For Read Your Language click Translate

Follow by Email

25 May 2014

என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....!மரங்கள்/மூலிகைகள்

சதுரகிரி மலையில் மூங்கில், நாங்கில், கோங்கை, கொங்கு, சந்தனம், அகில், அசோக்கு, தேக்கு, வேங்கை, சுரபுன்னை போன்ற அனேக மரங்களும்,வேறெங்கும் இலகுவில் கிடைக்காத அழுகண்ணி, இருப்பவல் செடி, உதிரவேங்கை, உரோமவேங்கை, உரோமவிருட்சம், ஏறழிஞ்சி, கற்றாமரை, கணைஎருமைவிருட்சம், கருநொச்சி, கருநெல்லி, கருங்கொடிவேலி, செந்தாடுபாவை, கையாந்தகரை, கானற்பலா, சாயாவிருட்சம், செங்கொடி வேலி, செங்கடுக்காய், செந்நாயுருவி, செங்கற்றாளை, தில்லைவிருட்சம், சஞ்சீவிமூலிகை, சிவந்தஇலைக்கள்ளி, சுணங்கிவிருட்சம், சோதிவிருட்சம், முண்டகவிருட்சம், பஞ்சதரு, வெண்ணாவல், மஞ்சப்பூத்தவேளை, வெள்ளைப்புனல்முருங்கை, சோதிப்புல்லு, பவளத்துத்தி, பொற்றலைக்கரிப்பான், கருநாரத்தை, நாகதாளி, வனபிரம்மி, பேய்சுரை, தொழுகண்ணி, முப்பிரண்டை, நாகபடக்கற்றாளை, குருவரிக்கற்றாளை போன்ற பல காயகற்ப மூலிகைகளும், இவை தவிர விஷப் பூலாமரம், முகம் வீங்கிமரம், எரிமுகிமரம், விஷதேற்ராமரம், தும்புகச்செடி பேன்ற பல விஷ செடிகளும் இருக்கின்றனவாம். இவை மனிதர் உடலில் பட்டாலே உயிராபத்து விளைவிக்குமாம்.
சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் ரகசியமாய் பாதுகாக்கப்படுகிற சதுரகிரியின் தகவல்களை நான் பொதுவில் வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சில நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்திருந்தனர். நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினையே அந்த நண்பர்களுக்கு பதிலாக வைத்திட விரும்புகிறேன். குருவருளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். நற்சிந்தனையும்,குருவருளும் வாய்க்கப் பட்டவர்களுக்கு மட்டுமே சித்தர் பெருமக்களால் சபிக்கப் பட்ட இந்த ரகசியங்கள் கைகூடும்.

வாருங்கள் மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளைய பதிவில் மேலும் கற்பக விருட்சம் மற்றும் சஞ்சீவி மூலிகையின் அற்புதங்களைப் பற்றி பார்ப்போம்.

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய சில மூலிகைகளின் இருப்பிடம் மற்றும் அவற்றின் மகத்துவம் குறித்த தகவல்கள் இன்றும் தொடர்கின்றது. இன்று புராண இதிகாசங்களில் மிகையாகவும்,மிகச் சிறப்பானதாகவும் வர்ணிக்கப் பட்டிருக்கும் சில மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

கற்பகதரு

கற்பக விருட்சம், பஞ்சு தரு என்கிற பெயர்களால் அறியப் படும் இந்த மரமானது மகாலிங்கர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறதாம்.இந்த மரத்தில் ஐந்து கிளைகள் இருக்குமென்றும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான வெவ்வேறு வடிவத்திலான இலைகள் இருக்குமென்றும் கூறப் பட்டிருக்கிறது.இதனை வைத்தே இந்த மரத்தினை அடையாளம் காணலாம். இந்த மரத்தின் பட்டையை ஒரு பண எடையளவு ஒருவாரம் உட்கொள்ள அனைத்து நோய்களும் அகலுமாம்.மேலும் இந்த மரத்தை தட்டினால் பால் வருமெனவும்,அதனை ஒரு பண எடையளவு ஒரு மண்டலம் உட்கொள்ள காயசித்தியாகும் என குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

சஞ்சீவிமூலிகை

இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம். ஆச்சர்யம்தானே!

உரோமவேங்கை

சதுரகிரி மலையில் சங்கிலிப் பாறை இருக்கிறதாம்.அதற்க்கு தென் கிழக்கில் உரோமவேங்கை என்னும் விருட்சம் இருக்கிறது.இது வேங்கை மரம் போல் மிருதுவாகவும், அடித்தூர் சாம்பல் நிறத்திலும் இருக்குமாம்.அதன் விழுதானது கவரிமான் உரோமம் போல ஒருசாண் அல்லது அரைச்சாண் நீளத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். இதன் பட்டையைச் சிறிது பெயர்த்தால் இரத்தம் போல் பால் வடியுமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து சொர்ணத்திற்க்குச் சுருக்கிட பற்பமாகுமாம், அதை சாப்பிட காயத்தி கிடைக்குமாம்.

கற்றாமரை

சதுரகிரி மலையில் காலங்கி வனம் இருக்கிறது.அதன் வடக்குப் பக்கத்தில் தண்ணீர்கசிவுத் தரை இருக்கிறது. அந்தத் தரையில் கற்றாமரை என்றொரு மூலிகை இருக்கிறதாம். அந்த மூலிகையின் ஒரு இலையை கையால் தீண்டினால், அந்த இலை நான்கு இலையாக விரியுமாம். அந்த மூலிகையின் வேர் சடை போல் இருக்குமாம். இந்த வேரில் இரும்பு ஊசியைச் செருகி எடுத்தால் அது தாமிர ஊசியாக மாறி இருக்குமாம். பின்னர் அந்த தாமிர ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க வெள்ளி ஊசியாக மாறி இருக்குமாம். மீண்டும் அந்த வெள்ளி ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க அந்த ஊசியானது தங்க ஊசியாக மாறிவிடுமாம். மேலும் அந்த மூலிகையை கால்களில் மிதித்துக் கொண்டு பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் தெரியுமாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு இந்த மூலிகையை அடையாளம் கண்டு சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலத்திற்க்கு வெருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளை சதுரகிரி மலையில் இருக்கும் மேலும் சில ஆச்சர்யமான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகைகளின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்             
சதுரகிரி! சித்தர்கள் வாழ்ந்த காலத்தே இருந்த சமூகத்தின் எண்ணப் போக்கில் இருந்து விலகியவர்களாகவும், தீர்க்கமான முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தொலை நோக்குடன் கூடிய அவதானிப்புகளும், தெளிவுகளும் இன்றைக்கும் பொருந்துகின்றன.இதற்கு பல்வேறு ஆதார ஆவணங்களை அவர்தம் பாடல்களின் வழியே காட்டிட முடியும்.

எது எப்படியாக இருந்தாலும் சித்தர்கள் தங்களுக்கிடையே ஒரு ஆழமான பிணைப்புடன் கூடிய அமைப்பினை உருவாக்கி வைத்திருந்தனர் என்பது மட்டும் தெளிவு. ஒருவர் மற்றவரை அங்கீகரித்திருப்பதும், அவர்தம் புகழை உயர்த்திக் கூறியிருப்பதும் இதற்கு சான்றாக கொள்ளலாம்.சதுரகிரி மலையில் வாழ்ந்திருந்த சித்தர்கள் அனைவருமே மற்றவர்களைக் குறித்த உயர்வான கருத்தினையே கூறியிருப்பதன் மூலம் இதனை உணரலாம். அதே நேரத்தில் தங்களின் தேடல்களும், தெளிவுகளும் தங்களைத் தாண்டிய சமூகத்தினரின் கைகளில் சேர்வதை தவிர்த்திருப்பதையும் உணர முடிகிறது.

பேராசைக்காரர்கள், தீயவர்கள் கைகளில் இவை சேர்ந்திடக் கூடாது என பொதுவகைப் படுத்திக் கூறியிருந்தாலும் இதன் பின்னே ஆழமான வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக் கூடும். தங்களை அங்கீகரிக்காதவர்களிடம் தங்களின் தெளிவுகள் சேர்ந்திடக் கூடாது என்கிற தன்மையாகக் கூட இருக்கலாம். சதுரகிரி மலையில் இருக்கும் அற்புத மூலிகை வளங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் உரைத்திருக்கும் அதே வேளையில் எதிர் காலத்தில் இந்த மூலிகைகளைத் தேடி ஆட்கள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். இதற்கு சான்றாய் அகத்தியரின் பாடல்கள் இரண்டினை இங்கே பகிர விரும்புகிறேன்.

அகத்தியர் அருளிய அகத்தியர் 12000” என்கிற நூலில் தனது மாணவரான புலத்த்தியருக்கு கூறுவதாக வரும் பாடல் வருமாறு..

