For Read Your Language click Translate

Follow by Email

27 May 2014

பரதநாட்டியம்

தமிழ்ச்சித்தரான பரதச்சித்தரால் உருவாக்கப்பட்ட பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும். அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் கூறுவர்.

The art of Bharathanatyam is said to be created by sage Bharathamuni/ Bharathasiddha. 'Bha' - Bhavam (means expression), 'Ra' - Ragam (means music), 'Ta - Talam (means beat or rhythm) and Natyam (means dance) in Tamil.
 பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணைபுல்லாங்குழல்,வயலின்மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை' 'திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.


வரலாறு[தொகு]

பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை "கூத்து" என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.இவர்களது வாழ்க்கைப்பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

மாதவியின் பதினொரு வகை ஆடல்கள்[தொகு]

ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகச் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகாரம்"காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கையாக மாதவி சித்தரிக்கப்படுகிறாள். சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்த இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள். அவள் ஆடிய ஆடல் வகைகளாக அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், குடக்கூத்து, துடிக்கூத்து, பேடிக்கூத்து கடையக்கூத்து, மரக்கால் கூத்து, பாவைக் கூத்து என்பனவற்றை சிலப்பதிகாரம் கூறுகிறது.

கோயிலும் நாட்டியமும்[தொகு]

கோயில்களில் ஆடலும் பாடலும் இடம் பெறுவது தமிழர் சமய மரபு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் "ஸ்ரீராஜராஜேஸ்வரம்" என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இக்கோயிலில் ஆடலும் பாடலும் சிறப்பாக நிகழ ஏற்பாடு செய்தான்.
தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் மகளிர் ஆடல் தொண்டு செய்தனர். அவர்களில் சிறந்த நானூறு ஆடல் மகளிரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடற் பணி செய்ய வைத்தான். கோயில் சுற்று வீதியில் அவர்களுக்குத் தனித்தனி வீட்டைக் கொடுத்துப் பொருளையும் கொடுத்தான். அத்துடன் உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தான். இவர்களை முறையாகப் பயிற்றுவிக்க நாட்டிய ஆசான்கள் இருந்தனர். பக்க இசை பாடவும் கருவி இசை வழங்கவும் கலைஞர்கள் இருந்தனர். கோயில்களில் கலைத் தொண்டு சிறப்பாக வளர்ந்தது. இத்தகைய கோயில் பணி, காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற மன்னன் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். இதனால் தமிழகத்தில் நாட்டியப் பரம்பரை முறையாகத் தொடர்ந்தது. காலப் போக்கில் இக்கலை வடிவம் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர், பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது.[1]

தஞ்சை நால்வர்[தொகு]

சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் "தஞ்சை நால்வர்" என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நால்வரும் சகோதரர்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பிறந்து வாழ்ந்தவர்கள். நாட்டியக் கலையிலும் இசைக் கலையிலும் வல்லவர்கள். கோயில்களிலும் அரண்மனைகளிலும் ஆடியநிகழ்ச்சிகளைப் பொது மேடைக்குரிய நிகழ்ச்சிகளாக ஆக்கியவர்கள்.[1] தஞ்சை மராத்திய மன்னர், திருவனந்தபுரம் மகாராஜா, மைசூர் மகாராஜா ஆகியோர் இவர்களை ஆதரித்து வளர்த்தனர். அதனால் மேடை நாட்டிய முறை இந்தியாவின் தென்மாநிலங்களில் எளிதாகப் பரவியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவை தென் மாநிலங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள். இம்மொழிப் பாடல்களும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. இது இக்கலைவடிவத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். தஞ்சை நால்வர் நெறிப்படுத்திய ஆடல் முறைகளும், நிகழ்ச்சிகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.[1]


ஆடல் முறைகள்[தொகு]

பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:
 1. நிருத்தம்
 2. நிருத்தியம்
 3. நாட்டியம்
ஆகியவையாகும்.

நிருத்தம்[தொகு]

கருத்து எதுவும் வெளிப்படுத்தாமல் ஆடும் ஆடல் முறை நிருத்தமாகும். மகிழ்ச்சிச் சுவை ஒன்றையே வெளிக்காட்டும். அடவுகள் இந்த ஆடல் வகையில் மிக இன்றியமையாததாகும். கை, கால், முகம் ஆகிய உறுப்புகளின் நிலைகளோடு கூடியது அடவு. தட்டடவு, நாட்டடவு, குத்தடவு எனப் பல அடவு வகைகள் உண்டு. அவை வெவ்வேறு தாளத்திற்கேற்ப அமையும். பரதநாட்டியத்தில் ‘அலாரிப்பு’ என்னும் நிகழ்ச்சி பல அடவுகளின் சேர்க்கையாகும்.

நிருத்தியம்[தொகு]

நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறை நிருத்தியமாகும். கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் ‘பாடல்’ சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் சப்தம், பதவர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.

நாட்டியம்[தொகு]

கதையைத் தழுவி வரும் ஆடல் முறை நாட்டியமாகும். கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அபிநயித்து ஆடப்பெறும். ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக அபிநயிப்பர். பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரித்தும் ஆடுவர். குறவஞ்சி நாட்டியம், நாட்டிய நாடகங்கள் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தன.

