கர்மபூமி எனப்படுகிற இந்திய மண்ணில் சிவம் பெருக்கும் அருட் சின்னங்களாக வானளாவிய கோபுரங்களும், சிவலிங்கத் திருமேனிகளும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. சில வகை லிங்கங்கள் நம் கண்களுக்குப் புலப்படுக...ின்றன. சிவ லிங்கத்திருமேனிகள் நம் கண்களுக்குத் தெரியாமலேயே போய் விடுவதும், சில காலங்களில் வெளிவருவதுமாக உள்ளன.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார தன்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!-
என்ற கருத்தை உணர்ந்த அரசர் பெருமக்களும் அங்கங்கே சிவாலயங்களைக் கட்டி வைத்து ஆறுகால வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து வைத்தனர். சிவலிங்கத்தைக் கண்ணால் காண்பவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக தரிசித்த பலனை அடை வார்கள் என்று வேதாகமம் சொல்கிறது.
தோஷங்கள், துர்பலன்கள் கெட்ட காலங்களை அகற்றி விடுகிற சக்தி ஒரு சிவ லிங்கத்திற்கு உண்டு. வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்வதால் மங்களகரமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். சுத்தமான ஸ்படிக லிங்கம் எந்த வீட்டில் பூஜை செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் நல்ல நிகழ்வுகளே நடக்கும் என்பது ஆகமவிதி.
சிவலிங்கத்தின் பெருமைகள் பல விதங்களில் பேசப்பட்டாலும் நம் கண்களுக்குத் தெரியாத எட்டு வகைச் சிவலிங்கங்கள், சென்னையின் தென்பாகமான திருவேற்காட்டின் மையப்பகுதியில் எட்டு திக்கு லிங்கங்களாகக் காட்சி தருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியில் காவி உடை அணிந்தவாறு காலை தொடங்கி மாலை நேரத்திற்குள் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்னிக்கோடு, திருநட்டாலம் ஆகிய சிவத்திருத்தலங்களை ஓடி ஓடியே தரிசித்து அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபித்து மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டு வருகின்றனர்.
அதே போல் வேதங்களே வேல மரங்களாய் நிற்கும் வேற்காட்டுத் திருத்தலத்தினை மையமாக வைத்து சிவாலயத் திருவலம் ஆண்டு தோறும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஆன்மீகத் தகவலாக இருக்கிறது.
மணக்கோல சிவனைச் சுற்றி மகாலிங்கங்கள்:-.
குறுமுனிவர் அகத்தியர் ஒரு முறை வேற்காட்டு ஈஸ்வரனை வழிபட வந்தபோது ஈஸ்வரா! எல்லா திருத்தலங்களுக்கும் சென்று தங்கள் திருமேனியை லிங்கவடிவில் மட்டுமே காண்கிறேன். இங்கே என் மனம் நிறையும்படி மங்கள நாயகனாய் மணக்கோலத்தில் தரிசனம் செய்ய அருளக் கூடாதா? என்று கேட்க ஈசனும் மகிழ்ந்து பார்வதி தேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்து அகத்தியரை மனம் மகிழ வைத்தார்.
இதைக் கண்ட பார்வதி தேவி, சுவாமி, தபஸ்விகள் முனிவர்கள் கேட்ட உடனே மங்கள நாயகனாகக் காட்சி தந்து விடும் தாங்கள் சாதாரண மனித ஜீவன்களுக்கு மட்டும் உடனே காட்சி தராமல் காலம் தாழ்த்துகிறீர்களே. இது என்ன தர்மம்ப என்று கேட்டார், உடனே சிவன் தனக்கே உரிய பாணியில் எக்காளச் சிரிப்பை வெளிக்காட்டி விட்டு, தேவி! உனக்கு அஷ்டதிக்குகளிலும் எண்வகை லிங்கத் திருமேனிகளாக யாம் அருட்காட்சி தருவோம் என்று சொல்லி தன் மேனியிலிருந்து எண்வகை லிங்கங்களாகப் பிரிந்து அமர்ந்தார்.
உனக்கு இப்போது திருப்திதானே! என்று கேட்க, உங்கள் கருணை எனக்குத் தெரியாதா! என்று தோளில் சாய்ந்திட இது அருட்பீடம்! அந்தப்புரம் அல்ல! என ஈசன் விலகிட தேவர்கள் சக முனிவர்கள் பூமாரி பெய்தனர்.
அநபாயச் சோழன் அரும்பணி:-
தொண்டை மண்டலத்தை நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்த மன்னர்களுள் அநபாயன் என்ற இரண்டாம் குலோத்துங்க சோழனும் ஒருவன். கி.பி. 12-ம் நூற்றாண்டில் சென்னை குன்றத்தூரில் அவதரித்து, 63 நாயன்மார்களது திரு அவதார வரலாற்றைத் திருத் தொண்டர் புராணமாக எழுதிட சேக்கீழாரை பட்டத்து யானை மேல் அமர வைத்துக் கவரி வீசி வந்ததோடு அவரைத் முதல்-அமைச்சராகவும் ஆக்கிக் கவுரவித்தான்.