"
சித்தான சித்துமுனி சொரூபரப்பா
யின்னமுண்டு உரைப்போம் கேளு
முத்தான புலத்தியனே முடிமன்னா
மூவுலகில் என்றுமுண்டு சித்தர்வர்க்கம்
வெத்தியுள்ள சதுரகிரி வடபாகத்தில்
என்றுமிருப்பார் ரனேகம்பேர் நாதர்தாமும்
பத்தியுடன் நாதாக்கள் தன்னைக்காண
பாருலகில் வெகுமாண்பர் போவார்பாரே"

-
அகத்தியர் -

"
போவாரே அம்மலையின் அதிசயங்கள்
கோடான கோடிமூலி யனேகமுண்ண்டே
யனைத்தையுமேய ழித்திடவே முனைவர்
மானமுடன் வையகத்தில் மூலிவாழ
நலமுடனே வெகுகாலம் காக்கவேண்டி
நலமுடனே வெகுகால மிருந்துகொண்டு
கோடியாம் மாண்பருக்கு கண்ணில்காணா
குணமுடனே மறைத்தார்கள் நாதாக்கள்தானே"

-
அகத்தியர் -

சித்த புருஷர்கள் அழிவில்லாதவர்கள், நிலையானவர்கள் அத்தகைய பெருமக்கள் பெருமையான சதுரகிரி மலையின் வட பாகத்தில் அவர்கள் என்றும் இருப்பார்கள். இவர்களை தரிசித்து அருள் பெற மக்கள் சதுரகிரிக்கு அதிகமாய் வரத் துவங்குவார்கள். அப்படிச் வரக் கூடிய மனிதர்கள் மலையில் இருக்கும் அதிசயமான இடங்களையும், அரிய மூலிகைகளையும் அழிக்கத் தலைப்படுவர் என்று கூறுகிறார்.

மக்கள் எத்தனை பேர் வந்து அழிக்க நினைத்தாலும், சித்தர்கள் இந்த பூவுலகின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய மூலிகைகளை இன்றும் இவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். பாதுகாக்கும் அளவை மீறிய ஒரு சில மூலிகைகள் மட்டுமே மக்களின் பார்வையில் கிடைக்குமென்றும். மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மூலிகைகளை மக்கள் அணுக முடியாத இடங்களில் பத்திரமாக இருப்பதாயும் சொல்கிறார்.

இன்றைக்கு சதுரகிரியில் அகத்தியர் கூறிய நிலமைதான் நிதர்சனமாகி இருக்கிறது.பெருமளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளதன் விளைவாய் காடுகள் அழிக்கப் பட்டு,அரிய பல மூலிகைச் செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.எனினும் அகத்தியர் தன் நூலில் அருளியுள்ள படி ஆய்வுகள் மேற்கொண்டால் மறைந்திருக்கும் மூலிகைகளைப் பற்றி அறிய இயலுமென்றே கருதுகிறேன்.

இவ்வாறு மறைக்கப் பட்ட மூலிகைகளை கண்டறிவது பற்றியும் தனது பாடல்களில் அகத்தியர் அருளியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.

சதுரகிரி பற்றிப்பலரும் தொடர்ச்சியான இத்தகைய மிகைப் படுத்துதல் மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளை முன்வைப்பதன் மூலம் சதுரகிரியை ஒரு மர்ம பூமியாகவும், அமானுஷ்ய மனிதர்களின் வசிப்பிடமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக மலையில் நிறைந்திருக்கும் இயற்கையின் அற்புதங்களை அறிவார்ந்த வகையில் அணுகிட இயலாத வகையில் ஒரு மனத் தடையினை உருவாக்குவதாகக் கருதுகிறேன்.


சதுரகிரிமலை பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தொட்ட விவரங்களை மட்டுமே இந்த தொடரில் முன்னெடுத்துச் சொல்ல தீர்மானித்திருக்கிறேன். நிச்சயமாக இதுவரை பலரும் அறிந்திடாத அல்லது பலரும் கேள்விப் படாத பல ஆச்சர்ய தகவல்களை இந்த தொடரில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சித்தர்களின் ஆச்சிரம விவரங்கள் மற்றும் விவரிப்புகளைப் பார்க்கும் போது அவை யாவும் செயல் பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனவே எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் கோரக்கர் விவரிக்கும் சித்தர்கள் அனைவரும் சம காலத்தவர்களாக என்கிற கேள்வியும் எழும்புகிறது.இதன் சாத்திய,அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.


1)தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.

காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.

கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும்,
தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகிஇருக்கிறது. கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும்தொடர்கிறது
இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...

1)தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் குதிரை குத்தி பாறையும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் படிவெட்டி பாறை என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும்என்கிறார்.

