For Read Your Language click Translate

Follow by Email

25 May 2014

வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா ?

இந்திய மற்றும் மேற்கத்திய முறைகள் இரண்டிற்கும் அடிப்படையில் பொதுவான சோதிட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வானில் வலம் வரும் கோள்கள் (கிரகங்கள்) நட்சத்திரங்கள் மற்றும் இயற்கை சக்திகளால் பூமியில் உள்ள நீர்நிலைகள், நிலப்பரப்பு, தட்பவெப்பம், பருவகாலங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்கள் எல்லாமே சில மாற்றங்களை அடைவது போலவும் இயல்புகள் பாதிக்கப்படுவது போலவும் மனிதர்களும் அவர்களது நடவடிக்கைகளும் பாதிப்புக...்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்பதே இந்த இரண்டு வித சோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal) வைத்து (Spica வைத்து) அளப்பது.
முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac with precession) என்று பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள்.
மேல் நாட்டவர்கள் சாயன முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்திய சேதிடர்கள் நிராயன முறையைப் பின்பற்றுகிறார்கள். எபிமெரீஸ் (Ephemeris) போன்ற தரவுகளைப் பயன்படுத்தி ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன.

புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஞாயிறையும் ஒரு நீள்வட்டப் பாதையில் (Ecliptic) சுற்றி வருகிறது.

மேலே எழுதுமுன்னர் சோதிடத்துக்கான வானியல் அடிப்படை என்ன என்பதைப் பார்த்துவிடலாம்.

வான வீதியில் உள்ள 12 இராசிகள்
வான வீதியில் உள்ள கற்பனை 12 வீடுகள்
வான வீதியில் வலம் வரும் 9 கோள்கள்
வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்கள்

அண்ட வெளியில் 88 நட்சத்திரக் கூட்டங்கள் (constellations) இருப்பதாக வானியல் அடையாளம் கண்டுள்ளது. இதில் 12 நட்சத்திர கூட்டங்களை மட்டும் சோதிடர்கள் தெரிந்தெடுத்து அவற்றை 12 இராசிகள் என அழைக்கிறார்கள். இந்த இராசிகளில் காணப்படும் நட்சத்திரங்கள் உண்மையானவை.
புவி தன்னைத்தானே தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 24 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் இப் புவியைச் சுற்றிலும் கிழக்கு மேற்காக மேலும் கீழும் படர்ந்துள்ள 12 இராசிகளும் (ஞாயிற்றின் பின்புலத்தில்) அடிவானத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி மறைந்துவிடுகின்றன.
மேற்கத்திய ஜோதிட முறை “Geo Centric” எனப்படும் பூமியை மையப்பொருளாகக் கொண்டு பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் செல்லும் சுழற்சிப் பாதையில் அமைந்திருக்கும் இராசிச் சின்னங்களின் (Signs) அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
உண்மையில் புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion) ஏற்படுகிறது
ஏற்கனவே கூறியவாறு இராசிகள் பத்து, நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations) ஆகும்.

16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் புவி இந்த அண்டத்தின் நடுவில் இருப்பதாகவும் ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் அனைத்தும் புவியைச் சுற்றி வருகின்றன என்றே மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர். மேல் நாட்டில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் (கிபி 150) வாழ்ந்த Ptolemy என்ற வானியலாளர்/சோதிடர் கூட புவியை அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டரின் புவிமையக் கோட்பாட்டையே (Geocentric Theory) நம்பினார்.

கிபி 1512 இல் நிக்கோலஸ் கோபெர்னிக்ஸ் (Nicolas Copernicus) என்னும் வானியலாளர்தான் ஞாயிறை மையமாகக் கொண்டு ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை (Heliocentric theory of Planetary Motion) நிறுவி அதுவரை புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டை உடைந்தெறிந்து எல்லோரையும் குறிப்பாக போப்பாண்டவரை மிரள வைத்தார். அவர் மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுதிய ஞாயிறு மையக் கோட்பாட்டை நிறுவும் நூல் வெளிவந்தது.

நட்சத்திரக் கூட்டங்கள் (இராசிகள்) போலவே 9 கிரகங்களும் ஞாயிறைச் சுற்றி வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு தொலைவில் வலம் வருகின்றன..
பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும். எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏர்படுத்த முடியுமா?! அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர முடியுமா?! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

சில மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள கிரகங்களால் பாதிப்பு இல்லை என்கின்ற பொழுது பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிப்பு ஏர்படுத்த முடியுமா?
. ஒளியாண்டு என்பது ஒளி ஒரு நொடிக்கு 1,76,000 கிமீ வேகத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தூரம். பத்து ட்ரில்லியன் கிமீ க்கு சற்றே குறைவு. அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டு இருக்கின்றன! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே புவியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா?

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதிக்க முடியுமா ?
கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! ஏதாவது கோள் மனிதரது வாழ்க்கை முறையைப் வாழ்வை பாதிக்க முடியுமா ?
நாம் வாழும் இந்தப் புவிதான். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எமது உடல்நலத்தைத் தீர்மானிக்கிறது
உண்மையில் வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனித வாழ்வில் மாற்றத்தை ஏர்படுத்த முடியுமா ?