leave a comment »
பள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.
சிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.
இந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன? இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).
அண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.
இரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று!
தி ஹிந்து தமிழ் தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை.