திருச்சிராப்பள்ளி மாவட்டம்,முசிறி வட்டம்,திருச்சி டூ சேலை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து மேற்கே 32 கி.மீ.தொலைவிலும்,முசிறியிலிருந்து கிழக்கே 6 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் வெள்ளூர் ஆகும்.இந்த ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை திருக்காமேஸ்வரர், ஸ்ரீஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான அதே சமயம் அதிசயமான உண்மை! அதே போல் தற்போது இந்த ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்யத் துவங்கியுள்ளனர்.இதற்கு நம் அனைவராலும் அன்பளிப்பு வழங்க இயலாது;யாருக்கெல்லாம் இந்த கோவிலோடு முற்பிறவித் தொடர்பு உள்ளதோ அவர்கள் மட்டுமே ஆலய புனர்நிர்மாணத்திற்கு அன்பளிப்பு வழங்க இயலும்.
வெள்ளூர் என்ற இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் சாதாரண கோவிலாகக் காட்சியளித்தாலும்,இந்த ஆலயத்தின் பெருமைகளை ஒரு பதிவின் மூலமாக மட்டும் விவரித்துவிட முடியாது;நமது ஆன்மீகக்கடலில் முடிந்தவரையிலும் விவரிக்க முயன்றிருக்கிறோம்;
தட்சனின் யாகத்திற்கு பராசக்தி சென்றதால்,கோபமுற்ற ஈசன் பராசக்தியை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார்.ஜோதி ரூபமாக பராசக்தியானவள் மீண்டும் கயிலாயத்தில் தங்கள் அருகில் இருக்க வரம் தர வேண்டும் என்றாள்.பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து சிவவழிபாடு செய்து வந்தால்,உரிய நேரம் வரும் போது கயிலை வரமுடியும் என்று ஈசன் ஆணையிட்டார்.எனவே,பராசக்தியானவள்,பார்வதி என்ற பெயருடன் பர்வதமலையில் சிவபெருமானை நோக்கித் தவம் புரியலானாள்.பர்வதமலை வேலூர் மாவட்டத்தில் திருஅண்ணாமலைக்கும் வேலூருக்கும் நடுவே அமைந்திருக்கிறது.மிகவும் உயரமான மலை அது.
“சக்தியில்லையேல் சிவமில்லை; என்பதற்கிணங்க பராசக்தியைப் பிரிந்த ஈசன் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார்.அதனால்,பிரபஞ்சத்தில் ஒரு அணுவும் அசையவில்லை;(அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது தவறு;சிவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே உண்மை!!!)
இந்த நிலை தொடர்ந்தால் பிரபஞ்சமே அழிந்துவிடும் என்ற உணர்ந்த பிரம்மா,விஷ்ணு மற்றும் இதர தேவ உலகத்தினர்(தேவர்கள்)அனைவரும் பிரபஞ்சத்தை காக்கும் பொருட்டு சிவத்தையும் சக்தியையும் ஒன்று சேர்க்க முற்பட்டனர்;அதனால்,மன்மதனை அழைத்து அசைவற்ற நிலையில் இருக்கும் பரமேஸ்வரன் மீது காமபாணத்தை ஏவி,சக்தியின் நினைவுகளைத் தூண்டுமாறு பணித்தனர்.அதற்கு மன்மதன்,எனக்கு காமபாணத்தை அருளச் செய்த ஈசன் மீதே அதை ஏவுவது எனக்கு அழிவை ஏற்படுத்தும்;என்னால் ஈசன் மீது காம பாணத்தை ஏவ முடியாது என்று மறுத்தார்.இதனால்,கோபமுற்ற பிரம்மாவும்,விஷ்ணுவும் பிற தேவ உலகத்தினரும் மன்மதனை மிரட்டினர்;சாபம் தரப்போவதாக சொல்ல,வேறு வழியின்றி காமபாணத்தை ஈசன் மீது ஏவினான்.
