For Read Your Language click Translate

31 May 2014

மணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…


அண்மையில் மரங்கள்: நினைவிலும் புனைவிலும் எனும் நூலினை படித்தேன். தாம் கண்டு வியந்த, தம் வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி பல எழுத்தாளார்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். தொகுத்தவர் மதுமிதா. இந்நூலில் அவர் “மனோரஞ்சிதம்” எனும் கட்டுரையையும் எழுதியுள்ளார். இந்த நூலைப் படிக்கும் போது, மனிதனின் வாழ்வில் மரங்கள் பல வகையில், பல நிலைகளில் நிறைந்திருக்கிறது என்பது புலனாகும்.
இந்நூலில் இருந்த பல கட்டுரைகள் பிடித்திருந்தாலும், என்னைக் ஈர்த்தது “மனோரஞ்சிதம்”. இதைப்படித்தவுடன் இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மதுமிதாவின் விளக்கத்தை படித்த போது இது மரமல்ல, ஒரு வகை புதர் அல்லது கொடி என்பது புரிந்தது. இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க அப்பாவிடமும், பெரியப்பாவிடமும் மனோரஞ்சிதம் பற்றி கேட்டேன்.
உடனே அப்பா, மோகன் மாமாவிடம் அதை சொல்லியிருகிறார். தஞ்சாவூரில் இருக்கும் மோகன் மாமாவுக்கு பல வித தாவரங்களை வளர்ப்பதில் அதீத ஆர்வம். நான் சிறு வயதில் தஞ்சையில் இருந்த போது ஹவுசிங் யூனிட்டில் இருந்த விசாலமான தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்திருக்கும் அவரது வீட்டிற்குப் போவதுண்டு. அழகான சிறிய ஓட்டு வீடு. சுற்றிலும் பல பூஞ்செடிகள், கொடிகள், மரங்கள், நிறைந்த அழகான தோட்டம். அவர் தோட்டக்கலையில் வல்லவர். அவரிடன் இச்செடி பற்றி கேட்டவுடனேயே அப்பாவை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் கொடுத்து நட்டு வைத்த மனோரஞ்சிதத்தை காட்டியிருக்கிறார். அப்பாவும் அவரது கேமிராவில் அத்தாவரத்தினை படமெடுத்து மின்னஞ்சலில் அனுப்பினார்.
மனோரஞ்சிதம் செடியும் இளம் மலர்: Photos M Panchapakesan
மனோரஞ்சிதம் செடியும், இளம் மலரும், காய்த்திரளும் : Photos: M. Panchapakesan
மரங்கள் நூலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சென்னையில் வசிக்கும் எனது கார்த்தி பெரியப்பா. அண்மையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது எதிர்வீட்டில் மனோரஞ்சிதம் இருப்பதாகச் சொல்லி என்னை அங்கு கூட்டிச் சென்றார். மனோரஞ்சித்தை பார்க்க/நுகர வேண்டுமென எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது அன்று நிறைவேறியது.
மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). சிறியதாய் இருக்கும் போது புதர்செடி போலவும் வளர வளர மேலேறும் கொடியாகப் போகும். இதன் தண்டில் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக அமைந்திருக்கும் (Alternate leaves). மலரின் புற இதழ்கள் மூன்று (புல்லி வட்டம்- sepals). இவை ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இல்லாமல் தனித்தனியாக அவற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு – தொடு இதழ் ஒழுங்கில் – (Valvate) அமைந்திருக்கும். அகவிதழ்கள் (அல்லி வட்டம் – Petals) ஆறு. உள் புறம் மூன்றும் வெளிப்பக்கம் மூன்றும் வட்டமைவில் (whorled)இருக்கும். கொக்கி போன்று வளைந்த காம்பில் பூ அமைந்திருக்கும்.
மனோரஞ்சிதம் மலர்
மனோரஞ்சிதம் மலர் Photo: P. Jeganathan
இந்தப்பூவை பார்க்கும் போது எனக்கு இட்லித் தட்டுகளின் அமைவுதான் ஞாபகத்திற்கு வந்தது. இட்லித் தட்டை, மாவு ஊற்றியபின் ஒன்றன் மேல் ஒன்று வைக்கும் போது தட்டில் உள்ள குழியின் அடிப்புறம் அதன் கீழேயுள்ள குழியின் மேலே பட்டுவிடாத வண்ணம் வைப்போம் அல்லவா? அதுபோலத்தான் மனோரஞ்சிதத்தின் அகவிதழ் அமைவும். மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உள்ளே ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும்.
மனோரஞ்சிதம் - காய்த்திரள்