2)கவுண்டிண்ய ஆறு ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.
3)அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திலிருந்து கிழக்காக இருக்கும் பாதையில் மேலேறி அரை நாளிகை நடந்தால் கோணவாசல் பாதை வரும், அதைத் தாண்டி மேடேறிப் போனால் பசுமிதிப் பாறையும், அந்தப் பாறைக்குக் கிழக்கே கணபதியின் உருவத்தை ஒத்த ஒரு பாறை இருக்குமாம்.அதை வணங்கி அதன் கிழக்குப் பக்கம் செல்லும் பாதையில் அரை நாளிகை நடந்தால் பாதையின் தெற்குப் பக்கத்தில் அம்பு விழும் தூரத்தில் அருட்சித்தர் மச்சமுனியின் ஆசிரமம் இருக்கிறது என்கிறார்.

4)மச்ச முனிவரின் ஆசிரமத்தின் தெற்குப் பக்கமாய் நடந்தால் கூப்பிடு தூரத்தில் வெள்ளை புனல் முருங்கை மரம் எதிர்படுமாம்,அதன் இடதுபக்கம் அம்புவிடும் தூரத்தில் சமதளமான பாறையை காணலாம்.அந்த பாறையின் தெற்குப் பக்கம் இருக்கும் ஓடையை தாண்டினால் அம்புவிடும் தூரத்தில் காவி தெரியும்,அதற்கு கீழ்பக்கம் பேய்ச்சுரை கொடி படந்திருக்கும் என்கிறார். இந்த கொடிக்கு தெற்குப் பக்கம் இருக்கும் பாதையில் நடந்தால் குருவரி கற்றாழை எதிர்படுமாம்,அதற்கு நேர் வடக்காய் சென்றால் கூப்பிடு தூரத்தில் கிழக்கே ஒரு பாதை தென்படும்,அதிலிருக்கும் மேட்டில் ஏறினால் சமதளமாக இருக்கும் என்கிறார்.அதில் அரை நாளிகை தூரம் நடந்து வநது தெற்குப் பக்கமாய் பார்த்தால் தனது ஆசிரமம் தெரியும் என்கிறார் கோரக்கர்.

 ஆசிரமத்தின் நேர் வடக்கில் இருக்கும் ஆற்றில் இறங்கி தெற்குப் பக்கம் பார்த்தால் மலைச் சரிவில் தனது குகையை பார்க்கலாம் என்கிறார்.அதன் கிழக்கே ஆற்றின் நடுவில் கஞ்சா கடைந்த குண்டா இருக்கும் என்றும்,அதன் கிழக்கே வற்றாத பொய்கை ஒன்று இருக்குமாம்.எத்தனை ஆச்சர்யமான வழிகாட்டல்!!


5)கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய் அம்புவிடும் தூரத்தில் மஞ்சள் பூத்தவளைஎன்னும் மூலிகை இருக்கிறதாம்,அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அம்புவிடும் தூரத்தில் கசிவுத்தரை இருக்கிறது. இங்கிருந்து வடக்குப் பக்கம் போனால் மேடு ஒன்றும் அதனையொட்டி ஒரு ஓடையும் வரும் என்கிறார். இந்த ஓடைக்கு வடக்கே சமதளமான மண்தரையும் பக்கத்தில் பாறையும் இருக்குமாம்.இந்த பாறையின் வடக்கே இருக்கும் ஓடையின் வடக்குப் பக்கத்தில் அம்புவிடும் தூரத்தில் அரிய மூலிகையான அமுதவல்லிச் செடிஇருக்கும். இந்த செடிக்கு நேர்வடக்காய் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதையில் நடந்தால் எதிர் வரும் மேட்டில் இரட்டை லிங்கம் இருக்கும் என்கிறார். இந்த லிங்கத்துக்கு தென்கிழக்கு மூலையில் ஆற்றையொட்டி யாக்கோபு சித்தர் என அறியப்படும் இராமதேவரின் ஆசிரமம் இருக்கிறது. இங்கே ரோம விருட்சமும் அதன் பக்கத்தில் நாகபடக் கற்றாழையும் இருக்கிறது என்கிறார்.

