கண்ணூர் பகுதியின் செழிப்பான கலாச்சாரமானது பல்வேறு ராஜ்ஜியங்கள் இப்பகுதியில் கோலோச்சியதன் விளைவாக பிறந்துள்ளது. பைபிள் காலத்திலேயே சாலமன் மன்னரின் கப்பல்கள் இப்பகுதிக்கு வந்ததாக சொல்லப்படும் கதையிலிருந்து இப்பகுதியின் வரலாற்றுப்பின்னணி துவங்குகிறது.
டச்சுக்காரர்களின் தொடர்ச்சியான ஊடுறுவல்கள் மற்றும் போர்த்துகீசியர்கள், மைசூர் சுல்தான்கள், அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் என பல ஆட்சியாளர்களின் தடங்கள் இப்பகுதியின் வரலாற்றில் ஆழப்பதிந்து சென்றிருக்கின்றன.
நாட்டுப்புறக்கதைகளும் கடற்கரைகளும்
நெசவுத்தறிகளுக்கும், புராணக்கதைகளுக்கும் புகழ் பெற்ற இந்த கண்ணூர் நகரமானது ‘தறிகளையும் கதைகளையும் கொண்ட நாடு’ எனும் பிரசித்தமான மலையாள வாக்கியத்தின் மூலம் அடையாளப் படுத்தப்படுகிறது.இங்குள்ள நெசவுத்தொழில் பாரம்பரியமும், புராணிகக்கதைகள் மற்றும் கூத்துக்கலை வடிவங்களும் சர்வதேச அளவில் அறியப்படுகின்றன. தெய்யம் அல்லது தெய்யாட்டம் எனும் நாட்டுப்புற கூத்து வடிவம் இப்பகுதியின் முக்கிய ‘நிகழ்த்து கலை அம்ச’மாக பிரசித்தி பெற்றுள்ளது.
மேலும், கண்ணூரில் சுந்தரேஸ்வர் கோயில், கொட்டியூர் சிவன் கோயில், ஊர்பழசிகாவு கோயில், ஸ்ரீ மாவிலைக்காவு கோயில், ஸ்ரீ ராகவபுரம் கோயில், ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் மற்றும் கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் போன்ற புகழ் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன.
இவை மட்டுமல்லாமல் கண்ணூர் பிரதேசத்தில் நீண்டு பரந்து கிடக்கும் மணற்பாங்கான கடற்கரைகள் பயணிகளுக்கு உல்லாசத்தையும் பொழுதுபோக்கையும் அளிக்கும் முக்கிய இயற்கை எழில் ஸ்தலங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் பய்யம்பலம் பீச், மீன்குண்ணு பீச், கீழுண்ண எழரா பீச் மற்றும் முழுப்பிளாங்காட் பீச் போன்றவை குறிப்பிடத்தக்க கடற்கரைகளாகும்.
சுவைகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சுவை
கேரள வரலாற்றில் கண்ணூர் எனும் பெயருக்கு ஒரு முக்கியமான இடம் வழங்கப்பட்டிருப்பதை இங்குள்ள எண்ணற்ற பாரம்பரிய கட்டிடங்கள், நகரமைப்புகள் மற்றும் உணவுப்பாரம்பரியம் போன்றவற்றிலிருந்து எளிமையாக புரிந்துகொள்ளலாம்.குண்டெர்ட் பங்களா, ஹோலி டிரினிட்டி கதீட்ரல் மற்றும் செயின்ட் ஆஞ்செலோ கோட்டை போன்றவை ஒருகாலத்தில் இப்பகுதியில் கோலோச்சிய காலனிய ஆதிக்கத்தின் மிச்சங்களாக காட்சியளிக்கின்றன.
கண்ணூரின் தனித்தன்மையான உணவுருசி மற்றும் தயாரிப்பு முறைகள் உணவுப்பிரியர்களை பெரிதும் ஈர்க்கும் சிறப்பம்சமாகவும் உள்ளது. தலசேரி தம் பிரியாணி எனும் உள்ளூர் உணவை இங்கு விஜயம் செய்யும் பயணிகள் மறக்காமல் ருசி பார்ப்பது நல்லது.
இது தவிர அறி உன்டா, நெய்பத்ரி, உன்னக்காயா, பழம் நிறச்சது, எலயாடா, களத்தப்பம் மற்றும் கிண்ணத்தப்பம் போன்ற பல ருசியான உணவுவகைகள் கண்ணூரின் விசேஷ உணவுப்பண்டங்களாக புகழ் பெற்றுள்ளன.
கண்ணூர் நகரம் இந்தியாவின் எல்லாப்பகுதிகளுடனும் நல்ல ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால் இனிமையான சூழலைக்கொண்டுள்ள இப்பிரதேசம் ஆண்டு முழுவதுமே பயணிகளை வரவேற்கும் இயல்புடன் காணப்படுகிறது.
ஏராளமான வெளிச்சுற்றுலா அம்சங்களையும், சாந்தம் தவழும் பழமையான அழகம்சங்களையும், செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் வரலாற்றுத்தடங்களையும் கொண்டுள்ள கண்ணூர் எனப்படும் இந்த கண்ணனூர் நகரம் தன்னுள் பொதிந்துள்ள அதிசயங்களை தரிசிக்க சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது.
No comments:
Post a Comment