For Read Your Language click Translate

Follow by Email

06 May 2014

பதிவு - 13 : புருரவன் - ஊர்வசி பூலோக சந்திப்பு !!


வாசகர்கள் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம். சந்திர வம்சத்தினைப் பற்றிய இத்தொடருக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறி, இன்றைய பதிவினை பதிக்கிறேன்.
தேவலோகத்தில் சாபத்தினை அடைந்த ஊர்வசி, புருரவனை நோக்கி பூலோகம் வந்த போது அவனும், அவன் மனைவியும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை கண்டாள் என நேற்றைய பதிவினை முடித்திருந்தேன். இனி அங்கிருந்தே தொடர்கிறேன்.
பதிவு - 13 : புருரவன் - ஊர்வசி பூலோக சந்திப்பு !!
கணவன் மீது சந்தேகம் கொண்ட அவுஷிநிரி, அவனுடன் வாக்குவாதம் செய்தாள். திருமணம் ஆகி இத்தனை காலம் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஒரு குறையினை தவிர தங்களுக்கு நான் எந்த விதத்தில் குறையாக தென்பட்டேன் என்று, என்னை விடுத்து, இப்படி இரவு வேளைகளில் யாரோ ஒரு பெண்ணிற்காக திரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? என்று மனம் குமுறினாள்.
இவை அனைத்தையும் வானவெளியில் வந்து கொண்டிருந்த ஊர்வசி கேட்டு கொண்டிருந்தாள். இன்று எவளோ ஒரு பெண் வந்துவிட்டாள் என்பதற்காக, தாங்கள் மணந்த என்னை ஒதுக்குவது ஒரு போதும் நியாயம் ஆகாது என்று தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி தீர்த்தாள்.
புருரவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். ஏனெனில், அவள் கேட்டவை அனைத்தும் அவனுக்கு நியாயமாகவே பட்டது. தான் இவ்வளவு வேதனைப் பட்டு கேட்டும், கணவனிடமிருந்து பதில் எதுவும் வராதது கண்டு மிகவும் விரக்தி அடைந்தவளாய் இனி தங்கள் காதலுக்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருக்கப் போவதில்லை என்று கூறி அவனை விட்டு பிரிந்து சென்றாள்.
அவளை ஆறுதல் படுத்த முடியாமல் போனாலும், அவளை பிரியவும் அவனுக்கு மனம் வரவில்லை. அதே நிலையில் ஊர்வசியை பிரிந்தும் தன்னால் வாழ இயலாது என்று எண்ணி குழப்பத்திலேயே சிந்தை தடுமாறி அவள் போவது கூட தெரியாமல் , அவளை அவன் தடுக்க முற்படவில்லை. இதனால் இன்னும் வேதனை அடைந்த அவுஷிநிரி அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.
அதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஊர்வசியும் வேதனை அடைந்தாள். தன்னால் ஒரு பெண்ணின் வாழ்கை பாதிக்கப்பட்டு விட்டதே என்று அவள் கண்கள் கலங்கியது !!! இருந்தாலும் புருரவனுடன் வாழ வேண்டும் என்ற அவளது ஆசை அவள் கண்ணை மறைத்தது. அத்துடன் இன்று இல்லாவிடிலும், இது என்றாவது ஒரு நாள் நிகழத் தான் போகிறது, அது இப்போது நடந்து விட்டது என நினைத்து கொள்வோமே என்று அவளால் முடிந்த வரை புருரவனுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையிலேயே தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள்.
மேலும் எப்படி ஆயினும், தேவலோகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் படி கணக்கிட்டுப் பார்த்தால் எப்படியும் புருரவனுக்கும், அவளுக்கும் மண வாழ்கை, சந்தானம் ஆகியவை உண்டு என்பதை அறிந்து அவளை அவள் தேற்றி கொண்டு வானவெளியில் இருந்து இறங்கி வந்து புருரவனை அடைந்தாள்.
அந்த வனத்தில் அவன் பார்வைக்கு புலப்படும் படி அங்கே உலவினாள் ஊர்வசி. மனைவியை பிரிந்த புருரவன் ஊர்வசியை கண்டதும் அவனது கவலைகள் அனைத்தையும் மறந்தான். ஏன், இந்த உலகையே மறந்தான் என்று கூட சொல்லலாம்.
உடனே அவன் ஊர்வசியை நாடி, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தன்னை நினைவிருக்கிறதா ?? என்று கேட்டான். அதற்கு ஊர்வசி, தங்களை எவ்வாறு என்னால் மறக்க முடியும். மேலும் மறந்தால் தானே மீண்டும் நினைவு கூறுவதற்கு ??!!! என்றாள்.
அன்று நீ என்னை பார்த்த நொடி முதல் என் மனம் முழுதும் நீயே நிறைந்திருக்கிறாய். உன்னை தேரில் இருந்து இறங்க கரம் பற்றியவன், உன்னை என் வாழ்கைத் தேரில் கரம் பிடித்து ஏற்ற துடித்து கொண்டிருக்கின்றேன். என்னை மணந்து எனது ஆசையினை பூர்த்தி அடையச் செய்வாயா ? ஊர்வசி என்றான்.
அதை கேட்ட ஊர்வசி, அவனிடம் மன்னா !! நானோ தேவலோக மங்கை. நீயோ ஒரு சாதாரண மானுடன். எனவே நாம் இருவரும் மணந்து கொள்வது சரியாகாது என்றாள்.
அதற்கு காரணம் கேட்ட போது, ஊர்வசி அவனிடம் தேவலோக மங்கையர்களான எங்களுக்கு பூலோக பெண்களை போல எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. எனவே நாங்கள் சுதந்திரமாக இருப்போம். அதனால் அவர்களைப் போல் நானும் திருமணம் என்னும் உறவிற்குள் சிக்கிக் கொள்ள இயலாது என்றாள்.
அது கேட்ட புருரவன் மனம் கலங்கி அவளிடம், உன்னுடைய சுதந்திரத்திற்கும் , ஆசைகளுக்கும் நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன். எனது வாக்கில் நம்பிக்கை கொண்டு என்னை மணக்க வேண்டுகிறேன் ஊர்வசி. நீ இல்லாத ஒரு வாழ்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை. தயவு செய்து என் மன விருப்பத்தினை பூர்த்தி அடையச் செய்வாய் ஊர்வசி, என்று அவளிடம் இறைஞ்சினான் புருரவன்.
அவனது காதலையும், உணர்ச்சிகளையும் கண்டு மெய்சிலிர்த்த ஊர்வசி, அரசே !! நான் தங்களை மணக்க சம்மதிக்கிறேன். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. இதற்கு நீ கட்டுப்பட்டால் மட்டுமே உன்னை மணப்பேன் என்றாள் ஊர்வசி.
ஊர்வசி புருரவனுக்கு விதித்த நிபந்தனைகள் என்ன ??
அதனைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம் ...