For Read Your Language click Translate

11 June 2014

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 10



கடந்த வாரம் ஹர்ஷத் மேத்தாவின் மற்றொரு ஊழல் கதையை பார்த்தோம். இது ஒன்றும் பெரிய ஊழல் அல்ல. ஆனால் மறுபடியும் தன்னால் பங்குச்சந்தையை ஏமாற்ற முடியும் என்று ஹர்ஷத் மேத்தா நிருபித்தான். அவனது தம்யந்தி நிறுவனம் (Damyanti Finvest) BPL, விடியோகான், ஸ்டெரிலைட் போன்ற நிறுவனங்களின் பங்குகளை கூட்டணி அமைத்து வாங்கின. கூட்டணிக்குள்ளேயே பங்குகளை வாங்கி இந்தப் பங்குகளின் விலையை உயர்த்தினார்கள். சில பங்குகளை மட்டும் தான் இவர்களால் வாங்க முடிந்தது. ஆதனால் குறியீடு இந்த ஊழல்
நடந்த காலங்களில் சரிந்து கொண்டு தான் இருந்தது.
வழக்கம் போல் எல்லாம் முடிந்தவுடன் தான் இந்த ஊழல் கதையை பற்றி SEBI விசாரிக்கத் தொடங்கியது. இந்தப் பங்குகளை கூட்டணி அமைத்து வாங்கியவர்களால் இறுதியில் பங்குச்சந்தைக்கு செட்டில்மெண்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, செட்டில்மெண்ட் செய்ய முடிய வில்லை. பிரச்சனை வெடித்தது. பத்திரிக்கைகள் இது பற்றி எழுதின. SEBI விசாரிக்க தொடங்கியது. வழக்கம் போல் வழக்குகள், விசாரணைகள்.
1992 ஊழலுக்குப் பிறகு சுமார் 44 வழக்குகள் ஹர்ஷத் மேத்தா மேல் பதிவு செய்யப்பட்டது. பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. மாருதி நிறுவனத்தின் 38 கோடி ரூபாயை கையாடல் செய்த வகையில் ஹர்ஷத் மேத்தாவிற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. ஆனால் தான் அந்தப் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறி ஹர்ஷத் மேத்தா உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தான். ஹர்ஷத் மேத்தா உயிருடன் இருந்த வரையில் இந்த ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழக்கிலும் குற்றம் நிருபிக்கப்படவில்லை.
ஹர்ஷத் மேத்தா இந்தியப் பங்குச்சந்தையின் ஊழலுக்கு வித்திட்டவன் என்றாலும் அந்த ஊழல் மூலமாக பல பங்குச்சந்தை சீர்திருத்தங்களுக்கும் வித்திட்டவன். பல ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
1992 ஊழலுக்கு பிறகு அடைக்கப்பட்ட ஒரு முக்கியமான முறை பட்லா - Badla முறையிலான பங்குவர்த்தகம். இந்த முறை மாற்றப்பட்டு இப்பொழுது டிரைவேட்டிவிஸ் முறையிலான வர்த்தகம் கொண்டு வரப்பட்டுள்ளது. Carry-Forward முறையிலான செட்டில்மெண்ட் முறை மாற்றப்பட்டு Rolling முறையிலான செட்டில்மெண்ட் கொண்டு வரப்பட்டது.
அது என்ன பட்லா முறை ?
உங்களிடம் பணம் இல்லாமல் கூட பங்குகளை வாங்கலாம். உதாரணமாக நீங்கள் 100 இன்போசிஸ் பங்குகளை வாங்க வேண்டுமென்றால் உங்களிடம் முழுமையாக பணம் இருக்க வேண்டுமல்லவா ? தற்பொழுது பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் பணம் இல்லை. அதற்கு தான் இந்த பட்லா முறை பயன்பட்டது.
இந்த முறை அமலில் இருந்த பொழுது ஒவ்வொரு சனிக்கிழமையும் பங்குச்சந்தை நிர்வாகமும், புரோக்கர்களும் கூடி எந்தப் பங்குகள் அதிக டிமேண்டில் இருக்கிறதோ, அந்த பங்குகளுக்கு இவ்வளவு பட்லா ரேட் என்பதை முடிவு செய்வார்கள். அதாவது நீங்கள் 100 இன்போசிஸ் பங்குகள் வாங்குகிறீர்கள். அதனை செட்டில்மெண்ட் செய்வதற்கு உங்களிடம் பணம் இல்லை. இந்த பட்லா முறை மூலம் பணம் பெற்றுக் கொண்டு இந்தப் பங்குகளை அடுத்த செட்டில்மெண்ட் வரை கொண்டு செல்லலாம். இந்தப் பணத்திற்கு வட்டி என்று சொல்லப்படும் பட்லா ரேட்டை தரகர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை அடுத்த செட்டில்மெண்ட் வரை கொண்டு செல்வதால் இதற்கு Carry-Forward முறை என்றும் சொல்வார்கள்.
இந்த முறையை கொண்டு 1992 ஊழலில் பங்குகள் பரிமாற்றத்தில் ஏராளமான தகிடுதத்தங்கள் நடந்ததால் இது தடை செய்யப்பட்டு பின்பு சில திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்பொழுது டிரைவேட்டிவிஸ் கொண்டு வரப்பட்டு இந்த முறை தடை செய்யப்பட்டு விட்டது.
1992, 1998, 2000 என்று பல ஊழல்களை பங்குச்சந்தை சந்தித்தது. முதல் இரண்டும் ஹர்ஷத் மேத்தா, கடைசி பங்குச்சந்தை ஊழலின் கதாநாயகன் கேத்தன் பரேக். இது தவிர நடந்த மற்றொரு ஊழல் UTI பரஸ்பர நிதியின் US-64  திட்டத்தின் மூலம் நடந்த ஊழல். இந்த ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 2 கோடி சிறு முதலீட்டாளர்கள். இப்படி வரிசையாக நடந்த ஊழலுக்கு வித்திட்டவன் என்ற முறையில் தான் ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் கதையை கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது. இனி மேலும் இது போன்ற ஊழல் கதைகள் நடக்காமல் இருக்குமா ? யாருமே உறுதியாக கூற முடியாது. நிதி போன்ற சிக்கலான கணக்கு வழக்குகளில் இருக்கும் சில ஓட்டைகளை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நடந்த சில ஊழல்களில் மும்பை பங்குச்சந்தை நிர்வாகத்தின் பங்கு, UTI போன்ற ஊழல்களில் கண்காணிப்பு அமைப்புகளான SEBI போன்றவற்றின் அலட்சியம் என நாம் பாதுகாப்பை நாடும் சில அமைப்புகள் கூட தங்களது கடமையை மறந்துப் போன நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தற்பொழுது ஒரளவிற்கு இந்த கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டாலும், அவர்களை மட்டுமே கண்காணிப்பிற்கு நம்பி இருக்க கூடாது. நம்முடைய முதலீடுகளும் நல்லப் பங்குகளை நோக்கி தான் இருக்க வேண்டுமே தவிர எந்தப் பங்குகள் விலையேறுகிறதோ அந்தப் பங்குகளை வாங்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்க கூடாது.
2001, நவம்பர் மாதம் ஹர்ஷத் மேத்தா மறுபடியும் கைது செய்யப்பட்டான். சுமார் 250 கோடி மதிப்புள்ள ஹர்ஷத் மேத்தாவிற்கு சொந்தமான 27 லட்சம் பங்குகள் 1992ம் ஆண்டு அக்டோபர் -ஜூன் மாதங்களில் காணமல் போய் விட்டதாக ஹர்ஷத் மேத்தா கூறினான். ஹர்ஷத் மேத்தாவிற்கு சொந்தமான இந்தப் பங்குகள் 1992 பங்குச்சந்தை ஊழலின் பொழுது முடக்கப்பட்டவை. இந்தப் பங்குகள் தான் தன்னிடம் இருந்து திருடப்பட்டு விட்டன என ஹர்ஷத் மேத்தா கூறினான். இதனை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் பொழுது இந்தப் பங்குகள் யாராலும் திருடப்படவில்லை. மாறாக இந்தப் பங்குகளை பலருக்கு மாற்றி அதனை பங்குச்சந்தையிலேயே ஹர்ஷத் மேத்தா விற்று விட்டதாக தெரிய வந்தது. இந்த வழக்கில் ஹர்ஷத் மேத்தா மற்றும் அவனது சகோதர்கள் கைது செய்யப்பட்டு 2001 நவம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு 1991 தொடங்கி ஒரு பத்தாண்டுகளுக்கு ஹர்ஷத் மேத்தாவின் சாகசங்கள் நடந்து கொண்டே இருந்தன. இன்னும் எத்தனை சாகசங்களை தான் இந்த காளை நிகழ்த்துவானோ என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அதற்கு ஒரு முடிவு நெருங்கியது.
2001, டிசம்பர் மாதம் 31 நள்ளிரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஹர்ஷத் மேத்தா தானே மத்திய சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தான். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ள ஹர்ஷத் மேத்தா அன்று அரை மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்தான். மருத்துவமனையில் கூட உற்சாகமாக காணப்பட்ட ஹர்ஷத் மேத்தாவிற்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்யும் பொழுதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடியும் பலனில்லாமல் அவனது உயிர் பிரிந்தது.
புகழின் உச்சியில் இருந்த பொழுது 15,000 அடி பரப்பளவு உள்ள பெரிய வீடு, நீச்சல் குளம், கோல்ப் மைதானம், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என்று வசதியாக வாழ்ந்தவன், இறக்கும் பொழுது ஒரு சாதாரண மருத்துவமனையில் சோகமாக உயிரிழந்தான்.
இந்தியப் பங்குச்சந்தையில் பணம் பெருக்க பல வழிகள் உண்டு என்பதை உலகுக்கு காண்பித்தவன் இறுதியில் எதையுமே கொண்டு செல்லாமல் பரிதாபமாக மரணத்தைச் சந்தித்தான்.
(முற்றும்)


 

No comments:

Post a Comment