திருக்கயிலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து( மயிலாடுதுறை அருகே அமைந்திருக்கும் கொறுக்கையில் இருந்து) ஒரு மிகப்பெரிய புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈஸ்வரன் மீது காமபாணத்தை ஏவுகிறான்;வில்லில் இருந்து காமபாணம் வெளியேறும் போதே,ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் எரிந்து சாம்பலாகிறான்;அவ்வாறு சாம்பலான இடம் இன்றும் மயிலாடுதுறை தாலுக்காவில் கொறுக்கை வீரட்டானத்துக்கு மிக அருகில் இருக்கிறது;அந்த சாம்பலும் பல லட்சம் ஆண்டுகளாக இருக்கிறது;
இதனால்,மன்மதனின் அம்பிலிருந்து வெளியேறிய காமபாணம் திசைமாறிச் சென்று,பர்வதமலையில் தவம் செய்து கொண்டிருந்த பராசக்தியைத் தாக்கிவிடுகிறது;இதனால்,பராசக்தியானவள் பூப்படைந்து சிவகாமசுந்தரியாக உருமாறி சிவபெருமானை அடைகிறாள்.அந்த சிவகாம சுந்தரிதான் பக்தர்களுக்கு இந்த வெள்ளூரில் காட்சியளித்துவருகிறாள்.
இதற்கிடையே மன்மதன் எரிக்கப்பட்டுவிட்டதால்,அவன் மனைவி ரதிதேவி ஈஸ்வரனிடம் சென்று நடந்ததை விளக்கிக்கூறினாள்.தேவர்களின் வற்புறுத்தலால் தான் மன்மதன் காமபாணத்தை தாங்கள் மீது செயல்படுத்த முற்பட்டார்.ஆகவே,இப்பிழையை பொறுத்து மன்மதனை உயிர்ப்பித்து தனக்கு மாங்கல்ய பாக்யத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டினாள்.ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க,சிவபெருமான் மன்மதனை ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியும் விதமாக உயிர்ப்பித்தார்.
மன்மதனும்,ரதியும் சேர்ந்து இயல்பான உருவத்தைத் தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர்.அதற்கு ஈசன் பூலோகத்திற்குச் சென்று சிவவழிபாடு செய்யுங்கள்.உரிய நேரம் வரும் போது ஒரு புண்ணிய ஸ்தலத்தில் இயல்பான உருவம் கிட்டும் என்று வரமளிக்கிறார்.
அதன்படி பூலோகத்தில் பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர,வெள்ளூர் என்னும் இந்த ஆலயத்தை அடைந்து வழிபடும்போது கயிலை நாதன் உமையாளுடன் காட்சி தந்து மன்மதனுக்கு இழந்த உடலைத் தருகிறார்.எனவே,தான் இறைவன் இங்கே திருக்காமேஸ்வரர் என்றும்,உமையவள் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மன்மதனுடைய காமபாணமில்லாததால் பிரபஞ்சத்தில் படைப்பு நின்றுவிடுகிறது.ஒரு அணுகூட சிருஷ்டிக்கப்படவில்லை;எனவே,காமபாணத்தை இனி செயல்படுத்தும் படி சிவபெருமான் மன்மதனுக்கு ஆணையிடுகிறார்.காமபாணத்தை செயல்படுத்தும் ஞானத்தை மன்மதன் இழந்துவிட்டதால்(ஈசன் மீது ஏவியதால்),இழந்த ஞானத்தை போதிக்கும் படி ஈசனிடம் மன்மதன் வேண்டுகிறார்.அதன்படி,ஞான பைரவர் மன்மதனுக்கு “மன்மத மதனக் களிப்பு மருந்து” எனும் மருத்துவத் தயாரிப்பு முறையைப் போதித்தார்.இந்த மருத்துவத் தயாரிப்பு முறை சித்தமருத்துவத்தில் இன்றும் அமைந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.மருத்துவமுறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேசப்பெருமானுக்கு வைத்தியநாதன் என்ற பெயரும் உண்டு. ஆகவே,இவ்வாலயத்தில் தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமானது இன்றும் பக்தர்களுக்கு நித்தம் வழங்கப்பட்டுவருகிறது.எனவே,குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியர் திருக்காமேசப்பெருமானை வழிபட்டால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போகர் சித்தருக்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் இது:=
போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார்.பிறகு,அதில் சரியான திதியும்,நட்சத்திரமும்,ஓரையும் கூடிய சுபநேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகுவிரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின;
இதை அறிந்த பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமாசித்துக்களில் சித்தி பெற்றனர்;
மேலும்,இந்த சிவபோக சக்கரத்தில் அமர்ந்து அஷ்டமாசித்திகள் கைகூடிய பின்னரே,பழனிமலைக்குச் சென்று நவபாஷாணத்தால் ஆன முருகக்கடவுளை(ஞான தண்டாயுதபாணியை சுப்பிரமணிய பைரவரின் ஆசியோடு!!!) உருவாக்கி,பிரதிஷ்டை செய்தார்;இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம்;ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம் இருக்கிறது.மேலும்,அரூபமாக அகத்தியர் நாடியிலும்,வசிஷ்டர் நாடியிலும்,காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.
