For Read Your Language click Translate

Follow by Email

25 May 2014

இந்தியர்களின் கறுப்புப் பணம் 2.5 பில்லியன் டாலர்

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் 2.5 பில்லியன் டாலர் என்று அறிவித்துள்ளது ஸ்விஸ் நேஷனல் பாங்க்.  இதுவெறும் அறிவிப்பு மட்டுமே. 

இந்தப் பணம் யார் யாருக்குச் சொந்தம் என்கிற பட்டியல் எல்லாம் வெளியிடப்படவில்லை. அது வெளியிடப்படுமா என்பதும் தெரியவில்லை.  இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள், எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று கூறியிருந்தார்.  

இப்போது ஸ்விஸ் நேஷனல் வங்கியே இந்தியர்கள் தங்கள் நாட்டில் சேமித்து வைத்துள்ள பணம் 2.5 பில்லியன் டாலர்கள் என்று கூறிவிட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 11,250 கோடி!  இந்தத் தொகை 2010-ம் ஆண்டின் இறுதி வரையிலான புள்ளிவிவரம் என்கிறது ஸ்விஸ் நேஷனல் பாங்க். ஆனால் இந்தத் தொகை குறைவு என்று கூறுகிறார் ஸ்விஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு வங்கியின் உயர் அதிகாரி. 

குறைந்தபட்சம் 15 முதல் 20 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.  இந்த வங்கி அதிகாரி சொல்லும் கணக்கைக்கூட நாம் அதிகம் என்று நினைத்து இதில் சராசரியாக 10 பில்லியன் டாலர் என்று வைத்துக்கொண்டாலும், சுமார் 45,000 கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் புழங்குகிறது என்று கருத இடமிருக்கிறது. இப்போதுதான் நமது அரசியல்வாதிகளின் துணையோடு இந்திய அரசு எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.  

ஸ்விஸ் வங்கி தெரிவிக்கும் இன்னொரு தகவல் நம் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 500 மில்லியன் (ரூ. 2,250 கோடி) இந்தியர்களின் (கறுப்புப்) பணம் சேமிப்பிலிருந்து குறைந்துள்ளது என்று ஸ்விஸ் நேஷனல் பாங்க் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் திடுதிடுப்பென வங்கியில் சேமித்து வைத்திருந்த பணம் குறைவானேன்? கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதுதான் இதற்குக் காரணம் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.  

கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிலர்தான் இப்படி ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பெயர், பட்டியலில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல வழிகளிலும் பணத்தை வேறு நாடுகளுக்குக்கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் இதன் பொருள்.  இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் அமலில் உள்ள நாடுகளான சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகியவற்றின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கறுப்புப்பணம்  இந்தியாவுக்கு முதலீடுகளாகக் கொண்டுவரப்படுகின்றன. 

அன்னிய நேரடி முதலீடு, இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு என பல வழிகளிலும் இந்தக் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் ஏற்கெனவே வந்துவிட்டது.  இப்போது 2011-ம் ஆண்டின் அரையாண்டு முடிவுற்ற நிலையில், மேலதிகமான பணம் இந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்குள், வெள்ளைப் பணமாக மாறி வந்திருக்கவும்கூடும்.  இந்தியாவில் பங்கு வர்த்தகத்தைக் கண்காணிக்கும் செபி அமைப்பு மற்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகியன இத்தகைய முறைகேடுகளை மிகவும் நுட்பமாகப் பார்ப்பதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசு, பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்கிற நிலைப்பாட்டில் செயல்படும்போது அவர்களால் இந்த அமைப்புகளை என்னதான் செய்துவிட முடியும்?  இவ்வாறு முறைகேடாக அன்னிய நேரடி முதலீடு வருகிறது என்று தெரிந்தவுடன் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? இதற்கான வழிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேகமாக ஓட்டையைப் பெரிதாக்குகிறது. வழிகளை அகலமாக்கி, வெளியேபோன பணம் சீக்கிரம் வந்து சேர்ந்தவுடன் அடைக்கலாம் என்று சிந்திக்கிறது.  இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு உள்ள அளவை, கடந்த இரு ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்தி, அனுமதித்தது நிதியமைச்சகம். கடந்த பட்ஜெட்டில்கூட நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு 45,000 கோடி ரூபாய் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டின் அளவையும்கூட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

 மொரிஷியஸ் நாட்டுடன் நிலவும் இப்போதைய இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, புதிய ஒப்பந்தம்போட வேண்டும் என்று மத்திய அரசு பேசிக்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடாகவும் இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடாகவும் வந்த பணம் எவ்வளவு, அப்படி முதலீடு செய்த நிறுவனங்கள் எவையெவை, இவை உண்மையாகவே பலகாலமாக சிங்கப்பூர், மொரிஷியஸ், துபாய் நாடுகளில் இருந்துவரும் அமைப்பா அல்லது திடீரென முளைத்த அமைப்பா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. 

அப்படியெல்லாம் நமது அரசு கவலைப்பட்டுக் கொள்வதாகவே இல்லை.  வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், நேற்று முளைத்த காளான் நிறுவனங்கள்கூட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப்பணத்தை நீங்கள் சட்டப்பூர்வ முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்பதும் ஒன்றுதான்.  

அன்னிய முதலீட்டுக்கு எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து கேள்விமுறை இல்லாமல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படும் 2.5 பில்லியன் டாலர்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று யார் சொன்னது?

 
..................................................................... 

சமூக நலம்  விரும்பும் 
         பகலவன்.

......................................................