For Read Your Language click Translate

26 June 2014

சித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னார்கள் ?

சித்தர்கள் அருளிய சாகா வரம் தரும் யோக வழிமுறைகள்
சித்தர்களின் மணிமகுடமாக விளங்கும் கலைகளில் யோகம் தலையானது. இன்று உலகம் முழுவதும் யோகம், ஆசனம் தியானம் என்று பரவலாக பேசப்பட்டும் பயிலப்பட்டும் வந்தாலும் சாமானியர்களைப் பொறுத்தவரை இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததே உண்மையான காரணம் ஆகும்.
யோக சாலைகள் வைத்து நடத்தி வருபவர்களும் தாம் நம்பும் ஒரு கருத்தை யோக வகுப்புகள் மூலமாக மக்களிடையே பரப்ப முயலுவதால் சித்தர்களின் அரிய கலையாகிய யோகம், ஒரு மதம் சார்ந்த வழிபாட்டு முறையாகவே மக்களிடையே மனதளவில் நம்பப்படுகிறது.
அப்படி என்றால் சித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னார்கள் ? அப்படி என்னதான் சாமானியர்கள் அறிந்து கொள்ள முடியாத பரம ரகசியம் அதில் இருக்கிறது? யோகம் பற்றிய முறையான புரிதல் ஏற்படவேண்டுமானால் முதலில் சித்தர்களைப்பற்றியும் அவர்களின் நோக்கத்தையும் அறிந்து கொண்டால்தான் முடியும்.
யோகம் என்ற சொல் வடமொழியில் யுச் என்ற சொல்லிற்கு இணையானது. இதற்கு இணைவு என்று பொருள். சோதிடவியலும் கிரகங்கள் ஒன்றாக இணைந்திருப்பதை யோகம் என்றுதான் சொல்கிறது. உதாரணமாக ஒரு சாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்துருப்பதை குரு சந்திர யோகம் என்றும், சந்திரனும் செவ்வாயும் இணைந்திருப்பதை சந்திர மங்கள யோகம் என்றும் கூறுவதுண்டு. அப்படியானால் சித்தர்கள் கூறும் யோகம் எது?
முற்காலத்தில் ஒரு மன்னனுக்குசித்தர்களின் மனதை அடக்கும் ரகசியத்தை கற்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே தனது படை பரிவாரங்களோடு காட்டிலே வாழும் முனிவர் ஒருவரை சந்திக்க அவரது ஆசிரமம் சென்றான். பொன் மற்றும் நவரத்தினங்களை அவரது பாதத்தில் காணிக்கையாக வைத்து, தமக்கு மனதை அடக்கும் சித்த வித்தையை கற்றுத்தருமாறு வேண்டினான். முனிவரும் கற்றுத்தருவதாக வாக்களித்தார். "சரி முதலில் இந்த மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வா !" என்று, அருகில் இருந்த ஒரு சட்டியைக் காட்டினார். அரசனும் அடிபணிந்து சட்டியை கையிலேந்தினான், குரு வாயிற்றே! "நேராக சென்று தடாகத்திலே பூத்திருக்கும் ஒரு தாமரை மலரை கொய்து இதிலே போட்டு எடுத்து வா" என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான்.சட்டியை கீழே வைக்கச் சொன்னார். பின்னர் மன்னனிடம் "இந்த தாமரையைத் தொடாமல் உன்னால் அசைக்க முடியுமா?" என்றார். மன்னன் சற்று யோசித்து விட்டு லேசாக காற்றை ஊதி அந்த தாமரையை அசைத்தான். அனால் முனிவரோ "காற்றை ஊதினாலும் நீ அதை நேராக தொடுவதற்கு சமம். ஆதனால் வேறு வழியை யோசி" என்றார். சில நேரம் யோசித்த மன்னன், முனிவர் எதோ வித்தை கண்பிக்கப்போகிறார், அதனால் குருவிடமே சரணடைந்து விடுவோம் என்று எண்ணி, "குருவே தாங்களே தாமரையை அசைக்கும் கலையைக் கூறுங்கள்" என்றான். லேசாகப் புன்னைகத்தவரே முனிவர் அந்த மண் சட்டியைப் பிடித்து ஆட்டினார். அதனுடன் சேர்ந்து தாமரையும் அசைந்தது!. முனிவர் எதோ வித்தை கற்பிப்பார் என்று எண்ணிய மன்னனுக்கு இது பெரும் ஏமாற்றமாகத் தோன்றியதால் சற்று கோபத்துடன், "குருவே தாங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்களா? “ என்றான்.