6)இராம தேவரின் ஆசிரமத்தில் இருந்து வடக்கே நடந்தால் வரும் சமதளத்தின் கிழக்கே போனால் பசுக்கிடை வரும், அதைத் தாண்டினால் எக்காலத்திலும் வற்றாத நவ்வலூற்று சுனையும் அதனையொட்டி பாறையும் இருக்கிறது. அதில் பாம்புக் கேணி இருப்பதாக குறிப்பிடுகிறார். அதனைத் தாண்டி கிழக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் வழுக்கைப் பாறையையும் அதற்கப்பால் இருக்கும் பச்சரிசி மேட்டையும் கடந்தால் தெக்கம் பண்ணைமலை வழி வருமாம்.
இந்த வழியே கிழக்குப் பக்கமாக அரை நாளிகை நடந்தால் சின்ன பசுக்கிடையும், ஒப்பில்லா சாயையும் இருக்கிறதாம். இதனைத் தாண்டி கிழக்கே செல்ல பலா மரமும், கருப்பண்ண சுவாமி கோவிலும் இருக்கும் என்கிறார். இந்த கருப்பண்ண சுவாமி கோவிலைப் பற்றி நான் முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த கோவிலுக்கு பின்புறம்தான் தைலக் கிணறு இருக்கிறது. இரசவாதம் செய்ய பயன்படுத்திம் தைலம் இந்த கிணற்றில் நிரப்பப் பட்டிருப்பதாக கருதப் படுகிறது. கருப்பண்ண சுவாமியின் அருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த கிணற்றை அணுக முடியுமென்கின்றனர்

7)சக்தி வாய்ந்த இந்த கோவிலை கடந்து போனால் ஆறு ஒன்று வரும், இந்த ஆற்றுக்குள்தான் பேச்சிப்பாறை இருக்கின்றதாம். இதன் வடக்குப் பக்கமிருக்கும் மேடேறினால் அங்கே துர்வாச ரிஷியின் ஆசிரமத்தை காணலாம் என்கிறார்.
8)இந்த ஆசிரமத்தின் கிழக்கே அம்புவிடும் தூரத்தில் வெள்ளைப் பாறையும், சந்தன மகாலிங்க சுவாமி கோவில் ஓடையும் இருக்கும். அதைக் கடந்து கிழக்கே பயணிக்க முச்சந்தியான பாதை ஒன்று வருமாம். இதில் தெற்கே போகும் பாதையில் சென்று மேடேறினால் சுந்தரர் கோவில் இருக்கிறது என்றும் அதை வணங்கி தெற்கே ஆற்றங்கரையோரமாய் கூப்பிடு தூரத்தில் மகாலிங்க கோவில் இருக்கிறது.
இதன் வடக்குப் பக்கம் கூப்பிடு தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அரை நாளிகை நடந்தால் பெரிய சுரங்கவழி ஒன்று இருக்கும் என்கிறார். இதில் நுழைந்து அரை நாளிகை நடக்க சந்தன மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது என்கிறார். இந்த கோவிலின் வடக்குப் பக்கத்தில் காளிகானலில் இருந்து நீரோடை வந்து விழுந்து கொண்டிருக்குமாம். அதில் நீராடிய பின்னரே சந்தன மகாலிங்க சுவாமியை வணங்க வேண்டும் என்கிரார்.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் மானிடர்கள் பூசை இல்லை என்றும் தேவரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் பூசைதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் என்ற தகவலையும் கோரக்கர் குறிப்பிடுகிறார்.

9)இந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் சட்டை முனியின் குகை இருக்கிறது. அந்த குகையின் தெற்கே கூப்பிடு தூரத்தில் வெண்நாவல் மரமும் அதன் இடது புறமிருக்கும் மண்மலையின் தெற்கே சமதளத்தில் வனபிரமி என்ற அரிய வகை மூலிகையும் வளர்ந்திருக்கும் என்கிறார்.
சட்டை முனி குகைக்கு நேர் கிழக்காக வரும் பாதையில் ஒரு நாளிகை தூரம் சென்றால், வடக்கே செல்லும் பாதையில் போய் சேரும் அதில் ஒரு நாளிகை நடக்க கும்ப மலை வரும் என்கிறார். இந்த கும்ப மலை அருகே இருக்கும் ஒரு பெரிய குகையில்தான் அகத்தியர் வாசம் செய்கிறார் என அகத்தியரின் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கிறார் கோரக்கர்.10)அகத்தியர் குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க காற்றாடி மேடைவருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

11) புசுண்டரின் ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.

அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.

இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!..

