கீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும் இந்த அமைப்பு நமது பழம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. கண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெளியேற்றி பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்குத் தான் இந்த ஏற்பாடு.
இந்த சிறிய துளையின...ை எளிதாக அடைக்கவும் முடியும், திறந்து நீர் வெளியேற்றவும் முடியும். இந்த துளைக்கு கீழாக கடுமையான பாறையினால் ஆன சுமார் 1x1 அடி இடைவெளி உள்ள ஒரு சுரங்க வழி உள்ளது. இந்த சுரங்க வழி கண்மாயின் கரைக்கு அப்புறம் உள்ள பாசன வாய்க்கால்களை சென்று சேர்கிறது. இதன் மூலம் நீர் வெளியேற்றுதல் எளிதாக அமைகிறது.
இந்த துளையின் பெயர் சுருங்கை! மதுரை அருகே உள்ள கொடிக்குளம் கண்மாயில் கள ஆய்வில் எங்கள் கண்ணில் பட்டது. அப்போது அதிசயத்துப் பார்த்தோம். கண்டிப்பாக இது நீர் வழிப் பாதையாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் இந்த அமைப்பு உருவான கால கட்டம், ஆதாரம் எங்களுக்கு தெரியவில்லை.
இப்போது இதோ இதன் பழமையும், தொழில் நுட்பமும் எங்களுக்கு தமிழர்களின் பழம்பெரும் நூலான மணிமேகலையின் மூலம் தெரிய வருகிறது!
"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''
- #மணிமேகலை
"சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.
பழந்தமிழரின் நீர் மேலாண்மையும் தொழில் நுட்பமும் உங்களை வியப்படையச் செய்திருந்தால், பகிரவும்!.
படம்: திரு செல்வம் ராமசாமி அவர்கள், விழித்தெழு மதுரை நண்பர்கள்
No comments:
Post a Comment