எந்த ஒரு சலனமும் இல்லாமல் குரு பேச ஆரம்பித்தார் "நமது உடல் இந்த சட்டியைப் போன்றது, அதிலே உள்ள தாமரைதான் நமது மனம். இந்த இரண்டையும் இணைக்கும் நீர்தான் நமது உடலிலே சதா நேரமும் இயங்கும் பிராணன். இந்த மனதை நேரிடையாகத் தொட முடியாது. ஆனால் சட்டியை அசைத்து எவ்வாறு தாமரையை அசைத்தோமோ அதே போல நமது உடலை அசைப்பத்தின் மூலம் மனதை நமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம்” என்று விளக்கம் அளித்தார். மன்னனும் தனது அறியாமையை ஒப்புக்கொண்டு முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
அதனால் தான் சித்தர்கள் நமது உடலை மண்பாண்டம் என்றும், அது அழியும் தன்மை கொண்டதென்றும், அது உடைந்து அழிந்து போவதற்குள் ஆயுளை நீட்டிக்கும் பிரம்ம ரகசியத்தை, இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஆனந்த நிலையை தேடி அடைய வேண்டும் என்று கூறுகின்றனர்.கடுவெளிச் சித்தர் தமது ஞானப்பாடலில்
"நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
என்று கூறுகிறார்.
இறைநிலையை அளிக்கும் இந்த உடலை நாம் போற்றாமல் அதை வீணாக அழித்து வருகிறோம் என்பதைத்தான் கடுவெளிச் சித்தர் சுட்டிக்கட்டுகிறார்.அழியும் இந்த உடலையும், மனதையும் இணைக்கும் ஆசன, பக்தி, வழிபாட்டு மற்றும் வாழ்க்கை முறைகளையே யோகம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். பதஞ்சலி முனிவரும் தமது யோக சூத்திரத்தில் எட்டு நிலைகளைக் கொண்ட "அட்டாங்க யோகம்" என்னும் யோக நெறிமுறைகளை வகுத்துள்ளார்.சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த அட்டாங்க யோகத்தில் ?
அட்டாங்க யோகம் : உண்மையும் உளறலும் !
சித்தர்கள் பலரும்,  பல வழிகளில் யோகத்தினை விவரித்திருந்தாலும் பதஞ்சலி முனிவர் அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி யோக சூத்திரங்கள்எழுதி உள்ளார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்னவென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.முதல் சூத்திரமே இப்போது யோகம் விளக்கப்படுகிறதுஎன்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார்.
இதையே திரு மூலரும்..
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே!
திருமூலர் திருமந்திரம் பாடல் 551-
இறைவனை அடையவும், இறைநிலை பெறவும் எது சிறந்தது என்பது, பலகாலமாக தர்க்கத்திற்குள்ளாகும் ஒன்று! அந்த நெறி சிறந்தது ! இல்லை இல்லை இது தான் சிறந்த வழி என்று மனதை அலைய விடாமல் அட்டாங்க யோகத்தில் சென்று சமாதியில் கூடினால் இறை ஞானத்தில் இறையுடன் கலக்கலாம் என்பதே திருமூலர் கூறும் மூவாயிரம் பாடல்களின் சாராம்சம்!
இதுமட்டுமன்றி,இறை நிலையை அடைய, இவ்வுடலை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்.
இது அனைவருக்கும் சாத்தியமா? முதலில் இந்த அட்டாங்க யோகம் என்பது என்ன ? சித்தர்கள் சொல்லும் சொல்லிற்கு விலையேதும் இல்லை என்பது நாம் அறிந்த ஒன்று.
அட்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை உடையது! எட்டுப் படிகள் என்றும் கொள்ளலாம் ! இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
1.இயமம்: இயமம் என்றால் நெறி என்று பொருள். அதாவது வாழ்வியல் நெறி. ஒரு எளியவன் தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்தால், அதுவே இயமம். பெரும்பாலும் அடுத்தவருக்கு ஒரு துன்பமும் அளிக்காமல் தனது குடும்பம், தனது தொழில், அன்றாட வேலைகளை நெறி தவறாமல் ஒருவன் மேற்கொண்டு வந்தாலே, இந்த யோக நிலை கை கூடும். சுருங்கச் சொன்னால், கருமமே கண்ணாயிருப்பது !இதுதான் கர்மயோகம்.
2.நியமம்: அட்டாங்க யோகத்தில் இரண்டாம் படியாக சித்தர்கள் சொல்வது, மேலே சொன்ன அதே வாழ்வியல் அடிப்படை கோட்பாடு மட்டுமின்றி, மற்றவர்களைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் மனதில் கொண்டு, சில அனுஷ்டானங்களை, ஆகமங்களை கடைப்பிடித்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் நிலை. தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு வாழ்வது. சுத்தம் (உள் மற்றும் புறம்), இறைவனிடம் சரணாகதி ஆவது, நெற்றியில் பட்டை, நாமம் போடுவது,அண்ணதானம் செய்வது, தீ மிதிப்பது, ஞாயிறு தோறும் தேவாலயங்களுக்கு செல்வது, ஐந்து முறை தொழுவது எல்லாம் இதில் அடங்கும். இன்று பிரதோஷம், சனிக்கிழமை மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று சிலர் சொல்லக் கேட்போம். இது கூட நியம நெறிதான்.மதம், கொள்கை, கடவுள் என்பதெல்லாம் இதிலே உருவான மானுட வாழ்வியல், நியம நெறி முறைகள். மதம் என்ற ஒன்றை நீக்கிவிட்டு அடிப்படையான உண்மையை நோக்கினால் அனைத்தும் பக்தி நிலையே! இதுவே பக்தியோகம்.
3.ஆசனம்: உடலை பாது காக்கும் கலையில் மகத்துவம் வாய்ந்த ஆசனம் ஒருவனுக்கு இறை நிலையை உண்டாக்கும். ஆசனம் என்பது எட்டுப்படி கொண்ட யோகத்தில் ஒரு சிறு படியே!இது மட்டும்தான்மக்களால் பெரும்பாலும் யோகம் என்று நம்பப்படுகிறது. பத்மாசனம், சிரசாசனம் என்று செய்யப்படும் ஆசன முறைகள் அனைத்தும் இதிலே அடங்கும். உடலை உறுதி செய்வதின் மூலம் உயிரை வளர்க்க முடியும், வாழ்நாளை நீட்டிக்க முடியும். இதைத்தான் திருமூலரும் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்கிறார். இதுவே கடயோகம் என்று அழைக்கப்படுகிறது.
4.பிராண யமம்: பிராணன் + யமம் என்று பிரித்தால், பிராண சக்தியை நெறிப்படுத்துதல் என்று பொருள் கொள்ளலாம். பிராணன் தான் உடலை மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மூல சக்தி. மனிதனின் சுவாசத்திற்கும் வாழ்நாளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுமாராக பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கும் ஆமை குறைந்தது முன்னூறு வருடம் உயிர் வாழ்கிறது. இதிலிருந்து பிராணனின் முக்கியத்துவத்தை உணரலாம். மூச்சில் பிராணன் உள்ளது! ஆனால் மூச்சே பிராணன் ஆகிவிடாது! பிராணனை  எளிமையாக சொல்ல வேண்டுமானால், உயிர் சக்தி என்று சொல்லலாம். இந்த உயிர் சக்தியை உடலில் அதிகரிக்கும் பயிற்சிகள் அனைத்தும் பிராணயாமத்தில்அடங்கும்.இதற்கு நாடி சுத்தி பிராணாயமம் என்னும் மூச்சுப்பயிற்சி ஓர் உதாரணம். இதைப்பற்றி மேலும் விரிவாக பின் வரும் அங்கங்களில் பார்ப்போம்.இதுவே வாசியோகம்என்று அழைக்கப்படுவது.
