For Read Your Language click Translate

21 June 2014

பாம்புத் தோழன்!



'பாம்பு ரதிஷ்’ என்றால் கோவையில் பலருக்கும் தெரிகிறது. 'சேவ் அவர் ஸ்நேக்ஸ்’ என்கிற அமைப்பை நடத்திவரும் ரதிஷ், ராஜ நாகம் தொடங்கி மலைப் பாம்பு வரைக்கும் லாகவமாக ஹேண்டில் செய்கிறார்.
சமீபத்தில் கோவை, ராக்கிபாளையத்தில் ஒரு கரும்புத் தோட்டத்தில் அநியாயத்துக்கு உப்பிப்போய் வளைந்து நெளிந்துகொண்டு இருந்தது மலைப் பாம்பு ஒன்று. அரை மணி நேரத்தில் டீம் உறுப்பினர்களுடன் அங்கு ஆஜராகிறார் ரதீஷ். ஏதோ ஒரு பெரிய விலங்கை விழுங்கிவிட்ட அந்த மலைப் பாம்பு இரையை வெளியேற்ற முயல்கிறது.  ரதீஷ் டீம், பாம்பின் தலையைக் குழந்தைபோல் தூக்கி கையால் வாயைத் திறந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள். இரை கொஞ்சமாக உள்ளே போகிறது. ஆனால், பாம்பு  உடலை முறுக்க... திரும்பவும் வெளியே வருகிறது இரை. திரும்பவும் வாய்க்குள் தண்ணீர் ஊற்றுகிறார்கள். ஆனாலும் பலன் இல்லை. 'தொப்' என்று வெளியே வந்து விழுந்தது இரை. பார்த்தால், அது நன்கு வளர்ந்த ராஜபாளையம் நாய். தோட்டத்துக்குக் காவல் இருந்ததாம்!
தொடர்ந்து பாம்பை  அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய் விட்டார்கள். ரதீஷிடம் பேசினேன். ''இரை எடுத்த பிறகு பாம்பின் நகரும் வேகம் குறையும். அதுவும், இவ்வளவு பெரிய நாயை விழுங்கிய பாம்பின்  வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தப் பாம்பு மக்களைப் பார்த்ததும் உயிருக்குப் பயந்து நகர ஆரம்பிச்சிருக்கு. ஆனா, வயிற்றில் பெரிய இரை இருந்ததால் வேகமாக நகர முடியலை. அதனால்தான், இரையைத் துப்பிட்டுத் தப்பிக்கப் பார்த்தது. அதனால்தான், நாங்க இரையைத் துப்பவிடாமத் தண்ணீரை ஊற்றினோம். ஆனால், முடியாமப்போச்சு.
மலைப் பாம்பின் உடல் எலாஸ்டிக் தன்மை உடையது. அதன் மேல் மற்றும் கீழ்த்தாடைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்காது. அதனால், மலைப் பாம்பால் வாயை அகலமாகத் திறந்து பெரிய இரையை விழுங்க முடியும். உடம்பின் எலாஸ்டிக் தன்மையால்  விழுங்கிய இரையை மெதுவாக பாம்பு உள்ளே இழுத்துக்கொள்ளும். இரையை எடுத்ததும் மலைப் பாம்பு தண்ணீர் குடிச்சே ஆகணும். அதிகபட்சம் எட்டு நாளில் இரை செரிமானம் ஆகிடும். இரையைச் சாப்பிட்ட பிறகு ஆறு மாசத்துக்குப் பாம்பு இரை எடுக்காதுனு கருத்து இருக்கு. அது தவறு. ஆறு மாசம் வரை இரை இல்லாமல் மலைப் பாம்பு உயிர் வாழ முடியும் என்பதே சரி.
பாம்புகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று.  மிக அரிதான பிரைடல் பாம்பு, மலைவாழ் பூனைப் பாம்பு  இவற்றைக்கூட  கோவையில் நாங்க பிடித்து இருக்கோம். பூனைப் பாம்பு, பூனையைப் போலவே பதுங்கிப் பதுங்கி மெதுவாக முன்னேறி, திடீர்னு பாய்ந்து இரையைப் பிடிக்கும். எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் இல்லை. நாகப் பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் போன்ற பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. கட்டு விரியன் ராத்திரியில் மட்டும்தான் நடமாடும். கட்டுவிரியன் கடிச்சா கடிபட்ட இடம் தெரியுமே தவிர வலி தெரியாது. பலர் விஷயம் புரியாமலேயே இறந்து போவாங்க. பாம்பு பால் குடிக்காது உண்மைதான். ஆனா, முட்டை சாப்பிடும். மரங்களில் ஏறி பறவைகளின் முட்டையை அப்படியே முழுசா விழுங்கிடும்.
பாம்பு குடி இருக்கிற கரையான் புற்றுகளை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். தோட்டத்தின் நடுவில் இருக்கிற புற்றுகளில்தான் பெரும்பாலும் பாம்பு இருக்கும். புற்றுகளின் வாய்ப் பகுதியில ஒட்டடை படிந்தும், புற்றின் மீது செடிகள் முளைத்து இருந்தாலும் பாம்பு அதில் இல்லைனு தெரிஞ்சிக்கலாம்'' என்கிறார் ரதிஷ்.
- எஸ்.ஷக்தி
    விகடன்

No comments:

Post a Comment