For Read Your Language click Translate

Follow by Email

20 July 2014

கௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்

A VERY RARE BOOK ON KAULI SASTRAbook kauli sastra


என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட அப்படியே பொலபொலவென்று நொறுங்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
சில நூல்கள் மிகவும் அரிய நூல்கள்.
கௌளி சாஸ்திர நூல் ஒன்று இருக்கிறது. சகாதேவர் அருளிச் செய்த கெவுளி சாஸ்திரம்.

ஏன் சகாதேவர்?
பஞ்சபாண்டவர்களில் ஜோதிடத்தில் மிகச் சிறந்த விற்பன்னராக விளங்கியவர் சகாதேவர். அவருடன் கூடப்பிறந்த நகுலன் அசுவ சாஸ்திரத்தில் விற்பன்னர்.
பாரத யுத்தைத் தொடங்குவதற்கு எதிராளியாகிய துரியோதனனுக்கே ஏற்ற நாளும் ஜெயிக்கக்கூடிய லக்கினமும் குறித்துக் கொடுத்தவர் சகாதேவர்.

ஜோதிட சாஸ்திரத்துக்குள் மட்டுமே அறுபத்துநான்கு உட்பிரிவுகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆரூடம், சரம், சோவி, கௌளி, தும்மல், சகுனம், பட்சி, பல்லி விழுதல், அருள்வாக்கு, உடுக்கு, பம்பை, குடுகுடுப்பை, அஞ்சனம், சொப்பனம், பறவைகளில் கூவல், சாமுத்ரிகா லட்சணம்......
இப்படி இருக்கின்றன. ஏதோ ஞாபகத்துக்கு வந்தவற்றைச் சொன்னேன்.
ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சகாதேவர் பாண்டித்தியம் பெற்றவராக இருந்திருப்பார் போலும். அவருடைய பெயரால் பல சோதிட நூல்கள் விளங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
இந்த கெவுளி சாஸ்திர நூல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டு அச்சில் வெளியாகிய நூல்.
ரொம்பவும் நுணுக்கமான பல விஷயங்கள் அடங்கியுள்ளன. எல்லாமே பாடல்களாக இருக்கின்றன.
கெவுளிகளிலேயே ஒவ்வொரு கிழமைக்கு உரிய ஜாதிகள் இருக்கின்றன.

திங்களுக்குச் சொல்லும் ஜாதி -


சங்கரன் அருளினாலே சாற்றுவேன் கெவுளி ஜாதி
பொங்கவே ராஜனாகும் பொருந்தியே ராஜவர்ணம்
தங்கிய முதுகிற் பத்து தழும்புபோல் கீறலுண்டு
இங்கித ஸ்த்ரீயும் தானும் இருப்பரே புசிப்புகொண்டு


செவ்வாய்க்கு -


நண்ணிய ராஜவாசம் நிறத்தினிற் சாம்பல்வர்ணம்
எண்ணிய எட்டுக்கீறல் முதுகினில் இருக்கும் பாரே
வண்மையாய் ஸ்த்ரீயும் தானும் வலமதாய்ப் போஜனங்களுண்டு
புண்ணியர்போலே தட்சணம் பொருந்தியே இருக்கும் பாரே


இப்படியே அத்தனை ஜாதிகளையும் வர்ணிக்கும் பாடல்கள்.
ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த திக்கிலிருந்து சொன்னால் என்னென்ன பலன் என்று பாடல்கள் சொல்கின்றன.
இந்த மாதிரியிலேயே நாற்பத்திரண்டு பாடல்கள் உண்டு.
பதினாறு திக்கிற்கும் பல்லி சொல்லல் என்னும் இன்னொரு பகுதியும் உண்டு.
அத்துடன் பல்லி விழும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆந்தைக்கு என்று ஒரு பகுதியையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆந்தை அலறலால் எல்லாமே கெடுதல்தான் என்று நம்புவார்கள். ஆனால் அதனால் நன்மையுமுண்டு.....