மனோரஞ்சிதம் – காய்த்திரள் Photo: P. Jeganathan
மனோரஞ்சிதம் - கனியும் விதையும்
மனோரஞ்சிதம் – கனியும் விதையும் Photo: P. Jeganathan
மனோரஞ்சித மலர் நறுமணம் மிகுந்தது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது. எனினும் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் முதன் முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை, மனோரஞ்சிதத்தைத் தவிர. ஆகவே எனக்கு நினைவில் உள்ளது மனோரஞ்சிதத்தின் மணம் தான். சிறுவயதில் சில வாசனையுள்ள பென்சில் அழிப்பான்களை – சென்ட் (ல)ரப்பர் – (eraser) வைத்துக்கொண்டு இப்படி நாங்கள் விளையாடுவதுண்டு. அதுபோலத்தான் இதுவும். மனோரஞ்சித பூவிதழைக் கொண்டு சீனர்கள் தேனீர் தயாரிப்பதாகவும் தெரிகிறது. மனோரஞ்சிதப் பழமும் நறுமணம் வீசும். இதனால் மணிப்பூரியில் மனோரஞ்சிதத்தின் பெயர் சீனி சம்ப்ரா (Chini Champra), அதாவது இனிக்கும் எலுமிச்சை என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Artabotrys hexapetalus  அதாவது Artabotrys = கொக்கி போன்ற அமைப்புள்ள, hexapetalus = ஆறு பூவிதழ்கள் கொண்ட (Gledhill 2008).
கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர்
கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர் Photo: P. Jeganathan
மனோரஞ்சிதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சில தாவரவியல் கையேடுகளை படித்தபோது இது பெரும்பாலும் இதன் மலருக்காகவே வீடுகளில் வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது (Matthew 1999, Pallithanam 2001). Flowers of India எனும் இணையத்தளம் இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது என்கிற தகவலை அளிக்கிறது. எனினும் எந்த நூலிலுமே இத்தாவரம் எவ்வகையான வனப்பகுதியில் தென்படுகிறது என்பதைப் பற்றிய விவரம் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.
கேம்பில் (J.S.Gamble) தனது நூலில் இத்தாவரம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் வீட்டுத் தோட்டங்களில் இதன் மலருக்காக வளர்க்கப்படுவதாகவும், தாவரவியலாளர் George King ன் கூற்றுப்படி இத்தாவரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் இயற்கையாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Gamble 1995). மனோரஞ்சித வகையைச் சேர்ந்த மற்றுமொறு தாவரமும் மேற்குத்தொடர்ச்சிமலைகளிலும், இலங்கையிலும் தென்படுகிறது (Gamble 1995) இதன் ஆங்கிலப் பெயர் Ceylon Green Champa (Artabotrys zeylanicus).
மரங்கள் நூலின் தொகுப்பாசிரியர் மதுமிதா மனோரஞ்சிதம் முழுவதுமாக அற்றுபோய் விட்டதோ என வருத்தம் தெரிவித்திருந்தார். இனி அவருக்கு அந்தக் கவலை வேண்டாம். மனோரஞ்சிதம் நிச்சயமாக பலரது வீடுகளில் மணம் வீசிக் கொண்டிருக்கும். ஆனால் என் மனம் இப்போது வேறொன்றை அறிந்து கொள்ளத் துடிக்கிறது. மனோரஞ்சிதம் இந்தியாவில் இயற்கையாக வனப்பகுதிகளில் வளர்ந்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? எனில் எங்கே? அறிந்தவர் யாரேனும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
குறிப்பெடுக்க உதவிய ஆதாரங்கள்:
Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh. Dehra Dun, India.
Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York.
Matthew, K.M. (1999). The flora of the Palni hills, South India (Part one). The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.
Pallithanam, J.M. (2001). A Pocket lora of the Sirumalai hills, South India. The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.
சொல்வனம் இணைய இதழில் (இதழ் 88) 29-6-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=26881
Written by P Jeganathan
July 6, 2013 at 12:27 am
Posted in Books, Plants
Tagged with

