For Read Your Language click Translate

10 May 2014

சதுரகிரி - சஞ்சீவி மூலிகை, கற்பகதரு! விருட்சம்

சதுரகிரி - ஆச்சிரமங்கள், சஞ்சீவி மூலிகை, கற்பகதரு!


கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும் தொடர்கிறது. சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களின் ஊடாக பொதிந்திருக்கும் தகவல்களை தனியே பிரித்தெடுத்து உரைநடையாக பதிந்து வருகிறேன். எனவே பாடல்களுடன் தகவல்களை பகிர்வதில் உள்ள சிரமத்தினை(தட்டச்சு செய்வது) புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எதிர்காலத்தில் சதுரகிரி பற்றிய ஆய்வு நூலொன்று எழுதிடும் திட்டமிருக்கிறது, அப்போது விரிவாக பாடல்களுடன் எழுதிட முயற்சிக்கிறேன்.

வாருங்கள், கோரக்கரின் வழிகாட்டுதலுடன் அகத்தியரின் கும்ப மலை குகையில் இருந்து பயணத்தை தொட்ர்வோம்...

குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.

அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.

இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

நன்றி  
தோழி

No comments:

Post a Comment