1. வேத வியாசர்
அறிமுகம்:இந்து சமயம் மகத்துவம் மிக்கது. அது ஆரம்பமும், முடிவும் இல்லாதது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களிலிருந்து, ஆன்மாக்களை விடுவித்து, அவைகளை இறைவனின் பாத கமலங்களில் சேர்ப்பதற்காக இறைவனால் அருளப் பெற்ற சமயம் இது.
இந்து சமயத்தின் அடிப்படை வேதங்களில் பொதிந்துள்ளது. வேதங்கள் நான்கு. அவை: ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியன.
வேதங்களை இறைவன் மகா முனிவர்களுக்கு வழங்கினார். அந்த மகா முனிவர்களுள் பிரதானமானவர் வேத வியாசர் ஆவர். இவர் வேதங்களைத் தமது சிஷ்யர்களும், உலக மக்களும் உணர்ந்து கடைப்பிடிப்பதற்கேற்ற வகையில், அவற்றைப் பல சாகைகளாகப் பிரித்து வழங்கியதுடன், அவற்றின் பொருளை உள்ளடக்கிய பத்து உபநிஷதங்களையும், பதினெட்டுப் புராணங்களையும், மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தையும், பிரம்ம சூத்திரம் என்னும் ஆகம நூலையும் இயற்றினார்.
உபநிஷதங்கள் பத்து. அவை:
ஈசாவாஸ்யம்,
கேனம்,
கடம்,
பிரச்சினம்,
முண்டகம்,
மாண்டுக்யம்,
தைத்தரீயம்,
ஐத்தரேயம்,
சாந்தோக்யம்,
பிரிகதர்ணியகம் (அல்லது) பிர்க தாரணியகம்.
வேத வியாசரின் இனிய வரலாற்றை அறிந்துகொள்ளாமல் இந்து
சமயத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ள இயலாது.
மகாமுனிவர்களுள் மகத்தான சிறப்பும், தெய்வீக அம்சமும் ஒருங்கே கொண்டவர் அவர்.
வேத வியாசர் வரலாறு
பாகம் 1
பகுதி ஒன்று : மச்சகந்திஇறைவன் ஒளி வடிவமாக விளங்குகின்றான். ஒளி வடிவமான இறைவன், தன்னைப்பற்றிய மெய் ஞானம் உலக மக்களுக்கு ஏற்படுவதற்காக, ஒலி வடிவமான வேதங்களை அருளினான். (ஆதி காலத்தில், நூல்கள் எழுதப்படவில்லை. பண்டைய வேத நூல்களும், இதிகாசங்களும் உபநிஷதங்கள் முதலிய மற்றும் பல நூல்களும், பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாகவே பரப்பப் பெற்றன.)
இவ்வாறு இறைவனால் வழங்கப்பெற்ற நான்கு வேதங்களையும் பல சாகைகளாகவும், கிளைப்பிரிவுகளாகவும் பிரித்து, வேதத்தின் ஒவ்வொரு பிரிவும் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து அளித்தவர் வேத வியாசர். மேலும், சாதாரண மனிதர்களும் வேதத்தின் அதிநுட்பமான ஆன்மிகக் கருத்துகளைப் புரிந்து கொள்வது கஷ்டமாயிருக்கும் என்பதை உணர்ந்து, அந்த வேதன்களிஞ் சரத்தை உள்ளடக்கிய " மகாபாரதம்" என்னும் அதி உயர்வான இதிகாசத்தை அவர் உலக மக்களுக்கு அளித்தார். இதனால், அன்றுமுதல் இன்றுவரை, வேதவியாசர் மக்களாலும், முனிவர்களாலும், ஆன்மிக ஞானிகளாலும் ஒருங்கே போற்றப்படுகின்றார்.
இவர் ஏழு பெயர்களால் அழைத்துப் போற்றப்படுகின்றார்.
1. கிருஷ்ணத் வைபாயனர் - ( கருப்பு நிறமுடையவர்; தீவில் பிறந்தவர் என்று பொருள் )
2. மராடர் - ( முனிவர்களுக்கெல்லாம் சிறந்தவர் என்று பொருள் )
3. பரசர்யர் - ( பராசர முனிவரின் மைந்தர் )
4. காநீந - ( கன்னிப் பெண்ணுக்குப் பிள்ளையாகப் பிறந்தவர் )
5. ஸத்வதீ ஸுத - ( சத்தியவதியின் மைந்தர் )
6. பாதராயணர் - ( இலந்தை மரக்காட்டில் பிறந்தவர் )
7. வேத வியாசர் - ( வேதங்களை வகுத்துத் தந்தவர் )
யுகங்கள் நான்கு. கிருது, த்ரேதா, த்வாபர, கலி ஆகிய நான்கு யுகங்களையும் சேர்த்து சதுர் யுகம் என்று அழைக்கின்றோம். இவற்றில் மூன்றாவதான த்வாபர யுகத்தின் முடிவுக்காலத்தில் வேத வியாசர் அவதரித்தார். பாவங்கள் பல்கிப்பெருகும் கலி யுகத்தில், மக்களை நெறி தவறாமல் வாழ வழி காட்டும் குருவாக, ஆச்சாரியராக, மகா முனிவராக வேத வியாசர் விளங்குகின்றார்.