சிந்தையது களித்திடுவாய் ரெண்டே சீறல்
சீக்கிரமே நினைத்த பொருள் வந்துகூடும்
விந்தையுடன் சீறல்தான் மூன்றேயாகில்
வஞ்சியரை எப்படியும் புணர்வாயப்பா....

நல்லதும் நிறைய இருக்கிறது.
ஆந்தையென்றால் ஒருவகைப் பயமும் திகிலும் இருக்கும். ஆனால் ஆந்தை அலறலாலும் நன்மையுண்டு.
அருமையான அரிய நூல்.


அன்பர்களே,

 'கெவுளி சாஸ்திரம்' என்னும் சாஸ்திரத்தைப் பற்றிய
அந்த சாஸ்திரத்தின் சூத்திரங்களைப் பாடல்களாகக் கொடுத்திருக்கிறார்கள்.
சில விஷயங்கள் புதுமையாக நமக்குத் தெரிகின்றன.

முதலில் விநாயகர் துதியைப் பார்ப்போம் -

படியதனில் நாற்சதுரம் பாசித்தெண்டிக்காம்
வடிவு பதினாறு கோணம் மண்விண் - முடிவா
ஆகபதினெட்டுக் கறையுங் கெவுளிக்குப் பின்
பாகவரும் ஐங்கரனைப் பாடு.

பாடலில் ஓர் அரிய செய்தி அடங்கியுள்ளது.
பாடலைப் பிரித்துப் பார்ப்போம் -

படியதனில் நால் சதுரம் பாசித்து என் திக்காம் வடிவு பதுனாறு கோணம் மண்விண் முடிவாய்
ஆக பதினெட்டுக் கறையும் கெவுளிக்குப் பின்பாக வரும் ஐங்கரனைப் பாடு.

நால் சதுரம் - இதில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு இருக்கும். இவற்றை
Cardinal Directions என்பார்கள்.

எட்டுத் திக்கு என்பது வழக்கு. அஷ்ட திக்குப் பாலர்கள் என்ற எட்டுத்
திசைக்கும் உரிய காவலர்களாக எட்டு தேவர்களைச் சொல்வதுண்டு. கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு,
தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றைச் சொல்வார்கள்.
தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு ஆகியவற்றை அக்கினி மூலை, நிருதி
மூலை, வாயு மூலை, ஈசான்ய மூலை என்பார்கள். இவற்றில் ஈசான்ய மூலை என்பதை
கிராமிய வழக்கில் 'சனி மூலை' என்று தவறாகச் சொல்வதும் உண்டு.
சிங்கம்புணரி வட்டத்தில் தென்மேற்கை 'மருதெ மூலெ' என்பார்கள். மதுரை மூலை.
சிங்கம்புணரிக்கு அந்தத் திக்கில்தான் மதுரை இருக்கிறது.

தச மஹா பூதம் என்பவை எட்டுத் திக்கிலும் மேலும் கீழுமாகப் பத்து இருக்கும்.
முக்கிய யாகங்களைச் செய்யும்போது இந்த பூதங்களை சாந்தப் படுத்துவார்கள்.
இவற்றைக் கட்டுவதும் உண்டு.

ஆனால் கெவுளி சாஸ்திரத்தில் இன்னும் ஒரு நுணுக்கம் உண்டு.
எட்டுத் திக்கு என்பன இங்கிலீஷ் வழக்கில் North, North East, East, South East,
South South West, West, North West என்பன ஆகும்.

நம்முடைய திக்குகளைச் சொல்லும்போது நாம் கிழக்கிலிருந்து ஆரம்பிப்போம்.
மேற்கத்தியர்கள் வடக்கை வைத்துச் சொல்வார்கள். இந்த எட்டுத் திக்குகளைத் தவிற இன்னும் எட்டுத் திக்குகளையும் கணக்கிடுவார்கள்.

