For Read Your Language click Translate

Follow by Email

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 15.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 15.

இந்தத் தொடர் பதினைந்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவு...க்கே ஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்றுவாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், "ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை.எல்லாமே ஏமாத்து வேலை" என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.

ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்.ஏலியனையோ, பறக்கும் தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான். உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். 'ஹார்வார்ட்' உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் 'ஆப்ஸர்வேட்டரி' (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து, விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும் பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில் தவறில்லைதானே!

http://goo.gl/Y2xxuC

பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும் பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள்.

1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது. டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும். இங்கிலாந்திலும்  நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று 'ஜூலியா செட்' (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும்.

http://goo.gl/5U1JTU

பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது 'ஜுலியா செட்' பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில்அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்து சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, 'A303 நெடுஞ்சாலை' மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை. எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில் உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும்.

மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்றுநம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.

அதனை அறிய அடுத்த பதிவு வரை காத்திருப்பீர்களா?