சத்தியவதியின் மகன்:
வேத வியாசரைப் பெற்றெடுத்த தாய் சத்தியவதி.
சத்தியவதி வேத வியாசரைப் பெற்றெடுத்த கதைக்கு வரமுன்னர், நாம் சத்தியவதி பிறந்த கதையைப் படிப்போம். இது மிகவும் சுவையானதொரு கதை.
சேதி நாட்டு அரசன் உபசரிவசு. இவன் சிறந்த நீதியும், குடிமக்கள் மீது மட்டற்ற அன்பும் கொண்ட அரசன். இவனுக்கு அழகேயுருவான மனைவி. அவளே பட்டத்து ராணியாகவும் இருந்தாள். தனது மனைவிமீது அரசன் மட்டற்ற அன்பு கொண்டிருந்தான்.
ஒருமுறை, தன மெய்க்காப்பாளர்களுடன் அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். காட்டில்கூட அவன் தனது மனைவியின் ஞாபகமாகவே இருந்தான். ஓர் ஆற்றங்கரையின் மர நிழலில் அமர்ந்து, மனைவியின் நினைவில் மூழ்கி இருந்தபோது, அவனது சக்தி வெளியானது. அது ஆற்று நீரில் வீழ்ந்தபோது, அங்கே நீந்திவந்த ஒரு பெரிய மீன் அந்த சக்தியை விழுங்கிவிட்டது.
அரசனுடைய சக்தியினால், அந்த மீன் உடனே கர்ப்பமாகியது. அது கர்ப்பமாகிப் பத்து மாதங்கள் கழிந்தபோது, அந்த ஊரின் மீனவர் தலைவனின் வலையில் சிக்கிக் கொண்டது.
அந்த மீனவர் தலைவனின் பெயர் உச்சைச்ரவஸ்.
பெரிய மீன் தன் வலையில் கிடைத்த மகிழ்ச்சியுடன் அவன் அந்த மீனைத் தன குடிசைக்குக் கொண்டு சென்றான். அவன் அந்த மீனின் வயிற்றை வெட்டியபோது, அதன் வயிடினுள்ளே இரண்டு குழந்தைகளைக் கண்டு அதிசயமும், ஆச்சரியமும் அடைந்தான்.
அந்த இரண்டு குழந்தைகளும் மிக்க அழகுடையனவாக இருந்தன. அவற்றில் ஒன்று ஆண் குழந்தை. மற்றொன்று பெண் குழந்தை.
மீனவர் தலைவன் அந்த இரண்டு குழந்தைகளையும் அரசனின் மாளிகைக்கு எடுத்துச் சென்றான்.
அரசன் இரண்டு குழந்தைகளையும் பார்த்தான். அவை தனது குழந்தைகளே என்ற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.
ஆண் குழந்தையைத் தான் எடுத்துக்கொண்டு, பெண் குழந்தையை அந்த மீனவர் தலைவனிடமே கொடுத்தனுப்பி விட்டான்.
மீனவர் தலைவன் பெரு மகிழ்ச்சியுடன் அந்தப் பெண் குழந்தையைத் தன் குடிசைக்கு எடுத்துச் சென்றான். தனது மனைவியிடம் கொடுத்தான். அதுவரை பிள்ளை இல்லாமல் கவலையுற்றிருந்த அந்த மீனவர் தலைவனும், மனைவியும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்கள். இறைவன் தந்த பெரும் கொடையாகக் கருதி, அந்தக் குழந்தைக்கு " சத்தியவதி " என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.
சத்தியவதியின் மற்றொரு பெயர் " மச்சகந்தி ". அவளுக்கு இந்தப்பெயர் வழங்கியதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளது.
மீனின் வயிற்றில் உற்பத்தியாகி, அங்கேயே பத்து மாதம் வாசம் செய்து பிறந்ததால், சத்தியவதியின் உடலில் இருந்து மீனின் துர்நாற்றம் வீசியது. தன் உடலில் இருந்து இவ்வாறு மீனின் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து மிக்க கவலையுற்ற மச்சகந்தி, மக்களுடன் அதிகமாகப் பழகாமல், தானுண்டு, தன் பெற்றோரின் குடிசையுண்டு என்று ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள்.