12)சஞ்சீவி மூலிகையின் மேற்காக மஞ்சளூற்று இருக்கிறது. அந்த ஊற்றுக்கு வடபக்கம் அம்பு விடும் தூரத்தில் சதம்புத்தரை இருக்கிறதாம், அதன் கீழ்ப்புறம் கசிவுத்தரையில் அழகானந்தர் ஆச்சிரமம் இருக்கிறதாம். அங்கிருந்து நேர் கிழக்காய் வந்தால் மீண்டும் மகாலிங்கர் சந்நிதியில் வந்து சேரும் என்கிறார் கோரக்கர். இங்கிருந்து தெற்கே சென்றால் சன்னாசிவனம் வரும், அதன் தெற்கே போகும் பாதையில் ஒரு நாளிகை நடக்க ஒரு ஓடையும், சங்கிலிப் பாறையும் வருமாம்.

அதனை கடந்து கூப்பிடு தூரம் போனால் அநேக மரங்கள் சூழ பிரம்ம முனியின் ஆச்சிரமம் அமைந்திருக்கும் என்கிறார். ஆச்சிரமத்தின் தெற்குபக்கம் போகிற பாதையில் ஒரு நாளிகை மலை ஏற அதன் சரிவில் காளங்கிநாதரின் குகை எதிர்படும் என்கிறார்.
13)அந்த குகையின் சரிவில் அம்புவிடும் தூரத்தில் என்றும் வற்றாத தசவேதி உதகசுனை இருக்கிறதாம். தசவேதி உதகநீர் பற்றிய எனது முந்தைய பதிவினை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

காளங்கி நாதர் குகையிலிருந்து தெற்க்கு பக்கமாய் கூப்பிடு தூரத்தில் தபசு குகை வரும். அந்த குகையிலிருந்து வடக்குப் பக்கம் போகும் பாதையில் சென்றால் மீண்டும் மகாலிங்கர் சன்னிதிக்கே வரும், அதனால் அதை விடுத்து கிழக்குப் பக்கம் சென்றால் அரை நாளிகை தூரம் நடந்தால் கன்னிமார் கோவிலும், பளிங்கர் குடிசையும் வருமாம். அங்கிருந்து தெற்கே அரை நாளிகை தூரம் வந்தால் நந்தீசர் வனமும், அதனுள் அவர் ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

ஆசிரமத்தின் வடக்கு பக்கமாய் போகும் பாதையில் செல்ல கிழக்கே இருந்து ஒரு பாதை வந்து சேருமாம், அந்த பாதை வழியே அரை நாளிகை நடக்க பளிங்கர் பாறையும் அதன் தெற்கே செல்ல அநேக மரம் செடிகொடிகள் சூழ தன்வந்திரியின் ஆச்சிரமம் இருக்கிறதென்கிறார்.

புசுண்டர்,உரோமரிஷி, யூகிமுனிவர், சுந்தரானந்தர், அழகானந்தர், காளங்கிநாதர், நந்தீசர், தன்வந்திரி ஆகியோரின் ஆச்சிரமங்களுக்கு செல்லும் வழியினை இன்று கோரக்கர் வாயிலாக தெரிந்து கொண்டோம்

14)தன்வந்திரியின் ஆச்சிரமத்தின் வடக்கே வந்தால் கிழக்கிலிருந்து ஒரு பாதை வந்து சேரும்,அந்த பாதையின் தெற்கே வேறொரு பாதை இருக்கும் அதில் நடக்க வடக்கு புறமாய் ஒரு கானலை காணலாம். இதற்கு எமபுர கானல் என்று பெயர். இந்த கானலுக்கு தென்புறமாய் கிழக்கில் போகும் பாதை ஒன்று வரும். அதில் கூப்பிடு தூரம் நடக்க வாத மேடும் அதில் வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் இருக்குமென்கிறார். இங்கிருந்து அம்புவிடும் தூரம் வரை சதும்புத் தரை இருக்கிறது. அதற்கு தெற்கே வந்தால் குரு ராஜரிஷியின் வனமும் அதனுள் அவரது ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

15)ராஜ ரிஷியின் ஆச்சிரமத்தின் நேர் வடக்கில் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதை ஒன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஒரு மண்மேடு எதிர்ப்படும் அதனருகில் அழகிய செடிகள் சூழ்ந்த வனமிருக்கும். அந்த வனத்தின் நடுவே கொங்கணவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார். ஆச்சிரமத்தின் கிழக்கே போனால் எல்லைக்கல் குட்டம் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே மூன்று நாளிகை நடக்க தபோவனம் எனப்படும் மாவூற்று வரும், அதன் வடக்கே சென்றால் உதயகிரி எல்லை வருமாம். அங்கே உதயகிரி சித்தர் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

16)இங்கிருந்து கீழ்பக்கமாய் இறங்கும் பாதைவழியே வர அரை நாளிகை பயணத்தில் மீண்டும் எல்லை குட்டத்திற்கு வந்து சேருமாம். இதன் வடக்கே பிருஞ்சக முனிவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.ஆச்சிரமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கும் சதம்புத் தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். சஞ்சீவி மூலிகை சதம்புத் தரையில் மட்டுமே வளரும் இயல்புடையதெனெ தெரிகிறது.