அபிநயம்[தொகு]

அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை
 1. ஆகார்ய அபிநயம்
 2. வாசிக அபிநயம்
 3. ஆங்கிக அபிநயம்
 4. சாத்விக அபிநயம்
என்பனவாகும்.

ஆகார்ய அபிநயம்[தொகு]

அலங்காரம் மூலம் அபிநயித்தல் 'ஆகார்ய அபிநயம்' எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். எடுத்துக்காட்டாகச் சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு,புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச்செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச்சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.

வாசிக அபிநயம்[தொகு]

இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். பிறர் பாடவும் அபிநயிப்பார். தஞ்சாவூர் பாலசரஸ்வதி, கும்பகோணம் பானுமதி, மயிலாப்பூர் கௌரியம்மாள் ஆகியோர் தாமே பாடலைப் பாடி அபிநயம் செய்வர். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாட்டியப் பாடல்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கருநாடக இசையில் அமையும்.

ஆங்கிக அபிநயம்[தொகு]

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது 'ஆங்கிக அபிநயம்'. உடல்உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கை முத்திரை சிறப்பிடம் பெறும், கை முத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும் இரட்டைக் கை முத்திரைகளும் உண்டு. தமிழில் இவை முறையே பிண்டி, பிணையல் என அழைக்கப்படுகின்றன. [சமஸ்கிருதம் -அசம்யுதஹஸ்தம், சம்யுதஹஸ்தம்]
பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பரும்,
"கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர".[2]
எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.

அங்கம்[தொகு]

தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.

பிரத்தியாங்கம்[தொகு]

புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.

உபாங்கம்[தொகு]

உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,உதடு,முகவாய் ஆகியனவாகும்.

சாத்விக அபிநயம்[தொகு]

உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.

நாட்டிய உருப்படிகள்[தொகு]

பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்
 • அலாரிப்பு
 • ஜதிசுரம்
 • சப்தம்
 • வர்ணம்
 • பதம்
 • தில்லானா
 • விருத்தம்
 • மங்களம்
என்பவையாகும்.

அலாரிப்பு[தொகு]

பரத நாட்டிய நிகழ்ச்சியின் முதல் நடனம் அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சி. நிருத்த வகையான ஆடல் இது. அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும்.

ஜதிசுவரம்[தொகு]

இதுவும் அபிநயம் இல்லாத நிருத்த வகை ஆடல் உருப்படியாகும். சொற்கட்டுகள் இடம் பெறாது. ஆனால் சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும். அதனால் இதன் பெயர் ஜதி + சுரம் = ஜதிசுரம் ஆகிறது. ஜதிசுரம் மிக விறுவிறுப்பான ஆடல் உருப்படியாகும். குரலிசையோடு நட்டுவனார் தாளமும் மிருதங்க வாசிப்பும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெறும்.

வர்ணம்[தொகு]

வர்ணம் என்னும் உருப்படியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாள வர்ணம், மற்றையது பதவர்ணம், பரத நாட்டிய நிகழ்ச்சியில் பதவர்ணம் இடம்பெறும். பாடல் அபிநயிக்கத்தக்க பொருளைக் கருவாகக் கொண்டிருக்கும். பதவர்ணத்தின் சுரங்களுக்கு நிருத்தமும் பாடலுக்கு அபிநயமும் செய்யப்படும். இதனால் இசை, தாளம், பாவம் ஆகிய மூன்றும் சிறந்திருக்கும் உருப்படியாகப் பதவர்ணம் இருக்கும்.

பதம்[தொகு]

முழுவதும் அபிநயமாக அமையும் உருப்படி பதம். இது பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. இது காதல் சுவையை உணர்த்தும் உருப்படி, ஆதலால் தலைவன் தலைவி உறவு முறையில் இறைவன் தலைவன். நாட்டியமாடுபவள் தலைவி. இது பரமாத்மா ஆகிய இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மாவின் உறவை உணர்த்தும். இந்த உயர்ந்த உறவு, உலகியல் நிலையில் ‘பதத்தில்’ சித்தரிக்கப்படுகிறது. தலைவி அனுபவிக்கும் பல்வேறு அந்தரங்க உணர்வுகள் இந்த உருப்படியில் அபிநயிக்கப்படும் தாள வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. வெவ்வேறு வகையினரான தலைவியரின் தன்மைக்கு ஏற்ப அபிநயபாவகம் இருக்கும்.முருகன், சிவன், கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் இந்த உருப்படியில் தலைவனாகக் கொள்ளப்படுவர். மன்னர், வள்ளல் ஆகியோரைத் தலைவனாகக் கொண்ட பதங்களும் உள்ளன.

தில்லானா[தொகு]

மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி தில்லானா, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும்.

விருத்தம்[தொகு]

தாளக் கட்டுப்பாடு இல்லாத ஓர் உருப்படி ‘விருத்தம்’. பாடகர் பாடலை இராக பாவம் ததும்ப நிதானமாகப் பாடுவார். ஆடுபவர் பாடலை அனுபவித்து நிதானமாக அபிநயம் செய்வார். சம்ஸ்கிருதத்தில் இந்த உருப்படி ‘ஸ்லோகம்’ எனப்படும். தெலுங்கில், "பத்யம்" என்று வழங்கப்படும். இது பக்திச் சுவைக்கு முதன்மை கொடுக்கும் நிகழ்ச்சி.

மங்களம்[தொகு]

பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். பாடகரும் பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.