Mariners Chart, Navigational Charts-இல் இவற்றைப் பார்க்கலாம்.
உதாரணம் - வட மேற்குக்கும் வடக்குக்கும் நடுவில் ஒரு திக்கு இருக்கும்.
North by North West என்பார்கள். இதைச் சுருக்கி இப்படி NNW எழுதுவார்கள்.
இது உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இதே பெயரில் ஓர் அருமையான நாவலும் இருக்கிறது. அது சினிமாவாகவும் வெளிவந்தது.
இந்த மாதிரியான நாவல்களெல்லாம் தமிழில் கிடையாது. முயற்சிகூட யாரும்
செய்ததில்லை. சொன்னால் நம்ம மாடர்ன் இலக்கியவாதிகளுக்குக் கோபம் வரும்.

நம்முடைய கெவுளி சாஸ்திரத்தில் இந்த எட்டும் எட்டும் பதினாறு திக்குகளைக்
கணித்திருக்கிறார்கள். அதான் 'வடிவு பதினாறு கோணம்'.


'கோணம்'
Cardinal திசைகளுக்கு இடையில் இருப்பனவற்றை மூலை என்று நம்ம ஆட்கள்
குறிப்பிடுகிறார்கள். ஒரு மூலைக்கும் ஒரு கார்டினல் திசைக்கும் நடுவில்
இருப்பதை 'கோணம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.


கறை
பதினாறு கோணங்களுடன் விண் மண் என்னும் மேல், கீழ் ஆகியவற்றையும் சேர்த்து
மொத்தம் பதினெட்டு Directions-ஆக, கணித்திருக்கிறார்கள். இவற்றிற்குக் 'கறை' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.


பாருங்கள் ஒரு சிறிய பாடலில் இவ்வளவு பொருள்பதிந்த குறைவான எண்ணிக்கை
கொண்ட பாடல்கள்.

எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நேரங்களில் எந்தெந்த கறைகளில் கெவுளி
சொல்கிறது என்பதை சாஸ்திரம் ரொம்பவும் Cryptic-ஆக சொல்லியிருக்கிறது.
அவற்றிற்கு உரிய பலனையும் சொல்லியிருக்கிறது. ஆராய்ந்து கண்டுபிடித்துவிட்டால் எல்லாம் சுலபமே.


பல்லி சொன்னால் பலிக்குமா?

பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம். 

இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். 

தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். 

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். 

இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும். 

தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி யிருக்கும். இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும். 

இதே நெருதி திசை அடுத்த வீடு அல்லது அடுத்த மனையாக இருக்கு மானால் எதிர்பாராத விருந்து வரும் அல்லது சுபச்செய்திகள் வந்துசேரும். 

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். 

இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்கு மானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும். 

வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.


முத்து. இரத்தினம்

இந்துசமயம் பல்வேறு விதமான ஆன்மிக நம்பிக்கைகளைக் கொண்டது. இது பல சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொருவரின் உயிருடனும், உணர்வுகளுடனும் கலந்து காலம் காலமாக இருந்து வருகிற ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகள் ஏராளம்.

