For Read Your Language click Translate

10 May 2014

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான விருட்சத்தின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் -1

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகை விருட்சத்தின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்.


No comments:

Post a Comment