பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். நெருப்பு எனும் பூதம் அதிகமாகும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களாகின்றன. உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் உருவாகிவிடுகின்றன. எனவே, கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய நெருப்பின் அளவை உடலில் குறைக்க வேண்டும் அல்லது நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். நெருப்பின் அளவை நேரடியாகக் குறைத்தால் இதயத்தின் இயக்கங்கள் பாதிக்கப்படும். எனவே நீரின் அளவை சமன்செய்வதே சரியான தந்திர யோக வழியாகும். அதற்கான முத்திரையே வருண முத்திரை!
எவ்வாறு செய்ய வேண்டும்?:
* பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள்.
* சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
அமரும் முறை: * பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம்.
* ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம்.
* கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
* எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.
* கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
சுவாசம்: இயல்பான, சீரான சுவாசம், மூச்சை அடக்குதல் (கும்பகம்) கூடாது.
எவ்வளவு நேரம்?: * குறைந்தபட்சம் 24 நிமிடங்கள்.
* காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம்.
* உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம்.
* ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும்.
* காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில்16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.
செய்வதால் என்ன பலன்?:
1. உடற் சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4. வியர்க்குரு மறையும்.
5. சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
6. தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.
7. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
8. இளமையான தோற்றம் உருவாகும்.
9. தாகம் தணியும்.
10. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.
No comments:
Post a Comment