இவற்றில் அருள்வாக்கு மற்றும் ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பது பல்லி சொல் கேட்டல் என்பதாகும். இது இறைவனே நேரில் பல்லி உருவில் வந்து அருள்வாக்கு அளிப்பதாக நம்புகிறார்கள்.
பல்லி என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இடம், இடையர் வாழும் ஊர், உடும்பு, கெவுளி, சிற்றூர், பலுகுக்கட்டை, பெரிய பல்லுடையவள், சிறு பிராணி வகை, பூடு வகை, கிராமத்தின் அரைக்கூறு, கற்சிலைப் புள், வெற்றிலைக் கணுவில் அரும்பும் குருத்து, அண்டகம், கோகிலம், புள்ளி, முசலி – என்று பல பொருள்கள் உண்டு என்று தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.
ஓரறிவு உயிர் முதற்கொண்டு ஆறறிவு உயிர் வரையுள்ள அனைத்து உயிர்களையும் படைத்துக் காத்து ரட்சிப்பவன் இறைவன். ஒவ்வொரு உயிரின் மூலமாக அருள்புரிந்து மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறான். இதன் பொருட்டே உபநிடதங்களும், சாஸ்திரங்களும், ஆகமங்களும் தோன்றின. பட்சி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம், பல்லி சாஸ்திரம் அல்லது கௌளி சாஸ்திரம் என்பதெல்லாம் அவ்வாறு தோன்றியதாகக் கருதலாம்.
பல்லிகள், வீடுகளையும், ஆலயங்களையும் இருப்பிடமாகக் கொண்டு இனிதே வாழ்கின்றன. பெரும்பாலும் பல்லிகள் ஒலியெழுப்புவதில்லை. மனித நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, நிமித்தங்கள் அல்லது சகுனங்கள் மொழிகின்றன. புராணங்களில் பல்லிகள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க, இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாகப் பாடம் பயின்று வந்தனர். குருவுக்குச் சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து குரு வார்த்தைக்கு மறு வார்த்தையின்றித் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூசைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள்.
ஒரு நாள் இருவரும் தீர்த்தப் பாத்திரத்தை மூடி வைக்காமல் திறந்தபடியே வைத்துவிட்டார்கள். பல்லியொன்று அந்தத் தீர்த்தப் பாத்திரத்திற்குள் விழுந்து உயிரோடு தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஹேமனும், சுக்லனும் பூஜா திரவியங்களைக் குருவிடம் அப்படியே கொடுத்தனர். கௌதம ரிஷியும் பாத்திரத்தைத் தொட்டவுடன் அதிலிருந்த பல்லி தாவிக் குதித்து ஓடியது. அதைக் கண்டு கோபம் கொண்ட ரிஷி, பணியில் கவனமில்லாமல் இருந்த அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.
இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினர். மேலும் சாபம் நீங்கப் பிராயச்சித்தம் கோரியும் நின்றனர். இந்திரன் யானையாகி வரதனைத் தரிசிக்க அத்திகிரிக்கு வருவான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்று விமோசனத்துக்கு வழி கூறினார் ரிஷி.
ஹேமனும், சுக்லனும் பல்லியுருவைப் பெற்றுக் காஞ்சிபுரத்திலுள்ள அத்திகிரி க்ஷேத்திரத்தில் பல்லி உருவில் வசித்தனர். முனிவர் சொன்னபடி நடக்கவே பல்லி உருவம் நீங்கப் பெற்று வரதராஜப் பெருமானைச் சேவித்து நற்கதி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியைக் குறித்து காஞ்சி வரதராஜர் கோயில் பிரகாரத்தின் வடகிழக்கு முலையில் கச்சிவாய்த்தான் மண்டபம் என்ற ஒரு நாற்கால் மண்டபத்தை அடுத்து வைய மாளிகைப் பல்லி என்று பேர் பெற்று, இரண்டு பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேல்தளத்தில் ஒன்று தங்கத்திலும் ஒன்று வெள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறார்கள். ஏணி வழியாக ஏறிக் கைகளாலும் வஸ்திரத்தாலும் அந்தப் பல்லியைத் தொட்டு