அதன் பிறகு தெய்வச் சேக்கிழாருடன் நின்று தொண்டை மண்டல சிவாலயங்களில் அரும்பணி செய்தான். இச்செயலை நினைவு கூறும் வகையில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலுக:குப் பின்புறம் லிங்கோத்பவருக்கு நேராக இன்றும் அழியாத சின்னமாக அநபாயனையும், சேக்கிழாரையும் தெய்வத்துள் தெய்வமாக வைத்துள்ளனர்.
இத்திருத்தலத்தில்தான் 63 நாயன்மார்களுள் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்தார். சிவபூஜை செய்தும் அன்னதானம் செய்தும் சொத்துக்களை இழந்தவர் சூதாடி பொருளீட்டி அன்னமிட்டார். ஆட்டத்தில் தவறிழைத்தவர்களை உடைவாளால் வெட்டினார் சிவப்பணியை மூர்க்கராயினும் செய்ததால் அவர் அருட்பணியைச் சேக்கிழார் பெருமான் மூர்க்கருக்கும் அடியேன் என்று பாடினார்.
காண்பவரது கண்கள் குளிரவும், எண்ணுவோர் செயல் வெல்லவும், வாழ்வில் நிம்மதி கிடைத்திடவும் அஷ்ட லிங்கங்கள் தரிசனததை பவுர்ணமி. அமாவாசை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரே தினத்தில் தரிசனம் செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவோம். எண் திசை லிங்கத்திருமேனிகளும், அஷ்ட ஐஸ்வர்யங்களாக எண் திசைக்காவலர்களாக, அஷ்டதிக் கஜங்களாக, அஷ்டமாசித்திகளையும் அருளிட, வள்ளிக் கொல்லைமேடு தொடங்கி சின்னக் கோலடி வரை காத்திருக்கின்றன.
1.விருப்பம் பூர்த்தியாக்கும் இந்திரலிங்கம்-
வேத புரிஸ்வரர் ஆலயத்திலிருந்து நேர் கிழக்காக இந்திரன் பூஜை செய்த இந்த ஈஸ்வரன் அமைந்திருக்கும், இடம்தான் வள்ளிக் கொல்லைமேடு. இந்திர சேனாபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். பதவி உயர்வு, அரசாங்க நன்மை ஆகிய பலன்களை அருள்பவராக விளங்குகிறார். சுவாமி முன் நெய்தீபம் ஏற்றி வைத்து கீழ் கண்ட பாடலை பாடினால் நினைத்தவை நடக்கும்.
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன்வதனம் நான்கும்
பாலிமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அணைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற்காக்க
2. துயரங்களை விரட்டும் அக்னிலிங்கம்-
குறுமுனிவர் அகத்தியரால் பூஜை செய்யப்பட்ட இந்த ஈஸ்வரன் நூம்பல் என்ற திருத்தலத்தில் அமர்ந்து அருள் வழங்கி வருகிறார். எதிரித் தொல்லை, வழக்கு இடர்களை நீக்கி ஆனந்தம் தருபவராக விளங்குகிறார். நெய்தீபம் ஏற்றி வைத்து இறைவன் முன் பாட வேண்டிய துதி
பங்கயத் தலிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்கு நற்பூத சித்தி அடைவுடன் செய்த பின்னர்
கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே.
3. தர்மம் காக்கும் எமலிங்கம்:-
மரகதாம்பிகை என்ற தேவியுடன் கைலாச நாதர் என்னும் திருநாமத்தில் பூவிருந்தவல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் வலது புறமாக சென்னீர்குப்பம் என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளார். தர்ம வடிவினராய்த் தோஷங்கள் நீக்கி ஏற்றம் தரகாத்திருக்கிறார். முற்றிலும் கருங்கல்லால் ஆகிய இந்த திருத்தலத்தில் வழிபட்டால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்தாட்டமச்சனி விலகும் இரும்பு தொடர்பான தொழிலில் உயர்நிலை அடையலாம்.
இவர் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை கூன் மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே ஆன் வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற்காக்க என்று துதிக்க வேண்டும்.
4. நிர்கதியாரை நிமிர்த்தும் நிருதிலிங்கம்:-
தேவி பாலாம்பிகை உடனுறையும் பாலீஸ்வர சுவாமி என்ற திருநாமத்துடன், வேற்காட்டீசருக்குத் தென் மேற்குத் திசையில் பாரிவாக்கம் என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளார். இன்றைக்குச் சுமார் 2320 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த லிங்கம் ஸ்தாபனம் செய்யப்பட்டதாகத் தலவரலாற்றுக் குறிப்பு உள்ளது.
