For Read Your Language click Translate

23 June 2014

திரிகுண ரஹஸ்யம்



தற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.


இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.


மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

மூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா?
திரிகுண ரஹஸ்யம் - பகுதி 2
இந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாக பிரித்தால் தான் உருவ நிலைக்கு வர முடியும்.

குணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். மூன்று குணங்களும் இல்லாமல் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது.

இந்திய கலாச்சாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) என கூறும் பிரிவுகளில் ஓவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்கிகிறது.

கணபதியம் என்ற விநாயகர் வழிபாட்டில் அவர் சித்தி-புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.

கெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவனை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள்.

சமணர்களிலும், ஜைனர்களில் கொள்கையும் மூன்று எண்ணிக்கையில் இருந்து திரிகுணத்தை பிரதிபலிக்கிறது.

கிருஸ்துவ வழிபாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியாக முக்குணங்கள் வெளிப்படுகின்றன.

இவ்வாறு உலக மதங்கள் மூக்குணங்களை கொண்டிருக்கின்றன. எனினும் சில மதங்கள் முக்குண பேதமில்லாமல் நிர்குண பிரம்மத்தை கூறினாலும், அதை பின்பற்றுபவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திரிகுணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இறைவனில் இந்த முக்குண நிலை அந்த முக்குணத்துடனே பெருக்கம் அடைவதால் நவக்கிரகங்கள் உருவாகிறது (3X3=9). அந்த நவ நிலையுடன் மீண்டும் திரிகுண பெருக்கம் ஏற்படுவதால் நட்சத்திர மண்டலம் ஏற்படுகிறது (9X3=27).

நவக்கிரகங்களாக வெளிப்பட்ட திரிகுண தொடர்ச்சியாக நவ ரசங்கள், ரத்தினங்கள் என உலகியல் பொருட்கள் வகைப்படுத்தப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல ஏனைய சாஸ்திரங்கள் இந்த மூன்று நிலை சார்ந்தே இருக்கிறது.

கால நிலையில் கூட ஆறு காலங்கள் (ருது) முக்குணத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் இயங்குகிறது. காலை, இரவு மற்றும் சந்தியாக்காலம் என ஓர் நாள் மூன்று தன்மையை கொண்டதாக இருக்கிறது.

நம் உண்ணும் உணவு முறை காலை உணவு சாத்வீகத்தையும், மதிய உணவு ரஜோ குணத்தையும் இரவு உணவு தமோ குணத்தையும் காட்டுகிறது. உணவின் தன்மையில் எளிமையான உணவுகள் சாத்வீகத்தையும், மசாலா-கார உணவுகள் ரஜோ குணத்தையும், பழைய உணவுகள் மற்றும் அசைவம் தமோ குணத்தையும் வெளிப்படுத்துகிறது.

திரிகுண நிலை பற்றி போதிய அளவுக்கு தெளிவு பெற்றோம். இம்மூன்று குணத்தில் எத்தகைய குண நிலை சிறந்தது என முன்பு பார்த்தோம். சாத்வீக நிலை அனைவருக்கும் பொதுவானதாகவும் துன்பம் விளைவிக்காத நிலையும் கொண்டது என்றாலும் சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பது சாத்தியமா என சிந்திக்க வேண்டும்.

அப்படியானால் எந்த குணத்தில் இருந்தால் நல்லது?

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 3

       முக்குணத்தில் எந்த குணத்தில் இருந்தால் நல்லது என ஆன்மீகத்தின் ஆரம்ப நிலை சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படுவது இயல்பு. சாத்வீகமாக இருக்கவேண்டும் என பலர் கூறுவார்கள்.

பாலும் பழமும் சாத்வீக உணவு என அதை மட்டும் உண்டு, பிற உணவு வகைகளை உண்ணாமல் காலம் கடத்துபவர்கள் உண்டு. 

குணங்களில் இது நல்லது அது கெட்டது என பிரிவு படுத்துவது கூடாது. அவ்வாறு பிரித்து ஆராய்வது ரஜோ குணத்தில் வரும். சாத்வீகமே சிறந்தது என கூறும் பட்சத்தில் நாம் ரஜோ குணத்தில் இருப்போம். 