வரதனை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சி காலங்காலமாகப் பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. இங்குள்ள ஆண்டாள் சந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய சுவரில் மூன்றடி நீளமுள்ள பெரிய பல்லி ஒன்றின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இதை மோட்சப் பல்லி என்று அழைக்கிறார்கள். பக்தர்கள் இதைத் தொட்டுத் தடவியும், திருவிளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். முக்கியமாக ஊர்வன ஜந்துக்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். நோய் தீர்க்கும் பல்லியாக வழிபடுகிறார்கள்.
இவ்வாறு இரு தலங்களில் உள்ள பல்லிகள் பக்தர்களின் வழிபாட்டுக்குரியனவாகத் திகழ்கின்றன. இதுபோன்று பல்லியை வழிபாடு செய்வது வேறெங்கும் இல்லை எனத் தெரிகிறது.
பல்லி சொல் கேட்டல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
“ஓங்கிய நல்இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி…”
இது அகநானூறு, 9&வது செய்யுளில் கல்லாடனார் என்ற புலவர் பாடியது. இதன்பொருள் : சிறப்புற உயர்ந்த நல்ல வீட்டில் ஓரிடத்தில் நின்று தலைவன் வருகையை நினைந்து நன்னிமித்தத்தைக் குறிக்கும்படியாகப் பக்கத்தில் பல்லி சொல்லும் போதெல்லாம் அதனைப் போற்றி வாழ்த்தினேன் (பல்லி சொல்லுந் தோறும் வாழ்த்துதல் மரபு) அப்பல்லியின் ஒலியைக் கேட்டவண்ணம் வீட்டில் இருந்தாள். அவளைத் தலைவனின் மனம் சென்றடைந்தது என்பதாம்.
“பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்”
இது அகநானூறு, 88-வது செய்யுளில் ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது. பொருள் : பிளவுபட்ட வாயையுடைய பல்லியானது நன்னிமித்தமாக ஒலித்ததை ஆராய வேண்டும் என்பதாம்.
“பதுக்கைத் தாய செதுக்கை நீழற்
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ் சிறு செந்நாவின்
மணியோர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே”
                                                    – அகநானூறு – 151-வது செய்யுள்.
இச்செய்யுளைப் பாடியவர் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவராவார். பொருள் : புல்லும் புதரும் கல்லும் முள்ளும் நிறைந்து வழியும் கடினமான காட்டு வழியில் செல்வோருக்கும் உறுவது பற்றிக் கூறும் செவ்விய சிறுநாவைக் கொண்ட பல்லியின் சொல் என்பதாம்.
“இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்”
                                                       - நற்றிணை &246&வது பாடல்.
இப்பாடலைக் கூறியவர் காப்பியஞ்சேந்தனார் என்ற புலவராவார். பொருள் : பார்க்குமிடம் எங்கும் இனியன தோன்றும். நெடிய சுவரிலுள்ள பல்லியும் நம் பக்கத்திலிருந்து ஒலி செய்து நன்னிமித்தம் தெரிவிக்கும் என்பதாம்.
“இணை நலமுடைய கானஞ் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நம் எழில் உண்கணும் ஆடுமால் இடனே”
                                                                  – கலித்தொகை 11-வது பாடல்.
இப்பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவராவார். பொருள் : அருள்வாய்ந்த செயல்கள் நிகழும் காட்டிற்கு அவர் சென்றார் ஆதலால் நம் புனைந்த நலத்தைக் கெடுக்க மாட்டார். அதற்குக் காரணம் என்னவென்றால் நம் இல்லத்தில் உள்ள பல்லி அவர் வருகைக்கு ஏற்றவாறு பொருந்தி ஒலித்தது. நல்ல சகுனம் என்பதை நல்ல அழகையுடைய என் கண்ணும் இடப்பக்கத்தில் துடிக்கிறது என்பதாம்.
