For Read Your Language click Translate

Follow by Email

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 05.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 05.

மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனே கணினியில் உருவாக்கக் கூடிய ஒளிப் புள்ளிகளைக் காட்டி, ஏலியன் என்று நான் சொல்லும் போது, நீங்கள் சிரிப்பதில் ஒன்றும் தப்பே கிடையாது. பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் அப்படித்தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் அந்த விசயத்தில் அவர்களுக்கு நெருடியது ஒன்றுதான். "அது எப்படி, வெவ்வேறு இடங்களில், ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்காத வேறு வேறு மனித...ர்கள், வேறு வேறு வயதையுடையவர்கள் ஒரே மாதிரியான பொய்யை இட்டுக்கட்டிக் கூற முடியும்? அதுவும் வீடியோக்களாகக் கூட எடுத்திருக்கின்றனர். அனைவரும் கிராஃபிக்ஸ் செய்தார்களா". அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்த போது, அவற்றில் குறிப்பிட்ட சில வீடியோக்கள்தவிர்ந்து, வேறு எவையுமே எந்த கிராஃபிக்ஸும் செய்யப்படாதவையாகவே இருந்தன.

இந்த வெளிச்சப் பந்துகள் விசயத்தில் ஊரே கூடி நின்று பொய் சொல்கின்றதோ எனச் சந்தேகப்பட்ட மீடியாவினர் சிலர், அவை தோன்றுவது உண்மைதானா என்று ஆராயத் தங்கள் வீடியோக் கேமராக்களை ஆயத்தம் செய்து இரவினில் காத்திருந்தார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வெளிச்சப் பந்துகள் தோன்றி அலையத் தொடங்கின. இதில் ஆச்சரியம்என்னவென்றால், அந்த வெளிச்சப் பந்துகள் இரவு, பகல் இரண்டு நேரங்களிலும் தோன்றுவதுதான். அதன் உச்ச கட்டமாக, அந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியதை அறிந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் அவற்றை நோக்கிப் பறந்து சென்று அணுகியபோது, அவை மறைந்து போனதும் நடந்தது. இந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஒரு முறையல்ல, பல முறைகள் நடந்தன. இவற்றையும் கூட வீடியோவாக மீடியாவினர் படமெடுத்திருக்கின்றனர்.

"சேச்சே! எல்லாமே பொய். இந்த பயிர் வட்டங்களே மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. வெளிச்சப் பந்துகள் உருவாவது உண்மைதான். ஆனால் அவை காற்றில் பறக்கும் பூக்கள் அல்லது வேறு பொருட்கள்" என்று அதை மறுப்பவர்களின் குரல்களும் இடையே ஒலிக்கத்தான் செய்கின்றன. மறுப்பவர்களும் தங்கள் சார்பாக, பலமான சாட்சியங்களை முன் வைத்து அவற்றைப் பொய் என்று மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்து கொண்டிருப்பவற்றையெல்லாம் என்ன வகையில் எடுத்துக் கொள்வது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போதுதான், உலகமே பயிர் வட்டங்கள் சார்பாகஅதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. அதுவரை பயிர் வட்டங்களை ஒரு பேச்சுக்குக் கூடக் கவனத்தில் எடுக்காத மீடியாக்கள் உட்பட, உலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் அலறியடித்து அந்த இடம் நோக்கி ஓடி வந்தன. அந்த இடம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடமாக இருந்தது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஷில்போல்டன் (Chilbolton) என்னும் இடத்தில், இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமான 'ரேடியோ டெலஸ்கோப்' (Radio Telescope) அமைக்கப்பட்டிருக்கிறது. ரேடியோ டெலஸ்கோப் அமைந்த இடத்துக்கு மிக அருகில் 13.08.2000 அன்று ஒரு பயிர் வட்டச் சித்திரம் உருவாக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்தின் பின்னர் 13.08.2001 அன்று மீண்டும் ஒரு சித்திரம் அதே இடத்தில் தோன்றியது. அவையிரண்டும் வழமை போல இல்லாமல் வித்தியாசமான ஒரு பயிர் வட்டமாக இருந்தது ஆச்சரியப்படுத்தியது.

ஆனாலும், அவை என்ன அர்த்தங்களைச் குறிக்கின்றன என்றுயாருக்கும் புரியவில்லை. ஆனால் சரியாக ஐந்து நாட்களின் பின்னர் (18.08.2001) அந்தச் சித்திரத்தின் அருகே இன்னுமொரு சித்திரம் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரமாண்டமான பயிர் வட்டச் சித்திரத்தைப் பார்த்துத்தான் உலகமே பதட்டப்பட்டது. அது பயிர் வட்டம் என்று சொல்லப்படும் வட்ட வகையைச் சாராமல், வேறு ஒரு வடிவத்தில் இருந்தது. அந்த வடிவம் என்ன தெரியுமா? ஒரு மனிதனின் முகம். காகிதத்தில் கணினி மூலமாக வரையப்படும் ஒரு மனிதனின் முகம் எப்படி இருக்குமோ, அப்படிப் பயிர்களால் அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது.

http://1.bp.blogspot.com/-dKAY5Bsg2k0/UiOi57iXdJI/AAAAAAAAAwE/3KMlcwp0TRo/s1600/Crop+Circle.JPG

http://4.bp.blogspot.com/-4mR8XPlC2gM/UiOjBLHUT5I/AAAAAAAAAwM/1MQdI1OFWpE/s1600/Crop+Circle.JPG

பயிர் வட்டங்கள் எல்லாம் ஏதோ வெறுமனே வரையப்படுகின்றன என நம்பியிருந்தவர்களுக்கு, "இல்லை, அவை ஏதோ செய்திகளை நமக்குச் சொல்கின்றன" என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. இப்படியெல்லாம் கூட பயிர்களால் வரைய முடியுமா? என்ற ஆச்சரியம் பிடித்து நம்மை உலுக்கியது. அதன் சாத்தியம் இனம் புரியாத ஒரு பயத்தை உலகிற்கு உருவாக்கத் தொடங்கியது. பயிர் வட்டங்களை மறுப்பவர்கள் சொல்வது போல அவையும் மனிதர்களின் விளையாட்டுகளில் ஒன்றுதானா அல்லது உண்மையில் அவை ஏலியன்களால் உருவாக்கப்பட்டவையா? அவை நமக்கு எதையாவது சொல்கின்றனவா?

இவற்றை விபரமாக அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.