றின் வாசனை சகிக்க முடியாததாகவும், சிலவற்றுக்கு மதிமயக்கும் அளவிற்கும் இருக்கும் என்கிறார் பாம்பியல் நிபுணர் ரோமுலஸ் விட்டேகர்.
உறவு கொள்ளும் நாடகம் விசித்திரமானது. ஒவ்வொரு பாம்பினமும் விதவிதமான நுட்பங்களைக் கையாளும். பொதுவாக ஆணானது பெண்ணின் நடுப்பாகத்தை இறுக்க சுருட்டிக் கொள்ளும். பின் தன் தாடைப்பகுதியைக் கொண்டு பெண்ணின் கழுத்து, உச்சந்தலை, இசைத்தன்மையோடு நெருடுவதும், அழுத்துவதுமாக இருக்கும். இந்தக் கிளர்ச்சி நாடகம் உடல் முழுதும்நடக்கும் போது, பெண் உணர்ச்சியின் உச்சத்தில் ஆணை அணைத்துக் கொள்ளும் அல்லது எந்த அசைவுமின்றி படுத்துக் கொள்ளும். சில மரங்களில் படுத்தபடி உறவு கொள்வதையே விரும்பும். பல சமயம், முதிர்ச்சி அடையாத ஆணோடு உறவு கொள்ளும் முதிர்ந்த பெண் பாம்பு மிகுந்த அவதிக்கு ஆளாகும். இளைஞனான ஆணால் முதிர்ந்த பெண் பாம்பை திருப்திபடுத்த இயலாத போது மற்றொரு ஆண் விரைந்து வந்து உறவு கொள்ளும். அப்போது இரு ஆண்களின் குறிகளும் பெண்ணின் புழைக்குள் இருக்கும். பாம்புகளின் உடலுறவில் நடனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா வகை பாம்பினத்திலும் நடனம் உண்டு. சிலவற்றில் வலிமையில் எளியது, வலியதால் நடனத்தின் இறுதியில் கொல்லப்படுவதுதான் கொடுமையானது.
நன்னீர் பாம்பு ,நாகப்பாம்பு, மலைப்பாம்பு போன்றவை முட்டையிடும் தன்மை கொண்டவை. கட்டுவிரியன், மண்ணுளிப்பாம்பு(Sand boa) போன்றவை குட்டிபோடும். இவை தங்களது முட்டைகளை அவை பொரியும் வரை தங்கள் வயிற்றுப்பகுதிக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்கும். உறவுக்காலமும், முட்டையிடுதலுக்கும் 60---80 நாட்கள் தேவைப்படுகின்றன. சில சமயம் 100 நாட்கள் கூட தேவைப்படும். பொதுவாக பெண் தனக்கு தகுந்த வசதியான இடம் எனக் கருதும் இடத்திலேயே முட்டையிடும். அது கரையான் கூடு, மரப்பொந்து, எலி வளை என எதுவாகவும் இருக்கலாம். நாகப்பாம்புகள், ராஜநாகம் போன்றவை முட்டையிட்டு விட்டு, குறைந்தபட்ச நாட்களுக்காவது அடைகாக்கும். பெண் ராஜநாகம், தன் இடத்தை தேர்வு செய்து, அங்கு இலை தழைகளால் கூடமைத்துகொள்ளும். பின் அதில் முட்டையிடும். மலைப்பாம்பு, முட்டையிட்டு அதைத் தனது உடலால் சுற்றி வெப்பத்தை உண்டாக்கி அவ்வெப்பமானது,நிலையாக பொரிக்கும் அளவு இருக்க வேண்டும் என்பதற்காக, தனது தசைப்பகுதிகளை அடிக்கடி விரித்து சுருக்கும்.
முட்டையின் வாய்ப்பகுதியை, மிகச்சரியாக அறிந்து குட்டிகள், ஓட்டைக் கிழித்து வெளிவரும் அழகு பார்ப்பதற்கு ஆச்சரியமூட்டும். இந்தக் காலங்களில் மட்டும் ஒரு சிறிய அரிசி அளவு பற்கள் இதற்கு முளைத்து இருக்கும். அதன் உதவியோடு ஓட்டின் தோலைக் கிழித்து வெளிவரும். பொதுவாக குட்டிகள் வெளிவந்தவுடன் தாயானது அதனை விட்டு விலகிவிடும். குட்டிகள் அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டவையாக இருக்கும. அவை ஒரு வாரத்திற்குக் கூட்டமாக வாழும். பின் அதனதன் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு திசைகளில் ஊர்ந்து சென்று விடும். சில பாம்புகளின் குட்டிகள் பெரிய மண்புழு அளவே உருவ அமைப்பு கொண்டிருக்குமு். பறவைகள், முள்ளெலி, பெருச்சாலி, நில ஓணான் போன்றவற்றின் விருப்ப உணவாகும் .குட்டிகள், தங்கள் குரலின் மூலம் மாறுபட்ட ஒலியை உருவாக்கும் தன்மை கொண்டவை. இது, அவை வளர்ந்தவுடன் மறைந்து விடும். மேலும் வளர்ந்த பாம்புகளைக் காட்டிலும் இவற்றின் உள்ளுணர்வு மிகுந்த வீச்சுடன் இருக்கும். இதன் உடலின் நிறமும், அவற்றின் வளர்ச்சிக்கேற்ப மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இவ்வகையான, இயற்கை அளித்த தன்மையின் உதவி கொண்டே இவை தங்கள் ஆபத்தான இளமைப்பருவத்தைக் கடக்கின்றன. இருப்பினும் 60 சதவீத பாம்புகள், இப்பருவத்திலேயே இறந்து விடுகின்றன. அதிகமான புரதச்சத்துள்ள உணவு உள்ள இடத்தில் யதேச்சையாக வளரும் பாம்புகள் மிக வேகமாக வளரும். உதாரணமாக தலைப்பிரட்டைகள் அதிகம் உள்ள குட்டையில் பாம்புகள் இருக்க சாத்தியம் உண்டு. மாதம் ஒருமுறை சட்டை உரிக்கும் பாம்புகள் அந்த வாரம் முழுதும், அமைதியற்றும், மழுங்கிய பழுப்பான தோலுடனும் இருக்கும். முதலில் கண்ணில் படிந்துள்ள தோலை உரித்து துவக்கும். அவை பளபளப்பாக உணரும் வரை படிமம் போல இருக்கும் தோலை உராய்ந்து உரித்தவாறே இருக்கும். தோலைப்போலவே பற்கள், நாவின் முனைப்பகுதி போன்றவற்றையும் புதுப்பித்தவாறே இருக்கும். 

(தவல்கள் இன்னும் வரும்)