நம்மைச் சுற்றி காட்டுயிர் – புத்தக விமர்சனம்

தமிழில் சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த எழுத்துக்களை பல காலமாக படைத்து வரும் அனுபவம் மிக்க இருவரின் கூட்டுமுயற்சியில் விளைந்தது இப்புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தியடோர் பாஸ்கரன், The Hindu தினசரியின் குழைந்தைகளுக்கான இணைப்பான Young World ல் எழுதிய 11 சிறு கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டதே இந்நூல். தமிழில் மொழிபெயர்த்தது ஆதி. வள்ளியப்பன். இவர் தமிழில் சூழியல் சார்ந்த பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிவருபவர். காட்டுயிர்களைப் பற்றி மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளைப் பற்றியும் சில கட்டுரைகளை இந்நூலில் காணலாம். பல நூல்களை எழுதியிருந்தாலும் தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியவைகளை ஏன் அவரே தமிழாக்கம் செய்து இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காகவே தமிழில் பல கட்டுரைகளை எழுதிவருபவர். சிறுவர்களுக்கான ‘துளிர்’ அறிவியல் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான Books for Children ன் வெளியீடு. இதனாலேயே ஆதி வள்ளியப்பனின் பங்கை உணரலாம்.
குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியல், காட்டுயிர் சார்ந்த புத்தகங்களில் (உதாரணமாக ஆதிவள்ளியப்பனின் “மனிதர்க்கு தோழனடி”, ரேவதியின் “குருவி நடக்குமா” முதலிய அறிவியல் கதைகள்) யாவிலும் சொல்லப்படும் கருத்துகள் சிறுகதை அல்லது உரைநடை வடிவில் இருக்கும். இவை 10-15 வயதுள்ள குழந்தைகளுக்கானது எனலாம். ஆனால் இப்புத்தகத்தில் கட்டுரைகள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே பதினைந்து வயது குழந்தைகள் முதல், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்குமானது இப்புத்தகம்.
அழகிய, பொருத்தமான, வண்ண வண்ண புகைப்படங்களும், ஓவியங்களும் எழுதப்பட்ட கருத்துகளை, விளக்கங்களை வாசகருக்கும் எளிதில் தெளிவுபடுத்தும். அதிலும் குழந்தைகள் புத்தகங்களில் வண்ண ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகம் இருக்கவேண்டும் என்பது என் அவா. ஆனால் இதில், ஒரு சில புகைப்படங்களை மட்டுமே உள்ளது. அட்டைப்படத்தில் அழகான ஆண் வெளிமானின் (ஆங்கிலத்தில் Blackbuck ஆனால் ஓரிடத்தில் Black buck என இரு வார்த்தைகளாக்கப்பட்டிருந்தது) புகைப்படமும், உள்ளே இரு இடங்களில் பட்டைத்தலை வாத்தின் (புகைப்படக்காரர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை) கருப்பு வெள்ளை படமும் தான் இருக்கிறது. பல கோட்டோவியங்களில் சில அழாகாவே உள்ளன. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்திருக்கலாம். கலர் படங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடிக்க நிறைய செலவாகும். புத்தகத்தின் விலையும் கூடும். எனினும் இந்த நிலை மாற வேண்டும்.
ஆண் வெளிமான் (Blackbuck Male). Photo: Kalyan Varma
ஆண் வெளிமான் (Blackbuck Male). Photo: Kalyan Varma
