For Read Your Language click Translate

23 June 2014

சித்தர் நூல்கள்

ஒரு முறை சித்தர்கள் திருக்கூட்டம் சதுர கிரி மலையில் நடக்கும்போது; மகா சித்தரான காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 3,00,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை தான் இயற்றி கொண்டு வந்ததாக அரங்கேற்றினார்.
அப்போது அங்கிருந்த சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்தால் அதைப் படித்தவர்கள் அனைவரும் ஞானியாகிவிட்டால் உலக விருத்தி (காமம் அற்றுப் போய் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால்) இல்லாமல் சித்தர்கள் அனைவரும், பராசக்தியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.
தன்உழைப்பு  வீணானாலும் மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,00,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
அரங்கேற்றினார்.
மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்ததால் அனைவரும் ஞானியாகிவிடுவார்கள்,  என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.
உலக மக்கள் ஞானம் அடைய செய்ய வேண்டும் என்பதற்காக, தான் செய்த உழைப்பு  வீணானாலும், மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 10,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
அரங்கேற்றினார்.
மீண்டும் பழைய கதையே நடந்தது.மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டார்.மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,000 பாடல்களில் எழுதி ,அதற்கு காக புசுண்டர் பெருநூல் காவியம் என்று பெயரிட்டு ,அந்த  ஞான நூலை தனது சீடர்களிடம் பல படி( copy) எடுத்து கொடுத்து;இதை கொண்டு சென்று மக்களிடம் பரப்புங்கள்,எப்படி இருந்தாலும் மீண்டும் சித்தர் சட்டைமுனி கிழித்துப் போடப் போகிறார்,அதற்கு முன்னர் அந்த நூல் மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடட்டும்,என்று கூறி சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும் அரங்கேற்றினார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 278- 282)
மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டு; காக புஜண்ட மகரிஷியே! தாங்கள் சித்தர்களின் முன்னம் அரங்கேற்றி ஆசி பெரும் முன்னர் அதைப் படி( copy) எடுத்து உங்களது சீடர்களிடம் கொடுத்து அனுப்பினாலும் அது ஆயிரம் பாடல்களைக் கொண்டிருந்தாலும்,ஆயிரம் ஆண்டுகள் அந்நூல் பிரபலம் ஆகாது என்று கூறினார்.
அதே போல அந்நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து திருவில்லிபுத்தூர் அறங்காவலர் குழுவில் இருந்த ஆன்மீக அன்பர்கள் சேர்ந்து 1925 ம் ஆண்டு 100 பிரதிகள் வெளியிட்டனர்.அதில் ஒரு பிரதியை எனது தாத்தா வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன்.அந்த நூறில் ஒரு பிரதியைக் கொண்டு தாமரை நூலகம் சென்னை, அதை பல பிரதிகளாக வெளியிட்டனர்.அதை ஆன்மீக அன்பர்கள் வாங்கி படித்துப் பயன் பெறுங்கள்.அவர்களது முழு முகவரி தாமரை நூலகம் ,7,என்.ஜீ.ஓ காலனி,வட பழனி,சென்னை,இவர்கள் சித்தர் நூல்களை வெளியிடுவதில் முதல் நிலையில் உள்ளார்கள்.அவர்களின்
புண்ணியப் பணி மேலோங்கட்டும். சித்தர்களின் ஆசி இவர்களுக்கு உண்டாகட்டும்.
காக புஜண்ட மகரிஷி பல பிரளயங்களைக் கண்டவர்.பிரளய முடிவில் காக உருவம் கொண்டு பறந்து திரிந்ததனால் காக புஜண்டர் எனப் பெயர் பெற்றார்,
ஒரு முறை சிவலோகத்தில் சித்தர்கள் எல்லாம் கூடியிருந்தபோது சிவபெருமானார்க்கு ஒரு சந்தேகம் வந்தது.ஊழி முடிவில் உலகம் அடங்குவது
எங்கே என்று கேட்டார். அப்போது அங்கிருந்த சித்தர்கள் எல்லாம் பல ஊழி முடிவும்,பல பிரளயங்களையும் கண்டவர் மகரிஷி காகபுஜண்டரே! அவருக்கே
இது பற்றித் தெரியும், என்று கூறினர்.
காக புஜண்ட மகரிஷியும் தான் ஊழி முடிவில் கண்ட காட்சியை இந்த காக புசுண்டர் பெருநூல் காவியத்தில் விவரித்துள்ளார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 923)(காக புசுண்டர் ஞானம் 80 ல் பாடல்கள் 40-42)
கூறுகின்றே னென்மகனே வாசி நாதா
குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே எங்கேதான் இருப்பா ரென்று
விமலருந்தான் விஷ்ணுவயும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
கண்டு மிகப் பணிந்து மினிக்  கருது வானே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-40)
கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானுங்
கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்ற னுடைக் கமலந் தன்னில்
ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியாய் எனை அழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-41)
பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற  சித்தருடன் முனிவர் தாமுந்
திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
கூடியே அடைந்திருப்பர் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரு
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-42)
சிவபெருமானார்க்கு ஊழி முடிவில் உலகம் அடங்குவதுஅவரது உந்திக் கமலத்தில் எனக் கண்டேன் எனக் கூறுகிறார் ‘காக புஜண்ட மகரிஷி’
சிவபெருமானார்க்கே ஊழி முடிவில் உலகம் அடங்குவது எங்கே எனக் கூறிய
காக புஜண்ட மகரிஷியின் நூல்களே பல முறை கிழித்தெறியப்பட்டது என்றால் எனது வலைப் பூவில் சித்தர்களின் விதி முறைகளை மீறி என்னால் எதுவும் வெளியிட முடியுமா?
எனவே சித்தர்களின் விதி முறைகளை மீறாமல் அவர்களது பரிபாஷையிலேயே இனி எனது விளக்கங்கள் இருக்கும்
இது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு7ல்)காண்போம்

No comments:

Post a Comment