இந்த சதம்புத் தரைக்கு மேல்ப்பக்கம் போகும் வழியில் அம்பு விடும் தூரம் சென்றால், ஒரு யானை படுத்திருப்பதை போல் பெரிய பாறை ஒன்று இருக்கும். அந்தக் தென்புறமாக அம்பு விடும் தூரம் நடந்தால் சரளைத்தரை இருக்கிறது.அதற்க்கு நேர் மேற்கில் கூப்பிடு தூரத்தில் மலையோடை இருக்கிறது,அந்த ஓடையினை கடந்து அம்புவிடும் தூரத்தில் யானைக் குட்டியைப் போல வெள்ளை பிள்ளையார் இருக்கிறார்.அருகில் போய் பார்த்தால் பாறை போலவும், தொலைவில் இருந்து பார்க்க பிள்ளையாராகவும் தெரிவார் என்கிறார் கோரக்கர்.

இங்கிருந்து மேற்கே ஒரு நாளிகை நடக்க வாதமேடு வரும்.இந்த வாத மேட்டில் தான் பதினெண்சித்தர்களும் சேர்ந்து ரசவாதம் செய்து பார்த்னர் என்கிறார். அதன் பொருட்டே இந்த இடம் வாதமேடு என அழைக்கப் படுகிறதாம்.இந்த இடத்தின் மகத்துவம் பற்றி தனியே தொடரின் நெடுகில் பதிகிறேன்.

17)வாதமேட்டின் மேற்கே அம்புவிடும் தூரத்தில் தத்துவ ஞானசித்தர் குகை இருக்கிறதாம்.அதன் வடக்கே அரை நாளிகை நடந்தால் சிறிய குட்டம் வரும், அதன் மேற்கே செல்லும் பாதையில் சென்றால் கன்னிமார் கோவில் வரும், அதன் மேற்கே கூப்பிடு தூரத்தில் மகாலிங்கர் சந்நிதி வருமென்கிறார். சந்நிதியின் நேர் வடக்கே போகும் பாதையில் ஒரு ஆறு இருக்கிறது, ஆற்றின் தென் புறமாய் இரண்டு பாதை பிரிந்து செல்லும், அதில் மேற்கே போனால் நாம் கிளம்பிய இடமான தாணிப்பாறைக்கு செல்லும். வடக்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை நடக்க குளிப்பட்டி பொய்கை இருக்கிறது.இதன் தெற்கே எல்லைக் குட்டம் இருக்கிறது.இதன் அருகில் பால் பட்டை மரமிருக்கிறதாம்.

பால் பட்டை மரத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் சென்றால் அம்பு விடும் தூரத்தில் திருக்கைப் பாறை இருக்கிறது.அதன் மேற்கே யாகோபுச்சித்தர் ஆச்சிரமம் இருக்கிற்து.

18) யாகோபுச்சித்தர் ஆச்சிரமத்தின் மேற்க்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் கடுவெளிச்சித்தர் குகை இருக்கின்றது. இதனை தாண்டி நடந்தால் கருங்கானல் ஒன்று வரும் அதில் நுழையாது மேலே எற அரை நாளிகை பயணத்தில் கசிவுத் தரை இருக்கிறதாம்.

இந்தக் கசிவுத்தரைக்கு வடப்பக்கம் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் தேடிக் கானல் இருக்கிறது. அந்தக் கானலுக்கு கீழ்ப்பக்கம் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் அழுகண்ணிச் சித்தரின் குகை இருக்கிறது. இதன் தெற்கே கூப்பிடு தூரத்தில் சிவவாக்கியரின் குகை இருக்கிறது. இரண்டு சித்தர்களின் குகைகள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான் என்கிறார். இங்கிருந்து மேற்கே போனால் பிரமகிரி எல்கை என்று சதுரகிரிப் பயணத்தை நிறைவு செய்கிறார் கோரக்கர்.

.

காலத்தால் மிகவும் முந்தியவரும், மூத்தவருமான அகத்திய மாமுனிவரின் கும்பமலை குகையினைப் பற்றியும், அவரை தரிசிப்பதைப் பற்றியும் கோரக்கர் தனது பாடலில் குறிப்பிட்டிருந்ததை பார்த்தோம். அதே வகையில் அகத்திய மாமுனிவரும் கோரக்கரை சதுரகிரி மலையில் தரிசிப்பதைப் பற்றி அருளியிருக்கிறார் என்பது ஆச்சர்யமான தகவல்தானே! அகத்தியர் மட்டுமில்லை, காளங்கிநாதர் கூட கோரக்கரை சதுரகிரியில் தரிசிக்கும் வழியை கூறியிருக்கிறார்.