இயற்கையும் காட்டுயிர்களும் கட்டுரையில் பழந்திண்ணி வெளவால் பறக்கும் போது உண்டாக்கும் ஒலியின் எதிரொலி மூலம் வழி கண்டறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழந்திண்ணி வெளவால்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குக் கண்கள் பெரியவை. பூச்சியுண்ணும் சிறிய  வெளவால்கள் (microchiroptera) தான் எதிரொலியை ஏற்படுத்திப் பறக்கவும், அவற்றின் இரையைப் பிடிக்கவும் செய்கின்றன. வானம்பாடியை தரையில் வாழும் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளது (தரையில் வாழும் வானம்பாடி எனும் கட்டுரை), எனினும் வெட்ட வெளியில், அடர்த்தியில்லாத புதர்க்காடுகளில் வாழும் என்பதே பெருத்தமாக இருக்கும். தரையில் கூடமைத்தாலும் இவை கவுதாரி, காட்டுக்கோழி, மயில் போன்ற தரைவாழ் பறவைகள் (Terrestrial) அல்ல.  வெளிமான்களின் வாழிடம் எனும் தலைப்பிலமைந்த கட்டுரையின் இறுதியில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. விளக்கத்தை வைத்துப் பார்க்கும் பார்த்தால் அது பூனைப்பருந்தாக (Harrier) இருக்கவேண்டும், வல்லூறு (Falcon) அல்ல. தாமரைக்கோழி கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூனைப்பருந்து Marsh Harrier என ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. பறவைகளுக்கு ஒரு விடுதி கட்டுரையில் சொல்லப்படும் கொம்பன் ஆந்தை/கோட்டான் Barn Owl எனும் பறவை. இதை கூகை என்றும் கூறுவர். Horned owl ஐ தான் கொம்பன் ஆந்தை என்பர். பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர்களையும் கொடுத்திருக்கலாம். தமிழ்பெயர்கள் மாறி வருவதை கவனித்து திருத்தி அமைத்திருக்கலாம். இது ஆசிரியரின்/மொழிபெயர்ப்பாளரின் தவறில்லை. தமிழ்நாட்டில் ஒரு பறவைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொர் பெயரிட்டு அழைப்பார்கள். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் எனும் புத்தகத்தில் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளார். இப்பெயர்களையெல்லாம் ஒருங்கே நெறிப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதன் ஆங்கில மூலத்தின் தலைப்பையும், வெளிவந்த நாளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். இதில் உள்ளது மொத்த பக்கங்களே நாற்பத்தி எட்டுத்தான். விலை ரூபாய் 25 தான். நாம் செய்யும் பல தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்க முடியும். இது போன்ற புத்தகங்களை அல்லது இதிலுள்ள கட்டுரைகளை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். அல்லது துணைப் பாடநூலாக (Non-detail) வைக்கலாம். எல்லா பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த கல்வி என்பதே இல்லாத இச்சூழலில் இது போன்ற புத்தகங்கள் அதன் குறையைப் போக்கும். இது போன்ற புத்தகங்களே பொதுமக்கள் மத்தியில் காட்டுயிர் பேணல் விழிப்புணர்வு, இயற்கையின் பால் நாட்டம், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை. இப்புத்தகத்தின் நேக்கமும் அதுதான்.
********
நம்மைச் சுற்றி காட்டுயிர்பூவுலகு.  ஜனவரி-பிப்ரவரி (2013)ல் வெளியான நூல் மதிப்புரை. இதன் PDF இதோ.
********
இந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.
வெளியீடு: Books for Children, பாரதி புத்தகாலாயத்தின் ஓர் அங்கம், சென்னை – 18.  விலை Rs. 25/-
********
Written by P Jeganathan
March 7, 2013 at 9:28 pm

No comments:

Post a Comment