For Read Your Language click Translate

31 May 2014

GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?

Nature writing in Tamil
Great Backyard Bird Count (GBBC) எனும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது. 2014 பிப்ரவரி மாதம் 14 முதல் 17 வரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
காகம் House Crow
காகம் House Crow
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. சென்ற ஆண்டு (2013) இந்தியா முழுவதிலிருந்தும் 202 பேர் பங்கு பெற்றனர். 438 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 537 பறவை வகைகள் கணக்கிடப்பட்டன. 80283 பறவைகள் எண்ணப்பட்டன. அதிகமாக பார்க்கப்பட்ட/கணக்கிடப்பட்ட பறவைகள்: மைனா, காகம், கரும்பருந்து, மாடப்புறா, கொண்டைக்குருவி, பச்சைக்கிளி, கரிச்சான் குருவி முதலியன (மேலும் விவரங்களுக்கு காண்க PDF).
மைனா (நாகணவாய்) Common Myna
மைனா (நாகணவாய்) Common Myna
உலக அளவில் 137998 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 4258 பறவை வகைகள் அவதானிக்கப்பட்டன, எண்ணப்பட்ட மொத்தப் பறவைகள் 33464616! (மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காண்க).
GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
இதைச் செய்வது எதற்காக?
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.
See www.citizensparrow.in for more details
See http://www.citizensparrow.in for more details
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு (migrantwatch.in). seasonwatch எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல்  (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
 பறவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்த்து கணக்கிடலாம்
பறவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்த்து கணக்கிடலாம்
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும்.
நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)- ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்.
———-
ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பிற்கு உதவும் சில ஆதார வளங்கள்:
2014GBBC_PPT_TAMIL
உங்கள் குழுவினருக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றிய இந்த காட்சியளிப்பை (Presentation) தரவிறக்கம் (PDF)செய்து கொண்டு அவர்களுக்கு விளக்கமளிக்கவும். Arial Unicode MS எழுத்துருவை (Font) பயன்படுத்தவும்.
இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird Introduction_Tamil
eBird இணையதளத்தில் உங்களது பறவைப்பட்டியலை உள்ளிடும் வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த காட்சியளிப்பை தரவிறக்கம்  (PDF) செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Some Tamil Nadu Birds
தமிழ்நாட்டில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
 eBird ன் மொபைல் அப்ளிகேஷன் (Smart phone App)  http://bit.ly/1b9xcZ4 (2014 Feb 17 ம் தேதி வரை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
eBird உதவிப் பக்கம் (http://help.ebird.org/).
eBird ஐ முகநூலிலும் (Facebook) ட்விட்டரிலும் (Twitter) கூட காணலாம்.
இந்தியப் பறவைகள கணக்கெடுப்புத் திட்டம் (BirdCount India) குறித்து மேலும் அறிந்து கொள்ள அதன் Google group, Facebook, Twitter பக்கங்களுக்குச் செல்லவும்.
இந்திய பறவை கணக்கெடுப்புத் திட்டம் பற்றிய கேள்விகள் ஏதுமிருப்பின் தொடர்பு கொள்க
Email: birdcountindia@gmail.com

No comments:

Post a Comment