இப்படி ஒரு குணத்திலிருந்து மற்ற குணத்திற்கு மாற்றம் அடைவது என்பது மனித இயல்பாகவே இருக்கிறது.

இறைவன் முக்குணத்தையும் ஒன்றிணைந்த நிர்குணமாக இருக்கிறான் என்றேன் அல்லவா? நாம் மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மூன்று குணங்களும் சம விகிதத்தில் இருந்தால் நல்லது என்பதே திரிகுண ரஹஸ்யம்.

(RGB) சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்கள் அனைத்து நிறங்களையும் உருவாக்குகிறது. இதில் அனைத்து நிறமும் முழுமையாக இருந்தால் தோன்றுவது வெண்மை. எந்த நிறமும் இல்லாமல் இருந்தால் தோன்றுவது கருமை.

அது போல முக்குணமும் முழுமையாக இருந்தால் வெண்மை என்ற ஒளி நிலைக்கும், முக்குணமும் விட்டு கருமை என்ற சூன்ய நிலைக்கும் செல்லுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.

முழுமையான குணம் நோக்கி செல்லவே பல ஆன்மீக வழிமுறைகள் போதிக்கிறது. உதாரணமாக ஒருவர் இறைவனின் நாமத்தை ஜபம் செய்கிறார் என்றால் அவர் மன அளவில் சாத்வீகமாகவும், தான் செய்கிறோம் என்ற நினைப்பில் ரஜோ குணத்திலும், ஒரே இடத்தில் அமர்ந்து செய்வதால் தமோ குணத்திலும் வெளிப்பாட்டு முழுமையை நோக்கி பயணிக்கிறார்.

இது போல ஒவ்வொரு ஆன்மீக பயிற்சியும் இம்மூன்று நிலைகளையும் முழுமையான தன்மையில் கலந்து இறை நிலையை நோக்கி நம்மை செலுத்துகிறது.

நம் ஆன்மா என்ற வாகனம் முக்குணம் என்ற மூன்று சக்கரங்களின் உதவியால் இறைவனை சென்று அடைகிறது என கொண்டால் மூன்று சக்கரங்களும் சமமான வேகத்தில் சுழல வேண்டும். இதில் ஏதேனும் ஒரு சக்கரம் மட்டும்ச் சுழன்றால் போதும் என ஒதுக்கிவிட முடியாது அல்லவா? அதுபோல முக்குணங்களையும் ஒன்றாக்க முயலுங்கள் சரிவிகித இணைவே உங்களை ஒளி பொருந்திய நிலைக்கு இட்டுச்செல்லும்.

கீழ்கண்ட படத்தை பாருங்கள் இவ்வளவு நேரம் நான் கூறியதை எளிமை படுத்தும் வரைபடம் இது. கோணத்தின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மை அதிகரிக்க கோணம் தன் நிலையை இழக்கும். இதுவே மூன்று கோணமும் சமமாகி கோணத்தின் மையத்தில் குணம் குவிக்கப்பட்டால் தெளிவு பிறக்கும். தெய்வீகம் ஒளிரும்.

இறைவன் பிரபஞ்சத்தில் முழுமையான நிர்குணமாகவும், அதே சமயம் குணமாக மாற்றமடைந்து வடிவமான திரிகுணத்தில் அமர்ந்ததை திருமூலர் தன் மந்திரத்தில் விளக்குகிறார். 

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே
                                                      - 1713

இவ்வாறு திரிகுணமாய் இருப்பதை எவ்வாறு ஒன்றிணைந்து இறைநிலை அடைவது என்பதையும் மற்றொரு திருமந்திரத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
                                                                                     - 2406

திரிகுணத்தை பேச்சால் விளக்குவதைவிட நாம் உணர்ந்து வாழ்க்கை நிலையில் புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும். திரிகுணம் கடந்து நிர்குண நிலையை உணர இறையருளை வேண்டுவோம்.


- திரிகுண ரஹஸ்யம் முற்றியது

No comments:

Post a Comment