For Read Your Language click Translate

Follow by Email

17 June 2014

மூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா!கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது.இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.மேலும் காதல் தேசமாக மட்டுமின்றி ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள், தனிமை விரும்பிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்வசம் நோக்கி இழுத்து வருகிறது மூணார்!

பெயர்க்காரணம் மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் 'மூன்றாறு' என்றிருந்து மூணாறாகியுள்ளது. அதேபோல ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயரின் பெயரிலுள்ள முன்றே என்ற வார்த்தையே மருவி பின்னாளில் மூணாராக மாறியது என்ற கருத்தும் நிலவுகிறது.அமைவிடமும், கலாச்சாரமும்! தமிழ்நாடு-கேரள எல்லையில், கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில், இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மூணார். கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது.லைப் ஆஃப் பை 2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் சில காட்சிகள் மூணாரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது படத்தோட ஆரம்பத்துல வர மிருகக்காட்சி சாலையெல்லாம் பாண்டிச்சேரி. அதன் பிறகு மூணாரில் சுப்பிரமணியன் கோயில், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள்.சுற்றுலாத் தலங்கள் மூணாரின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இரவிக்குளம் நேஷனல் பார்க், எக்கோ பாயிண்ட், பள்ளிவாசல் நீர்விழ்ச்சி, ராஜமலா, ஆனயிறங்கல் நீர்த்தேக்கம், பொத்தன்மேடு, ஆட்டுக்கல் ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.இரவிக்குளம் நேஷனல் பார்க் இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி, மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த தேசியப்பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன.
இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனமுடி தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இரவிக்குளம் தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் டிரெக்கிங் (மலையேற்றம்) செய்யலாம்.

பள்ளிவாசல் அருவி மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிவாசல் அருவி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு வரும்போது அருகே அமைந்துள்ள சீதா தேவி கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.

எக்கோ பாயிண்ட் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் எக்கோ பாயிண்ட் என்ற இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது. இந்த எக்கோ பாயிண்ட் ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற் போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக
தரிசனம் அளிக்கின்றன. மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் சுற்றிலுமுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வாசனைப்பயிர் தோட்டங்களை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.

எக்கோ பாயிண்ட்டில் பயணிகள் எக்கோ பாயிண்ட்டில் நின்றுகொண்டு குரல் எழுப்புவதுமாக, அது எதிரொலிப்பதை கேட்டு ஆரவாரிப்பதுமாக சுற்றுலாப் பயணிகள்.

டிரெக்கிங் பல பாதுகாப்பான டிரெக்கிங் பாதைகள் மூணார் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா மற்றும் நயம்காட் போன்ற இடங்களுக்கு செல்லும் மலையேற்ற ஒற்றையடிப்பாதைகள் மிகவும் பிரபலம். சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே வனத்துறையின் சார்பாக மலையேற்ற பயணங்களும் இரவிகுளம் தேசிய பூங்காவின் உள்ளே ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. மேலும் சிகரம் ஏறுவதில் விருப்பம் உள்ளவர்கள் வனத்துறையின் முன் அனுமதி பெற்று தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான மிக உயர்ந்த சிகரமான ஆனமுடி சிகரத்தில் ஏறலாம்.


ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது. மேலும் தங்கி ஓய்வெடுத்து ரசிப்பதற்கேற்றவாறு இங்கு பல ரிசார்ட் விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.


ராஜமலா மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது. தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இரவிக்குளம்-ராஜமலா வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அழிந்து வரும் இந்த வகை ஆடுகளை பார்ப்பதற்காகவே ராஜமலாவுக்கு விஜயம் செய்யலாம்
என்றாலும் வேறு பல சுவாரசியமான அம்சங்களும் இப்பகுதியில் இருக்கவே செய்கின்றன. அதாவது நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம்.

பொத்தன்மேடு வியூ பாயிண்ட் மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய கிராமமான பொத்தன்மேடில் அமைந்துள்ள பொத்தன்மேடு வியூ பாயிண்ட் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் முத்தரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். நறுமணப்பயிர் தோட்டங்களின் வழியாக டிரெக்கிங் (மலையேற்றம்) செய்து பயணிகள் பொத்தன்மேடு வியூ பாயிண்ட்டை அடையலாம்.

தேயிலைத் தோட்டங்கள் வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.


சின்னக்கனால் மூணார் அருகே அமைந்துள்ள சின்னக்கனால் எனும் அழகிய கிராமம் பவர் ஹவுஸ் அருவி போன்ற புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளதால் பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.


டாப் ஸ்டேஷன் மூணாரிலிருந்து 41 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன் என்ற இடம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு இந்தியாவின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்கள் சில அமையப்பெற்றுள்ளன.


டாப் ஸ்டேஷனில் ஒரு பயணி டாப் ஸ்டேஷன் ஸ்தலத்தின் உச்சியில் நின்றுகொண்டு அதன் ஆச்சரியத்தை சுட்டிக்காட்டும் ஒரு சுற்றுலாப் பயணி.
மட்டுப்பெட்டி நீர்த்தக்கம் மூணாரிலிருந்து 12 கி.மீ தொலைவில் டாப் ஸ்டேஷன் செல்லும் வழியில் மட்டுப்பெட்டி நீர்த்தக்கம் அமைந்துள்ளது.

காட்டுயானைகள் மூணாரின் இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளிப்பிரதேசத்தில் காணப்படும் காட்டுயானைகள் கூட்டம்


லக்கம் அருவி மூணாரிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 38 கி.மீ தொலைவில் லக்கம் அருவி அமைந்திருக்கிறது.


மட்டுப்பெட்டி அணைக்கு ஒரு பயணம்! மூணாரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மட்டுப்பெட்டி அணைக்கு செல்லும் வழி.குண்டலா ஏரி மூணாரிலிருந்து 25 கி.மீ தொலைவில் குண்டலா ஏரி அமைந்துள்ளது.


குதிரை குண்டலா ஏரியருகே புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் குதிரை.
படகுப்பயணம் குண்டலா ஏரியில் படகுப்பயணம்.

பள்ளிக்கூடம் மூணாரின் பிரசித்திபெற்ற பள்ளிக்கூடமான கார்மிலோகிரி சி.எம்.ஐ பப்ளிக் ஸ்கூல்.

ஹாரிஸன் மலையாளம் மூணாரில் உள்ள பிரபலமான தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான ஹாரிஸன் மலையாளம் தோட்டம்.


முருகன் கோயில் மூணாரிலுள்ள பிரபலமான முருகன் கோயில்பனிபடர்ந்த தோட்டம் காலைப் பனிமூட்டத்தால் மறைந்துகிடக்கும் தேயிலைத் தோட்டம்.