For Read Your Language click Translate

30 June 2014

எகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு கருவிகள்: தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு




திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் கிராமம், பழங்காலத் தில் இரும்பு கருவிகள் உற்பத்தி மையமாக இருந்துள்ளதை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இங்கிருந்து, எகிப்து பிரமிடுகளுக்கு இரும்புக் கருவிகள் கொண்டு சென்றதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.

கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை சார்பில், திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழங்கால வரலாற்று சான்றுகள், பொருட்கள் கிடைத்து உள்ளன. இக்கிராமத்தின் ஒரு பகுதி, 'கருமண் பள்ளம்' என, அழைக்கப்படுகிறது.


நாணயங்கள்:
இங்கு இரும்பு தாதுக்கள் அதிகளவு இருந்ததும், வெட்டி எடுக்கப்பட்டதும், தெரியவந்துள்ளது. 'கொல்லன் தோட்டம்' என்ற பகுதியில், இரும்பு கழிவு அதிக அளவில் உள்ளது. இரும்பைக் கொண்டு, போர் மற்றும் வேளாண் கருவிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு கிடைத்துள்ள மண்பாண்ட சிதறல்கள், சிவப்பு வண்ண மண்கல பண்பாடு இருந்துள்ளதை காட்டுகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்த போது, மருந்து சாத்துவதற்காக, மூலவர் சிலை அகற்றப்பட்டது. சிலையின் அடியில், பழங்கால பொற்காசுகள், நான்கு நவரத்தின கற்கள், இரு செப்பு நாணயங்கள், 16 பிரிட்டிஷ் நாணயங்கள், நவரத்தின கற்கள், யந்திர செப்பு தகடு ஆகியவை இருந்தன. இவை, 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகவும், விஜய நகர பேரரசு ஆண்ட காலத்திய நாணயங்கள், 'வீரராய பொற்காசு' என, அழைக்கப்பட்டதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


அபூர்வமானது:
இதுகுறித்து, ஆய்வாளர் ரவி கூறியதாவது: இடுவாய் நகரம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கியதும், மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததும், ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. கொங்கு பெருவழியில், கிளை வழி ஒன்று உள்ளதும், போக்குவரத்து அதிகம் இருந்ததால், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இது, ராணி மங்கம்மா ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. குப்தர்களின் தாக்கமும் இதில் உள்ளது. அதேபோல், 3000 ஆண்டு களுக்கு முந்தைய, சாம்பல் மேடு பகுதியும், 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுவது, அபூர்வமான ஒன்று. பழங்காலத்தில், ஆயிரக்கணக்கான மாடுகளின் சாணங்களை ஒரே இடத்தில் குவித்து, அவற்றை தீ மூட்டி, மாடுகளை அதன் மேல் நடக்கவிட்டு உள்ளனர். கால்நடைகளை, நோய்கள் தாக்காமல் இருக்க, இது மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது, குண்டம் திருவிழா, அதன் அடிப்படையிலேயே நடக்கிறது. இரும்பு, எக்கு கருவிகள் தயாரிப்பில், சிறந்த தொழில் நுட்பம் இங்கிருந்துள்ளது. எகிப்து பிரமிடுகளுக்கு, இங்கிருந்து இரும்பு கொண்டு சென்றதாக, வரலாற்று தகவல் உள்ளது. இங்கு கிடைத்துள்ள இரும்பு கசடு, இரும்பு கால பண்பாட்டை நினைவுபடுத்துகின்றது. பொதுமக்களின் வழங்காற்று பாடலில், ஒளி நகரம் என்ற பெயர் வழக்கில் இருந்தது அறியப்படுகிறது. உலைப்பட்டறைகளில் இருந்து வரும் ஒளி வீச்சைக்கொண்டும், இரும்பு உருக்கும் தொழில், இரவு பகலாக நடந்ததால், சம்மட்டியில் ஒலி, இடி முழக்கத்தை போல் இருந்ததால், 'இடிவாய்' என்ற பெயர் மருவி, இடுவாய் என, காரணப்பெயர் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


Click Here




No comments:

Post a Comment