5.பிரத்தி ஆகாரம்: இதற்கு பிரத்தியோகமான ஆகாரம் என்று பொருள். வாயினால் உட்கொள்ளப்படும் உணவு மட்டுமின்றி, ஐந்து புலன்களாலும் நாம் உட்கொள்வதை ஆகாரம் என்றே கருதவேண்டும். கண்களால் பார்த்து அனுபவிக்கும் கட்சிகள், காதால் கேட்கப்படும் ஒலிகள், மூக்கினால் நுகரப்படும் வாசனை மற்றும் உடலால் உணரப்படும் அனைத்தும் ஆகாரமே.  இப்படி ஐந்து புலன்களாலும் உட்கொள்ளப்படும் ஆகாரங்களை, யோக நெறியில் அளவுடன் கடைபிடிப்பது பிரத்தி ஆகாரம் ஆகும். சில யோகிகள் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு வாழ்ந்து இதற்கு உதாரணம்.  இதுவே சிவயோகத்தின் ஆரம்பம்.
6.தாரணை: கண்களை மூடி அமர்ந்து மனதை ஒரு பொருளின்மீது குவித்து செய்யப்படும் யோக சாதனைகள் தாரணை ஆகும். இறைவன் யார்? இந்த ஆத்மா என்பது என்ன? நான்யார்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் உள்ளார்ந்த பயணம் அனைத்தும் இதில் அடங்கும்.
எதாவது ஒன்றை மனதில் உருவகப் படுத்திக் கொள்வது, ஆன்ம தரிசனம் என்ற பெயரில் இறைவனை கற்பனையாக உருவகப் படுத்தி பார்ப்பது எல்லாம் தாரனையே! இங்கு தான் ஒலி, ஒளி, நாதம், சங்கொலி போன்றவை உணரப்படும். இதனால் ஒருவிதமான பரவச நிலையை அடைய முடியும். இன்றும் பலர் இறைவனைக் கண்டதாகவும், அவனுடன் பேசியதாகவும் சொல்லக் கேட்கலாம். இதுவெல்லாம் முறையான அணுகு முறையும் புரிதலும் இல்லாததால் உண்டாகும் பக்க விளைவுகளே! முறையாகச் செய்யப்படும் தாரணையே ஞானயோகம் ஆகும்.
7.தியானம்: சித்தர்களின் யோகக் கலைகளில் மிக அதிகமாக மக்களிடையே பேசப்படுவதும், சித்தர்கள் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் உள்ளதும் இந்த தியானமே ஆகும். தியானம் என்றால் கண்களை மூடி அமர்ந்து செய்வது என்று பெரும்பாலும் நம்பபப்டுகிறது.
அனால் சித்தர்கள் சொல்வதெல்லாம்,  “எதுவுமற்ற, எண்ணமற்ற, ஏகாந்த இறை நிலையே தியானம்” என்பதாகும். சூனியம் என்றும் சொல்வதுண்டு. ஒன்றுமற்ற நிலை. தூங்காமல் தூங்கும் இறைதுயில்!
8.சமாதி: சமம் + ஆதி = இறைவனுடன் இரண்டறக் கலப்பது அல்லது இறை நிலையை அடைவது.
சரி இந்த எட்டுப்படிகளையும் ஒவ்வொன்றாகத்தான் செல்லவேண்டுமா ? இது சாதாரண மனிதனால் சத்தியமான ஒன்றா ? இயமம் முதல் தாரணை வரை தான், யாராலும் செய்யமுடியும். தியானமோ சமாதியோ ஒருவராலும் செய்யமுடியாது! ஏனென்றால் இவைகள் யோகப்பயிற்சிகள் செய்வதினால் அடையப்படும் நிலைகள். இதுவே சித்தர்கள் கூறும் உண்மை !
