For Read Your Language click Translate

05 May 2014

குருவால் உண்டாகும் யோகம்




     குரு பார்க்க கோடி புண்ணியம், குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். பொதுவாக நாம் குருவால் ஏற்றுக் கொள்வது முதலில் மாதா பிதாவை பிறகு நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை மற்றது நமக்கு ஒரு தொழிலையோ, நல்ல பண்பையோ கற்றுக் கொடுக்கும் மனிதர்களை  அதுபோல நமக்கு நல்லது நினைப்பவர்களையும், குருவாக ஏற்றுக் கொள்கிறோம். அது போல தான் நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். எந்தவொரு காரியத்தை செய்வதென்றாலும் இறை வணக்கம், குரு வணக்கம் செய்து விட்டு தான் அந்த காரியத்தையே தொடங்குவோம் அது போல
                         
குரு பிரம்மா குரு விஷ்ணு                         
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பர பிரம்ம தஸ்யை
ஸ்ரீ குருவே நமஹ

என குருவின் நாமத்தை சொல்லி அவரால் உண்டாகக் கூடிய யோகங்களைப் பற்றி காண்போம்.

கஜகேசரி யோகம்

     ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற  உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ஹம்ச யோகம்
     குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.

குரு மங்கள யோகம்
     
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் காணப்படுவதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது-. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். குறிப்பாக நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

குரு சந்திர யோகம்
   
  சந்திரனுக்கு 1,5,9ல் குரு அமையப் பெற்றால் குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் உயர்ந்த அந்தஸ்து பெருமை புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும். இந்த யோகத்தால் கல்விக்கு சம்மந்தமில்லாத தொழிலில் யோகம் கொடுக்கும்.

சகடை யோகம்
   
  சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கோட்டீஸ்வர யோகம்

கேதுவை குரு பார்வை செய்தாலும், கேதுவும் குருவும் இணைந்து காணப்பட்டாலும் கோட்டீஸ்வர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் திடீர் தனச்சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம், தெய்வீக ஆன்மீக பணிகளில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சண்டாள யோகம்

ராகுவை குரு பார்த்தால் சண்டாள யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சந்திராதிபதி யோகம்

சந்திரனிலிருந்து  6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

லக்னாதிபதி யோகம்

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

வசுமதி யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
                                                                                          

முருகு பாலமுருகன், 0091 7200163001

No comments:

Post a Comment