For Read Your Language click Translate

Follow by Email

07 May 2014

மாயன் பகுதி-45

2012 உலகம் அழியுமா? இல்லை.. இருக்காது என்ற உங்களின் நம்பிக்கையின் ஆனிவேரை அசைத்துப் பார்க்கும் ஆய்வு!
மாயன் பகுதி-45

மாயாவின் அழிவுக்குக் காரணமாக யார் இருந்தார்கள் என்ற கடந்த பகுதியின் கேள்வியுடன், மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மாயா! மாயா இனத்தவர் சொன்ன உலக அழிவைப் பற்றிப் பேசும் நாம், மாயாக்கள் பற்றிய சரித்திரத்தை சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா. அறிவியல், கணிதம், கட்டடக் கலை, வானியல், விவசாயம், சித்திரம், சிற்பம் என்னும் பன்முகத் திறமை பெற்றிருந்த மாய...ன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சரியமான ஒரு முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்க முடியாத, சகிக்க முடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது. மாயன்களிடம் இதுவரை நாம் பார்த்த முகங்கள் எல்லாமே நல்ல முகங்கள். ஆனால் அந்த மற்ற முகமோ மிகக் கொடுமையானது, கொடூரமானது.

மாயன் இனத்தவர்கள் கடவுள் பக்தி மிகவும் அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகப்படியான கடவுள் பக்தியே, அவர்களைக் காட்டுமிராண்டிகள் எனப் பார்க்கும்படி வைத்தது. உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால், மாயன்கள் கடவுளுக்குச் செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை. அது என்ன தெரியுமா…? மனிதர்களின் தலைகளும், இருதயங்களும்தான்.
உயிருடன் இருக்கும் ஒரு மனிதனை, ஒரு பீடத்தில் படுக்க வைத்து, அவன் இருதயத்தை நோக்கிக் கத்தியைச் செலுத்தி, இருதயத்தை வெளியே எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒரே வெட்டாகத் தலையைத் துண்டிப்பதும் மாயன்களின் வெகு சாதாரணமான ஒரு வழிபாட்டுமுறை. மாயன்கள், இந்து மதத்தைப் போலவே, பல கடவுள்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். சிலை வணக்கமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் வணங்கும் கடவுள்களில், முக்கியமான கடவுள்களுக்காகப் பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படிக் கட்டப்பட்ட பிரமிடுகளின் உச்சிகளில்தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களைக் கொண்டு சென்று, அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து……… கூரிய வாளால் கழுத்தில் ஒரே போடு………..! வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.

“இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக, அறிவாளிகள் போலப் பார்க்கப்பட்ட மாயாக்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா?” என நீங்கள் இப்போது முகம் சுழிப்பீர்கள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாகரீகத்தில் வளர்ந்த நாம் அதைக் கற்பனைகூடப் பண்ண முடியாது என்பதால் முகஞ்சுழிக்கிறோம். ஆனால் இந்த நரபலி முறை அந்தக் காலத்தில் எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது. எங்கள் இந்து மதத்திலும் இருந்திருக்கிறது. போருக்குச் செல்லும்போது ஒவ்வொரு அரசனும், தன் போர் வீரன் ஒருவனை நரபலியாக கொடுத்துவிட்டே சென்றிருக்கிறான் என்பது வரலாறு. சாக்தம், பைரவம் என்னும் இந்து மதப் பிரிவு மதங்களில், இந்த நரபலி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ‘கால பைரவன்’ என்பவரே நரபலி கேட்பவர்தான். அதிகம் ஏன், இன்றும் கூட காசியில், கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் தவம் செய்யும் ‘அகோரிகள்’, எரியும் பிணத்தை உண்ணுவது உண்டு. சமீபத்தில் ‘நான் கடவுள்’ என்னும் படத்தில், நடிகர் ஆர்யா கூட ஒரு அகோரியாகத்தான் வருகிறார். இதைச் சொல்வதால் நரபலியை நான் நியாயப்படுத்துவதாக அர்த்தம் கிடையாது. ஆதிகாலத்தில் இது தப்பான ஒரு விசயமாக கருதப்படவில்லை என்பதையும், தெய்வீகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படது என்பதையுமே சொல்ல வருகிறேன். இதில் மாயன்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.

“அட..! அப்படியென்றால் இந்து மதமும், மாயாக்களும் மட்டுமே நரபலியைக் கொடுப்பவர்களா?” என்று நீங்கள் கேட்டால், “அப்படி இல்லை. இது அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறது” என்றே பதில் சொல்ல வேண்டும். கிருஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களுக்குச் சொந்தமான வேதங்களிலும் இந்த நரபலி இருந்திருக்கிறது. தீர்க்கதரிசியான ஆபிரகாம், அவரது மகனான ஈசாக்கை கடவுளுக்குப் பலி கொடுக்க மலையுச்சிக்கு அழைத்துப் போனதும், பலி கொடுக்கப் போகும் கடைசிக் கணத்தில் கடவுள் அதைத் தடுத்ததும் வேதத்தில் இருக்கிறது. யூத, கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் வரலாறுகளிலும் நரபலியின் அடையாளங்கள் இருந்திருக்கின்றன.

ஆனாலும் மத ரீதியாக எங்கள் மூதாதையர்கள் நரபலி கொடுத்த போது, தெய்வீகமாகப் பார்க்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது, மாயன்கள் செய்த போது கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அதுவே அவர்களின் வரலாறு அழிவதற்கும் காரணமாகியது. இந்தக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாயனை, மாயன் கலாச்சாரத்தை, மாயன் மதங்களை என அனைத்தையும் அழிக்க, மேற்படி ஒரு மனநிலை திட்டமிட்டே விதைக்கப்பட்டது. மாயன் என்றாலே மிகவும் கொடூரமானவர்கள் என்னும் அபிப்பிராயம் ஆதிகாலத்தில் இருந்தே புகுத்தப்பட்டது. இப்படி ஏன் புகுத்த வேண்டும் என்று ஆராய்வதற்கு முன்னர், நாம் ஒரு ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் பற்றிப் பார்க்க வேண்டும்.
2006ம் ஆண்டு ‘மெல் கிப்சன்’ (Mel Gibson) என்பவரால் ‘அபோகலிப்டோ’ (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. “மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!” என நீங்கள் நினைக்கலாம்

அடுத்த பகுதியில் தொடரும்..
from - திரு.ராஜ்சிவா நன்றி
இதில் நான் செய்தது பகிர்தல் மட்டுமே..
இங்கு வரும் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியவர் http://www.facebook.com/rajsivalingam?fref=pb
See Moreமுகநூலிலிருந்து . . .