சித்தர்களுக்கே எங்கும் சென்று சித்திக்காத ஆன்மீக முன்னேற்றங்கள் இந்த ஆலயத்தில் கிடைப்பதால்,இந்த ஆலய வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான சித்தர்கள் அரூபமாக இன்றும் தவம் செய்து வருவதாக இப்பகுதி மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது;எனவே,நாம் எண்ணும் ஆன்மீக லட்சியங்களை அடைய இந்த ஆலயத்திற்கு ஒருமுறை பயணிப்போம்;
மேலும்,இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன;யாருக்கு சித்தர்களின் ஆசியும்,திருக்காமேஸ்வரரின் அருளும் இருக்கின்றதோ அவர்கள் மட்டுமே இந்த குடமுழுக்கு வைபத்திற்கு பொருட்கள் வாங்கித் தர முடியும்.
ஒருமுறை தேவர்களும்,அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது அமுதம் தேவர்களுக்கு மட்டுமே கிடைப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார் மஹாவிஷ்ணு.அவரது மோகினி வடிவத்தில் மயங்கிய அசுரர்களை லவண சமுத்திரம் என்னும் உப்புக்கடலில் மூழ்கடித்தார்;அவ்வாறு மூழ்கடித்துவிட்டுத் திரும்பும் போது மோகினி அவதாரத்தை பார்த்த சிவனார் அந்த அழகில் மயங்கிட ஐயப்பன் வழுவூரில் பிறந்தார்.வழுவூர் மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இது அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும்.
இதைக்கேள்விப்பட்ட மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டு வைகுண்டத்தைவிட்டு வெளியேறினாள்.இதற்குக் காரணமான சிவபெருமானை அழைக்கிறாள்.சிவபெருமான் காட்சி தராததால்,விண்ணுலகத்தை விட்டு,வெளியேறி பூலோகத்திற்கு வருகிறாள்.வந்து இந்த வெள்ளூரில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்கிறாள்.பலயுகங்களாகத் தவம் செய்தும்,சிவபெருமான் காட்சி தராததால்,தானே ஒரு வில்வமரமாக மாறி,இங்கிருக்கும் சிவலிங்கம் மீது வில்வ தளங்களை மழையாக பொழியச் செய்கிறாள்;அவ்வாறு வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ய,சிவபெருமான்,மஹாலக்ஷ்மிக்கு காட்சி தருகிறார்.
காட்சி தந்ததொடு,ஹரிஹரபுத்திரன் என்று அழைக்கப்படும் ஐயப்பனின் அவதார நோக்கத்தை எடுத்துரைத்து மஹாலக்ஷ்மியை சமாதானப்படுத்துகிறார்.கூடவே,ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாகச் செய்து மஹாவிஷ்ணுவின் இருதயத்தில் மஹாலக்ஷ்மியை ஸ்தாபனம் செய்து,மஹாவிஷ்ணுவையும்,மஹாலக்ஷ்மியையும் சேர்த்து வைக்கிறார்.
வில்வமரமாக தோன்றி வில்வ மழை பொழிந்து சிவபூஜை செய்ததால்,இத்தலத்தில் சிவபெருமான் மஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மஹாலக்ஷ்மியை ஐஸ்வர்யத்திற்கு அதிபதியாகச் செய்கிறார்.
ஆகவேதான்,வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில் இத்திருக்கோவிலில் வாயோர் தட்சிணபாகம் என்று சொல்லக்கூடிய வடமேற்கு பகுதியில் மஹாலக்ஷ்மி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான வில்வமரமும்,அதன் நிழல் பகுதியில் சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்துடன் தவம் செய்யும் கோலத்தில் கோவிலின் குபேர பாகத்தில் ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அற்புத கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுக்கிரன்,இந்த ஆலயத்தில் பல யுகங்களாக வழிபட்டு சுகபோகத்தின் அதிபதியானார்.
குபேரன் இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு செல்வச் செழிப்பின் தலைவனானார்.
No comments:
Post a Comment