For Read Your Language click Translate

Follow by Email

17 June 2014

இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்-`அம்போலி!!!

உலகின் எந்த அருவியோடும் போட்டி போடக்கூடிய வகையில் பேரழகு வாய்ந்த அருவிகள் இந்தியாவில் ஏராளம் உள்ளன.இந்த அருவிகளை மழைக்காலங்களில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.அதேபோல மழைக்காலங்களில் சுற்றிப்பார்க்க இந்தியாவில் எக்கச்சக்கமான இடங்கள் உள்ளன. அவற்றில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்களாக கருதப்படும் சில இடங்களை இங்கு காண்போம்.


அம்போலி மஹாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்றான அம்போலி, சிந்துதுர்க் மாவட்டத்தில் சஹயாத்திரி மலைத்தொடரின் மீது அமைந்துள்ளது.அம்போலி – வரலாறு பேசும் கோட்டைகளும்! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளும்!

அம்போலி நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைஸ்தலமாகும். இது சிந்துதுர்க் மாவட்டத்தில் சஹயாத்திரி மலைத்தொடரின் மீது அமைந்துள்ளது
அம்போலி ஏரி - பயணிகளுக்காக காத்திருக்கும் படகு
Image source: commons.wikimedia

 

அம்போலி - வரலாற்றுப்பின்னணி

அம்போலி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது படையினர் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குப்பின் இது ஒரு மலைவாசஸ்தலமாக 1880ம் ஆண்டுகளிலிருந்து அறியப்பட்டுள்ளது.
உள்ளூர் சாவந்த்வாடி மக்கள் இம்மலை ஸ்தலத்தின் அருமையை ஆங்கிலேயருக்கு முன்பே அறிந்திருக்கின்றனர். இருப்பினும் மழைக்காலத்தில் இந்த ஸ்தலம் மிகவும் ஈரத்துடன் காணபட்டதால் ஆங்கிலேயர்கள் இதை விடுத்து மாத்தேரான் மலைஸ்தலத்தை தங்களுக்கு உகந்த கோடை மலைவாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர். இதனால் இந்த அம்போலி நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் அவ்வளவாக பரபரப்பாக அறியப்படாத மலைநகரமாக இருந்துள்ளது.

புராதன மலை நகரம்

அம்போலி மலைநகரம் வார இறுதி சிற்றுலாவுக்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். உல்லாச பொழுதுபோக்குக்கும் இது மிகவும் ஏற்றது. நகரவாழ்க்கையின் அதிவேக இயக்கத்திலிருந்து சற்றே மாறி இயற்கை சூழலில் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த ஸ்தலம் ஏற்றது.
அம்போலி மலைநகரம் பல அழகான அருவிகளைக்கொண்டுள்ளது. ஷிர்காவ்ங்கர் அருவி, மஹாதேவ் அருவி மற்றும் நாகட்டா அருவி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. நாகட்ட அருவிப்பகுதி சிற்றுலாவுக்கான ஒரு சிறந்த இடமாக விளங்குகின்றது.
ஹிரண்யகேஷி நீர்வீழ்ச்சி அருகில் அதன் குகை வாசலில் ஒரு பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவனின் அருள் பெற்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு சுவாரசியமான அம்சம் ஹிரண்ய கேஷி எனும் பெயர் பார்வதி தேவியை குறிப்பிடுவது என்பதாகும்.
அம்போலி மலைநகரம் பல மலைக்காட்சி தளங்களையும் கொண்டுள்ளது. சீ வியூ பாயிண்ட், கவேல்சாத் பாயிண்ட்,   பரீக்‌ஷீத் பாயிண்ட்  மற்றும் மஹாதேவ்காட் பாயிண்ட் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இந்த எல்லா  மலைக்காட்சி தளங்களும் அரபிக்கடல் மற்றும் கொங்கணக்கடற்கரையின் அழகை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்க வசதியாக  அமைந்துள்ளன.

எப்போது எப்படி செல்லலாம்

உயரத்தில் அமைந்துள்ள இந்த அம்போலி மலைநகரம் கோடைக்காலத்தில் குளிர்ச்சியை வழங்குவதால் வெப்பத்திலிருந்து தப்பிக்க கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.
இருப்பினும் மே மாதத்தின்போது இங்கு உஷ்ணம் அதிகமாயிருப்பதால் அம்மாதத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளாதிருப்பது உசிதம். மழைக்காலத்தில் இப்பிரதேசம் குளுமையாய் 20 டிகிரி வெப்பநிலையுடன் காட்சியளிப்பதால் அப்போதும் வருகை தரலாம்.
இருந்தாலும் இனிமையான சூழலைக்கொண்டிருக்கும் குளிர்காலம் இங்கு விஜயம் செய்வதற்கு சிறந்த பருவமாய் கருதப்படுகிறது.
சாவந்த்வாடி மற்றும் கோவா நகரங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால் விமானம், ரயில், மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக எளிதில் இந்த அம்போலி மலைநகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். உள்நாட்டு விமான நிலையமான கோவா 70 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது.
ரயில் பயணம் எனில் சாவந்த்வாடி ரயில் நிலையம் அருகில் வசதியாக உள்ளது. அங்கிருந்து டாக்சியில் அம்போலி நகரத்துக்கு செல்லலாம். முறையே 493 கி.மீ மற்றும் 343 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மும்பை மற்றும் புனே நகரங்களிலிருந்து அதிக பேருந்து வசதிகள் இந்த அம்போலி நகரத்துக்கு வருவதற்கு கிடைக்கின்றன.
ஒரு சிறந்த இயற்கை சூழல் பிரதேசமான இங்கு பலவகை தாவர இனங்களும் காட்டுயிர்களும் மிகுதியாக காணப்படுகின்றன. கொஞ்சம் தனிமை வேண்டும் என்று கெஞ்சும் உள்ளங்களுக்கு இந்த அம்போலியை நிச்சயமாக சிபாரிசு செய்யலாம்.
அடர்த்தியான காடுகளுடன் குடை விரித்தாற்போல் காட்சியளிக்கும் மலைகளும், மாசற்ற தூய்மையான குளுமையான காற்றும் இந்த அம்போலி மலைநகரத்தை சொர்க்கம் போல் ஆக்குகின்றன.
இதன் அமைதியான இயற்கை எழிலுக்காகவே இது ‘கொங்கணப்பகுதியின் மஹாபலேஷ்வர்’ என்று பெருமையுடன் அழைக்கபடுகிறதென்றால் அதில் காரணம் இல்லாமல் இல்லை.