மேலும் நோய் நீங்கும் பொருட்டு வைத்தியம் பார்க்கச் செல்ல யோசிக்கும் போதும், திருத்தல யாத்திரை மேற்கொள்ள முனையும் போதும், வீடுகட்ட, திருமணப் பேச்சுப் பேச, மற்ற சுபகாரியங்கள் பற்றிப் பேசும் போதும் பல்லி சொல்லும் சொல்லைக் கவனமுடன் கேட்டு நம்பிக்கையுடன் பின்பற்றி நடப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பல்லி சொல்லும் ராசிபலன் ஓர் அற்புதமான பாடல் மூலம் சொல்லப்படுகிறது.
“எழுவாய் மேஷம் படைபூசல்
இடவங் கடகங் குடிபோக்கும்
நழுவாய் மிதுன நல்வசனம்
நண்டு விழுந்து களிப்பாகும்
கழிவே யாகுந் தனஞ் சிங்கம்
கன்னி பழங்காய் வெற்றிலையாம்
தொழுதே தூதன் றுலமாகும்
தூங்கு தேள் பொன் பெண் வருத்தே
வில்லில் விருந்து மிகவுண்டு
வேண்டும் மகரம் விண்ணமுதாம்
நல்ல கும்ப நோயுண்டாம்
நாட்டு மீனங் களியாகும்
அல்லிற் சிறந்த குழன்மடவா
யறியச் சொன்னோ மன்னிசையாஞ்
சொல்லும் பல்லி கொடி சூரன்
தும்ம லென்றே யறிந்திடவே”
இப்பாடலில் மேஷம், இடவம், கடகம், மிதுனம், நண்டு, சிங்கம், கன்னி, தேள், வில், மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரு ராசிகளும் அவற்றுடன் பல்லி சொல்லுக்குப் பலன்களும் கூறப்பட்டுள்ளன.
இப்பாடல் யாரால் எப்பொழுது இயற்றப்பட்டது என்ற விபரம் கிடைக்கவில்லை. கௌளி சாஸ்திரம் தோன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட பாடலாகக் கருதலாம்.
பல்லி சொல்லும் பதினாறு பலன்கள் : இது பல்லி தொடர்ந்து ஒன்று முதல் பதினாறு முறை சொல்லும் சொல்லுக்குரிய பலன்களைக் குறிக்கும் பாடலாகும்.
“அருக்கன் மேற் பயநாச மிரண்டிற் சாவு
அகன்ற வர்பின் மீண்டிடுவார் மூன்றே யாகில்
உருக்கமுள்ள சாவதனைக் கேட்க நாலு
ஒரு சண்டை யுண்டைந்தா முறவாமாறு
விரிதலையு மழுகுரலு மழையு நோயு
மென் மேலுந் துக்க முண்டாகு மேழு
தரித்திடு பூச்சந்தனமு மணமும் கொண்டு
தகுதியுள்ளோர் கூடி வரலாகு மெட்டே”
“சித்தமிக மகிழ்ச்சியுண்டா நாலோ டைந்து
தீதாகவே யுரைக்குந் தெரியும் பத்து
அத்தமிசை யாத்திரை காணா றோடைநது
அக மகிழ்ச்சிக் கலியாணமா றோடாறு
பத்தி வருங் காணிக்கை பதிமூன்றிற்குப்
பறந்துவரு மிழவோலை பதினாலுக்கு
மெத்தவரு முறவின் முறை யேழுமெட்டும்
மென்மேலும் போகமுண்டாம் பதினாறுக்கே”
இப்பாடலில் பல்லி ஒருமுறை ஒலி எழுப்பினால் என்ன பலன். இரண்டு முறை ஒலித்தால் என்ன பலன். இப்படி வரிசைக் கிரமமாக எண்ணிக்கைப்படி பதினாறு முறை ஒலித்தால் என்ன பலன் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இப்பாடலும் யாரால் எப்போது இயற்றப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. இப்பாடல்கள் பழம்பெரும் நூலான அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு பல்லி சொல் குறித்த பழம் பாடல்கள் அதன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை வலியுறுத்திக் கூறுகின்றன. சங்க காலம் தொட்டே மனிதகுலம் பல்லியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே வந்திருக்கிறது என்பதை உறுதியுடன் நம்பலாம்.
பழமொழிகள்

பல்லி குறித்துப் பல பழமொழிகளும் உள்ளன. இல்லை இல்லை என்ற இடத்தில் பல்லியும் சேராது என்றும், பல்லி சொல்லுக்குப் பலனுண்டு என்றும், கௌளி சொன்னா கடவுள் சொன்ன மாதிரி என்றும், ஈசான்யத்தில் பல்லி சொன்னா ஈசுவரனே சொன்ன மாதிரி என்றும் மொழியப்படும் சொலவடைகள் மக்களிடையே வழங்கப்படுகின்றன. ஈசான்ய மூலையில் பல்லி சொல்வது மிகவும் உத்தமமானது என்ற நம்பிக்கையும் மக்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது.
வீட்டில் பல்லிகள் நிறைந்து காணப்பட்டால், மயில் தோகைகளை அங்கங்கே செருகி வைத்தால், அவற்றின் நடமாட்டத்தைக் குறைக்கலாமாம்.

அன்புடன்

ஜெயபாரதி