For Read Your Language click Translate

06 May 2014

தன்னையறிந்து முழுமைபெற வாரீர் :


இறைநிலை இயல்புகள் காட்சியாகும் :

அகத்தவத்தில் உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல். உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் "குருவின் மூலமே" கற்றுக் கொள்ள வேண்டும்.... பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல். இவற்றை முறையே "மனமடக்க ஓர்மைப் பயிற்சி" [லயம்] என்றும் "அகத்தாய்வு" என்றும் கூறுகிறோம். இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். "முழு நோக்கம் மனமடக்கம்; சடங்கு வாய்திறந்து பேசாமை, வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமையாகாது".

மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக்கூறி மற்றவர்களும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம். மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் அல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார்.

"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே"

மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார். திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்".

தன் முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும். இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும். மௌன நோன்பில் மனமடங்கித் தற்சோதனையில் ஈடுபடும் போது இறைநிலையின் இயல்புகள் அனைத்தும் அறிவிற்குக் காட்சியாகும். இப்பெரும் பேற்றினை 'இறைவன் என்னுள் பேசுகிறான்' என்றும் 'உள்ளுணர்வு' என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். வாய்ப்பினை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு ஒருநாள், பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் என்ற அளவில் மௌன நோன்பு ஏற்பதில் மும்மலங்களும் கரைந்து ஆன்மீக அறிவு ஓங்கி வாழ்வில் தெளிவும் அமைதியும், இனிமையும் விளையும். வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ குறித்துக் கொண்டும் மௌன நோன்பு ஆற்றிப் பிறவிப் பயனை அடையலாம். அருள் ஒளி மிக்க வாழ்வினைப் பெறலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மகரிஷியின் மணிமொழிகள் : (23-03-2014)

"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ.
கடவுளாய் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே".

தன்னையறிந்து முழுமைபெற வாரீர் :

தெய்வத்தின் திருவிளையாட் டரங்கமே உடலுயிர் இவ்
வுய்யும் ஒரு பெருமை உலக மக்கள் உணர்வதற்கு
மெய்விளக்கத் தவ விளக்கம் மேலாம் தத்துவத் தெளிவு
செய்வதுதான் சிறந்த தொண்டு சிந்தனை மிக்கோர் சேர்வீர்.

சிலை வணக்கத்தின் எல்லை :

"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்".
See More — with Sathesh Kumar.

No comments:

Post a Comment