1)முதலில் அகத்தியர் தந்து அகத்தியர்12000” என்ற நூலில் கோரக்கரை பற்றி அருளியதை பார்ப்போம்....
 -
பரிவான கோரக்கரின் குகை சதுரகிரியில் இருக்கிறது. என்றும் அந்தக் குகைக்குள் பார்த்தால் கோரக்கர் அங்கே இருப்பார்.தூய மனதுடன் புண்ணியர்களுக்கு அவரது தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

2)காலங்கிநாதர் தனது காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம் என்ற நூலில் கோரக்கரின் இருப்பிடத்தையும்,தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார-

சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும் இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார்.

அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும் செய்தி!

குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

நாளைய பதிவில் இன்றைய சதுரகிரி பற்றி அன்றே சித்தர்கள் கூறிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.


பிரபஞ்சத்தின் வினைப் பயனை முழுமையாய் களைந்து பிறவாப் பேரின்பநிலைஅடைவதே உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.

சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.
 கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில் பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.

"
-

மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம். அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும் அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம் தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும் கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர்.

வாய்ப்பிருக்கிறவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்!

சதுரகிரியில் சித்தர்கள் இங்கே வாழ்ந்திருந்தாலும் அவர்களின் ஜீவசமாதிகள் தமிழகமெங்கும் இருப்பது குறித்து சந்தேகத்தினை எழுப்புகிறது. நியாயமான இந்த கேள்விக்கான விடைகளைத் தேடி புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது கிடைத்த ஆச்சர்யமான தகவல்களை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் தனது அகத்தியர் 12000” என்ற நூலில் கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறுகூறியிருக்கிறார் ...
-

அகதியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறுவதாக இந்த பாடல் அமைகிறது. சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் அழகு மிகுந்த சதுரகிரியின் மேற்கு பக்கத்தை விரும்பி தேர்ந்தெடுத்து சமாதியடைந்தனர் என்கிறார்.மேலும் யாரெல்லாம் இங்கே சமாதிய அடைந்திருக்கின்றனர் என்பதையும், அந்த சமாதிகளை எவ்வாறு தரிசிப்பது என்றும் இந்த நூலில் கூறியிருக்கிறார்.

மிக நிச்சயமாக எனக்கு இது புதிய தகவல்தான், சித்தர்கள் தொடர்பாய் நான் இது வரை வாசித்த எந்த ஒரு தனி நூலிலும் இத்தகைய செய்தியினை படிக்கவில்லை. இத்தனை முக்கியமான ஒரு தகவல் ஏன் ஆவணப் படுத்தப் படாமல் போயிற்று என்பதும் புரியவில்லை.

வாருங்கள் யாரெல்லாம் சதுரகிரியில் சமாதியடைந்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

1)"
பமபாட்டிச்சித்தர் அநேக நூல்களைப் பாடிவிட்டு சதுரகிரியில் மேற்க்குப் பக்கம் இருக்கும் மரப் பொந்தொன்றில் சமாதியடைந்தார் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.

-

2)இடைக்காட்டுச்சித்தர் சமாதியடைய வேண்டும் என்று சதுரகிரி மலை ஏறி குத்துக்கல் அருகில் சமாதியடந்தார் என்கிறார் அகதியர்.

"3)
வாய்க்கால் மண்டபத்திற்க்கு அருகில் திருமூலரும் சமாதியடைந்ததாக அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, இந்த நூலில் நான் பார்த்த வரையில் பதினோரு சித்தர்கள் சதுரகிரியில் சமாதியடைந்திருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார். இந்த சமாதிகளை எப்படி கண்டறிந்து தரிசிப்பது என்பதையும் கூட அகத்தியர் தனது நூலில்குறிப்பிட்டிருக்கிறார்.

-தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் சென்று,அகத்தியரின் சீடனான நான் சமாதிகளை தரிசிக்க வந்துள்ளேன் என்று கரம் கூப்பி வேண்டிக்கொள்ள சமாதி இருக்கும் இடம் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.

குருவருள் வாய்த்தவர்கள் முயன்றால் இந்த சமாதிகளை தரிசிக்கலாம்.