ஏனென்றால் ஒன்றும் அற்றது தியானம் இதை எப்படி செய்யமுடியும் ? எண்ணமே அற்ற நிலை இதை எப்படி நினைக்க முடியும், ஞாபகத்தில் கொள்ள முடியும் ? அதனால் தான் சித்தர்கள் கண்டவர் விண்டதில்லை ! விண்டவர் கண்டதில்லை !! என்றார்கள். அதாவது அதை கண்டவன் சொல்லமுடியாது! அப்படி ஒருவன் சொன்னால் அவன் அதை கண்டவனில்லை என்பதாகும்.
உண்மை இவ்வாறிருக்க, இன்று தியானத்திலே இறைவனைப்பார்த்தேன், பேசினேன், பயணம் செய்தேன், உயிர், கரு உருவானது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்போம். இவர்கள் அனைவருமே சித்த நிலையை அறியாத மூடர்களே! என்பது சித்தர்கள் சொல்லும் வாக்கு.
இவர்கள் அனைவரும் கண்டதெல்லாம் தாரணையே. தியானம் அல்ல! தூக்கத்தில் நடந்தது நினைவிருந்தால் அது கனவு ! கனவு வந்தால் நாம் ஆழ்ந்து உறங்கவில்லை என்பதே அறிவியல் கூறும் உண்மை! உண்மை இப்படி இருக்க, தியானப் பயிற்சிகள் என்ற பெயரில் தாரணையை மக்கள் மனதில் விதைத்ததின் விளைவாக சித்தர்களின் அறிய பொக்கிஷமான தியானம் இன்று பெரிதும் மக்களுக்கு சென்று சேராமல் உள்ளது. இது மாறவேண்டுமானால் சித்தர்களின் ஆசியோடு, உண்மையான நம்பிக்கையுடன் மனதை அலட்டிகொள்ளாமல், எளிமையான யோகப் பயிற்சிகளின் மூலமாக தியான நிலையை அடைய முற்பட வேண்டும்.
சமாதி நிலை என்பதுவோ, இறை நிலையை அடைவது. அந்த நிலையை நாம் அனைவருமே ஒரு நாள் அடையத்தான் போகிறோம். அதனால்தான் நாம் இறந்ததும் நம்மை சமாதியில் வைக்கிறார்கள். அதாவது இறை வனோடு கலக்கும் நிலையில் மண்ணில் புதைக்கிறார்கள். எங்கிருந்து வந்தோமோஅங்கேயே நம்மைசேர்க்கிறார்கள் !
மேலே சொன்ன அனைத்து நிலைகளும் எல்லா சாமானியர்களும் அறியாமலேயே அனுபவிக்கும் ஒரு ஆனந்த நிலைகள். அனைவரும் கருமம் செய்கிறோம், ஒரு நம்பிக்கை கொண்டிருக்கிறோம், உடலைப் பேணுகிறோம், உணவு  மற்றும் மனக் கட்டுப்பாடு, கனவு ! எல்லாம் உண்டு ! அளவு வேண்டுமானால் குறையலாம் ! பின் எதற்காக திரு மூலர் இதை எட்டுப்படிகளில் ஒன்றாகச் சொல்லவேண்டும் என்பது ஞாயமான கேள்வி! அட்டாங்க யோகத்தில் முதல் ஆறு நிலைகளை பயிற்சி செய்வதின் மூலம் தியானம் மற்றும் சம ஆதி நிலைகளை ஒருவன் அடைய முடியும் என்பதுவே சித்தர்களின் கருத்து.
நாம் வாழும் இந்த வாழ்க்கை மாயை! அதில் மறைந்திருக்கும் இந்த பிரபஞ்ச ரகசியம் மற்றும் இறைவன் யார் ? என்பது ஞானம்! இதை உணர்ந்தால் இறை நிலையில் ஆனந்தமாக இங்கேயே உயிருடன் இருக்கும் போதே வாழலாம் ! இதுவே சித்தர்கள் கூறும் மரணமிலாப் பெருவாழ்வு ! இந்த நிலையை அடைந்தவர்களே ஆனந்தா ! மற்றவர்களை எப்படி சொல்வது ? மட ஆனந்தாக்களே !
சித்தர்களின் சாகாக் கலையாகிய அட்டாங்க யோகத்தை சாமானியர்கள் செய்வது எப்படி? மேலும் தொடருவோம் ...

No comments:

Post a Comment