For Read Your Language click Translate

31 May 2014

மரம் பார்ப்போம், மரம் காப்போம் !- JOIN US AT treesindia.in


campaing_banner
இந்தியா முழுவதும் ஏப்ரல் 22 முதல் (உலக பூமி தினத்தன்று) தொடங்கவுள்ளது இந்த மரம் பார்க்கும் திருவிழா. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. உங்கள் வீட்டிலோ, வீட்டின் அருகிலோ, தெருவிலோ, நீங்கள் நடைபழகச் செல்லும் பூங்காவிலோ, பள்ளியிலோ உள்ள மரங்களைப் பாருங்கள். இந்த இடங்களில் தான் என்று இல்லை, உங்களுக்கு எங்கு விருப்பமோ, வசதியோ அங்கெல்லாம் கூட பார்க்கலாம்.
2. மரங்களின் இருப்பிடத்தை இடங்காட்டியிருந்தால் (Global Positioning System – GPS) அதன் மூலம் குறித்துக்கொள்ளவும். இல்லையெனில் கூகுள் வரைபடத்தில் (Google Earth or Wikimapia or Google Maps) உங்களது மரம் அல்லது மரங்களின் இருப்பிடத்தைக் குறித்து அந்த இடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை (Latitude/Longitude) குறித்துக்கொள்ளவும். (தற்போது இடங்காட்டிகள் பல கைபேசிகளில் கூட உள்ளது)
3. உங்களிடம் கேமிரா இருந்தால் நீங்கள் பார்க்கும் மரத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். (மரத்தைப் புகைப்படமெடுக்கும் முறையை விரிவாகக் காண இங்கே சொடுக்கவும்)
4. ஒருவேளை உங்களிடம் காமிராவோ, இடங்காட்டியோ இல்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் மரம் பார்க்கும் இடத்திலுள்ள மரத்தின் வகைகளையும் அவற்றின் எண்ணிக்கையையும் பட்டியலிடவும்.
5. அதன் பின் இந்தியப் பல்லுயிரிய வலைவாசலின் (India Biodiveristy Portal) ஒரு பகுதியான இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இந்தியமரங்கள் பக்கத்திற்குச் சென்று உங்களைப் பதிவு செய்து கொண்டு நீங்கள் சேகரித்த தகவல்களை உள்ளீடு செய்யவும்.
6. உங்களது பதிவுகளை உள்ளீடு எப்படிச் செய்வதென்பதை விளக்கும் படக்காட்சிகளை இப்பக்கத்தில் காணலாம்
7. உங்களது மரத்தைப் பற்றிய ஏதேனும் சுவையான செய்தி இருந்தாலும் இந்த வலைவாசலில் உள்ள ஏனைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
8. இந்த மரம் பார்க்கும் நிகழ்ச்சியை நீங்கள் ஒருவர் மட்டுமே தனியாகவும் செய்யலாம், உங்கள் நண்பர்களுடன் ஒரு குழுவாகவோ, சக மாணவர்களுடனோ, உங்களது குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்தும் செய்யலாம். நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கு இந்நிகழ்வினைப் பற்றி எடுத்துச் சொல்லி பங்கு பெற ஊக்கப்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் ஒரு தன்னார்வ அமைப்பின் அங்கத்தினராக இருந்தால் உங்களது உறுப்பினர்களுடன் சேர்ந்து மரம் பார்க்கும் நடை பயணத்தினை நடத்த ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் மரங்களை அடையாளம் காணுவதில் தேர்ச்சி மிக்கவராக இருந்தாலும், உங்களை பதிவு செய்து கொண்டு மற்றவர்களுக்கு உதவலாம்.
இந்தத் திட்டத்தின் நோக்கம்
நிழலையும், உயிர் வளியையும் நமக்களிக்கும் மரங்களின் கொடையினை நாம் அனைவரும் உணர வைப்பதும், இந்தியா முழுவதிலும் உள்ள மரங்களை ஆவணப்படுத்துவதும், மரங்களைப் பற்றிய தரவுகளை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் சேமித்து ஒரு பொதுத் தளத்தில் வைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மரம் பார்ப்போம், மரம் காப்போம் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதால் யாருக்கு என்ன பயன்?
ஒரு வேளை நீங்கள் பார்த்த மரத்தின் பெயர் உங்களுக்குத் தெரியவில்லையென்றாலும் நீங்கள் அம்மரத்தின் படத்தை உள்ளீடு செய்யலாம். வலைவாசலில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தாவரவியலாளர்கள், உறுப்பினர்கள் உங்களது மரத்தை அடையாளம் காண உதவுவார்கள். இதன் மூலம் நீங்களும் உங்களது மரங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்களை அறிந்து பயனடைவீர்கள்.
இந்தியா முழுவதும் பலர் இதில் பங்கு பெற்றால் எந்தெந்த ஊர்களில் எவ்வகையான மரங்கள் உள்ளன, எத்தனை உள்ளன என்பதை அறிய முடியும். இது ஒரு முக்கியமான ஆவணமாக அமையும். இந்தியாவில் சுமார் 7500 வகையான மரங்கள் உள்ளன. இவையனைத்தின் பரவலையும், தற்போதைய நிலையையும் ஆவணப்படுத்துவது அவசியம்.
நீங்கள் தினமும் பார்க்கும் உங்களது மரங்களின் புகைப்படத்தையோ, அவற்றின் இருப்பிடத்தையோ, மரங்களின் பட்டியலையோ இந்த வலைவாசலில் உள்ளீடு செய்வதன் மூலம் உங்களது மரங்களின் பாதுகாப்பிற்கு உதவமுடியும்.
ஓரிடத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை, பட்டியலை தயாரித்து அவற்றின் படங்களை, அமைவிடத்தை (location) பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அந்த இடத்தில் மரங்கள் அதிகரித்துள்ளதா, குறைந்து போனதா என்பதை அறிய முடியும்.
நாளுக்கு நாள் ஊர்ப்புறங்களிலும், நகரங்களிலும் சாலை விரிவாக்கம் முதலிய காரணங்களால் மரங்கள் அருகி வரும் இந்நிலையில் இது போன்ற ஆவணப்படுத்தும் செயல்கள் மிகவும் அவசியம். இந்திய பல்லுயிரிய வலைவாசலில் உள்ள படங்கள், பட்டியல்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் எளிதில் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். இது போன்ற ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இயற்கை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆர்வமுள்ள பொதுமக்கள்  அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
ஒரு மரத்தின் பூ பூக்கும், காய் காய்க்கும் காலத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணித்து ஆவணப்படுத்தி வருவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், உலக அளவிலும் ஏற்படும் கால நிலை மாற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு seasonwatch எனும் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்க.
இதையெல்லாம் ஓரிரு ஆர்வலர்களோ, ஆராய்ச்சியாளர்களோ மட்டுமே செய்து முடிக்கக்கூடிய காரியம் அல்ல. மரங்களின் பால் பற்று கொண்ட பொதுமக்களின் உதவியும் தேவை. இது போன்ற மக்கள் அறிவியல் (citizen science) திட்டங்களில் பங்கு கொள்வது விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் பொது மக்களும் பங்களிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்கள் அறிய treesindia@indiabiodiversity.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
NeighborhoodTreesCampaign_700

No comments:

Post a Comment