ஆவடி-பூந்தமல்லி சாலைஅமைந்துள்ள இந்த திருத்தலத்தில் தீராத துயரத்தில் சிக்கி நிர்கதியாய் நிற்பவர்கள் நெய்தீபம் ஏற்றி வலம் வந்தால் கொடுத்த கடன் திரும்பி வரும் உறவினர் அனுகூலம் ஏற்படும். கீழ்காணும் பாடலை பாடி ஈசனை துதிப்பது நல்லது.
வளமறை பயிலு நாவன் நா மணி கண்டன்
களம் அடு பினாகபாணி கையினை தருமவாகு
கிளர்புயன் தக்கன்யாகம் கெடுத்தவன் மார்புதூய
ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்.
5. நல்ல நேரத்தை தரும் வருண லிங்கம்:-
அருள் நிறை தேவியான ஜலகண்டீஸ்வரி உடனுறையும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி என்ற திருநாமத்தில் பாளையம் என்ற புண்ணிய பூமியில் வெட்ட வெளிச்சிவனாக அருள்தருகிறார். பெரிய கொடிய நோய்கள் தீர, குழந்தைப் பேறு அடைய நெய் தீபம் ஏற்றி கீழ்காணும் பாடலை பாட வேண்டும்.
திவண் மறி அக்கமாலை செங்கையோர் இரண்டும் திங்க
அவிர் தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
களிநிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
கவனமா மேனிச் சத்தியோ சாதன் மேற்றிசையில் காக்க.
6. வாழ வைக்கும் வாயு லிங்கம்:-
வேற்காட்டவர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில் விருத் தாம்பிகை சக்தியோடு வாழவந்த வாயு லிங்கேஸ்வரராக அருள் தருகிறார். ஆலயத்தின் அருகே இலவம்பஞ்சு மரங்கன் இருக்க அதிலிருந்து வெடித்துச் சிதறும் பஞ்சுகள் சிவலிங்கத்தின் மேல் படுவதால் பருத்திப்பட்டு என்ற திருப்பெயர் இத்தலத்திற்கு வந்தது. ஆவடி சாலையில் அமைந்துள்ள இந்த ஈசனின் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வணங்கினால். சூன்யங்கள் விலகும் இழந்த பொருள், சொத்துக்களை திரும்ப பெறலாம். காற்றில் படரும் நோய்கள் தீரும்.
கடையகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலை செய்து அமலை தானம் அறை தர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளை தாபத்தில் எறிதரு சூறைக்காற்றில்
தடைபடா தெம்மை இந்தத் தடங்கல் உலகிற்காக்க.
7. செல்வம் தரும் குபேர லிங்கம்:-
சக்தி தேவியார் வேம்பு நாயகி என்ற திருநாமத்துடன் குபேரபுரீஸ்வர லிங்கராக, ஆவடி-திருவேற்காடு சாலையில் வடதிசைச் சிவனாக அருள் தருகிறார். மூன்று நிலை ஏகதன விமானக் கருவறையுடன், வாயுதேவர், துர்கை, கால பைரவர் சத்ய நாராயணர், நவநாயகருடன் காட்சி தருகிறார்.
சுந்தரன் என்ற சோழ மன்னன் அழகாக ஆட்சி புரிந்தமையால் சுந்தரா சோழ புரமாக ஆயிற்று என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. செல்வப்பேறு அடைய சொத்து வில்லங்கம் அகல சுவாமி முன் நெய் தீபம் ஏற்றி துதிபாடி வழிபட வேண்டும்.
கறை கெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறை தரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
பொறை கொள் நான் முகத்து முக்கன் பொன்னிற மேனியோடும்
மறை புகழ் வாம தேவன் வடதிசை அதனிற் காக்க.
8. காரிய தடை நீக்கும் ஈசான லிங்கம்:-
வேதபுரீஸ்வரர் கோயில் கொண்ட திருவேற்காடு தலத்திலிருந்து வடகிழக்கு திசையில் கோலடி சாலையில் சின்னக்கோலடி என்ற இடத்தில் வெட்டவெளி ஆகாச சிவலிங்க மூர்த்தியாக ஞானேஸ்வரி உடனுறை ஈசானாக லிங்கர் அருள் தருகிறார். இங்கே லிங்கம் மட்டுமே உள்ளது. ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும் மன்னர்கள் இந்த இடத்தில் தான் காரியத்தைத் தொடங்கினார்கள் என்று கால வரலாறு கூறுகிறது.
இந்த ஈசனை வழிபட்டால் காரியத்தடை, கண் திருஷ்டி, வீடுகட்ட தடை, வண்டி வாகனங்களில் லாபம் இல்லாமை ஆகியவை விலகி நலம் பெறலாம் இறைவன் முன் நெய்யும் நல்லெண்ணெயும் கலந்த தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா நன்மையையும் கிடைக்கும்.
அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களிற் றவன மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும் பொங்கும் காக்க
திருமுறைப் பதிகங்கள் சிவவழிபாட்டுத்துதிகளை சில லிங்க மூர்த்தி ஆலயங்களில் வழங்குகிறார்கள்.
No comments:
Post a Comment