For Read Your Language click Translate

27 May 2014

இந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க தான்!

இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சில ஆதிவாசிகளின் ஜீன்களில் இந்திய ஆதிவாசிகளின் அடையாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் இந்த ஜீன்கள் புகுந்திருக்க (இந்தியர்கள் குடியேறியிருக்க) வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசுவோருடையதாக இருக்கலாம் என்கின்றனர்.

ஆஸ்திரேலியா தனித்திருக்கவில்லை...

இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.

நம்பிக்கையை உடைத்த ஜீன்கள்..

ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.

ஜெர்மன் குழு நடத்திய ஆராய்ச்சி:

ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க்.

இந்திய ஜீன்கள்:

ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர்.

141 தலைமுறைக்கு முன்...

இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து போன டிங்கோ நாய்கள்:

அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான 'டிங்கோ', இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

என்றும் தமிழ் பணியில்...!!!
 — with Duke Thavamin and Kader Oli.

No comments:

Post a Comment