For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 14.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 14.

இங்கிலாந்தில் 'யோர்க் ஷையர்' (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.

http://goo.gl/A0QAA9...

அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.

http://goo.gl/9FqPXb

எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை. படங்கள் கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்..

http://goo.gl/4chGcF

http://goo.gl/J0dQqv

http://goo.gl/gBEynR

http://goo.gl/tD0AOJ

எகிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும். எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம். அதற்கு அடுத்த பதிவு வரை காத்திருப்பீர்களா?

No comments:

Post a Comment