உரிய பருவத்தில் அவள் வளர்ந்து, காண்பவர்களின் கண்களையும், கருத்தையும் ஒருங்கே கவரத்தக்க பேரழகுப் பெண்ணாக விளங்கினாள். மற்றவர்களுடன் அதிகம் பழகாமல், தன் பெற்றோரின் செல்லப் பெண்ணாக வளர்ந்த மச்சகந்தி, பரிசல் ( = வட்ட வடிவமான படகு ) ஓட்டுவதில் சாமர்த்தியசாலி. யமுனை நதியின் அக்கரையிலிருந்து, இக்கரைக்கு வரும் பயணிகளைத் தன் பரிசலில் ஏற்றிக் கரை சேர்க்கும் பணியைச் சிறப்புடன் செய்து வந்தாள். பரிசல் ஓட்டுவதை ஒரு தொழிலாக மட்டுமல்லாது, ஒரு சேவையாகவும் கருதி அவள் சிறந்த முறையில் அப் பணியைச் செய்து வந்தாள். ஏழைகளையும், வயது முதிர்ந்தவர்களையும், முனிவர்களையும், குழந்தைகளையும் அவள் இலவசமாகவே பரிசலில் ஏற்றி அவர்கள் நதியைக் கடக்க உதவி வந்தாள்.
இவ்வாறு, இன்னும் பருவம் அடையாத, அழகிய இளம் கன்னிப்பெண்ணாக விளங்கிய மச்சகந்தி என்னும் சத்தியவதி பரிசல் ஓட்டிவரும் நாட்களில் ஒருநாள், அந்த அதிசய சம்பவம் நடந்தது.
அந்த நாள், சத்தியவதியின் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு நாள்.
வழக்கம்போல் அன்றும் அவள் நதியின் அக்கரையிலிருந்து, இக்கரைக்குப் பரிசலை ஓட்டிவர முயன்றபோது, வயது முதிர்ந்த கிழவராகத் தென்பட்ட முனிவர் ஒருவர் அவளது பரிசலில் அவசரமாக வந்து ஏறினார்.
"பெண்ணே, நான் அக்கரைக்கு அவசரமாகச் செல்ல வேண்டும. பரிசலில் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்வாயா?" என்று கேட்டார்.
அந்த முனிவரின் முகத்தைப் பார்த்தபோது, சத்தியவதியின் உள்ளத்தில் இனம் புரியாத அன்பும், மரியாதையும், பக்தியும் உண்டாயிற்று. பரிசலில் ஏறுவதற்கு வேறு பயணிகள் யாரும் இல்லாதபோதும், அந்த ஒரு பயணிக்காக அவள் பரிசலை ஓட்டினாள்.
பரிசலில் ஏறி அமர்ந்த அந்த முனிவர், சத்தியவதியின் முகத்தையும், அவளது அழகு நிறைந்த உடலையும் ஏற இறங்கப்பார்த்தார். பின்னர், வானத்தைப் பார்த்தார். நான்கு திசைகளையும் பார்த்தார். கை விரல்களால் ஏதேதோ கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, சத்தியவதியின் முகத்தையே அன்புடனும், அளவில்லாத ஆசையுடனும் பார்த்தார்.
சத்தியவதியின் மனம் சங்கடப்பட்டது. " ஐயா, ஏன் என்னை அப்படிப் பார்க்கின்றீர்கள்?" என்று கேட்டாள்.
"சத்தியவதி " என்று முனிவர் அன்புடன் அழைத்தார். ( தொடரும் )
பாகம் 2
சத்தியவதி ஒருகணம் திகைத்து நின்றாள். " ஐயா, ஏன் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்."பெண்ணே, உன் பெயர் மட்டுமல்ல, உன் இந்தப்பிறவியின் வரலாறு மட்டுமல்ல, உன் முந்திய பிறவியின் உண்மைகளையும்கூட நான் நன்கு அறிவேன். உன் உண்மையான தந்தையின் பெயரையும், உன் வளர்ப்புத்தந்தையின் பெயரையும் நான் அறிவேன் " என்றார் அந்த முனிவர்.
மேலே பேச முடியாமல், சத்தியவதி ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்று அந்த முனிவரை வணங்கினாள்.
"பெண்ணே, இந்த மீனவர் கிராமத்தின் தலைவன் உச்சைச்ரவஸ் உன் வளர்ப்புத் தந்தைதான். உன் உண்மையான தந்தை இந்த நாட்டின் அரசனாகிய உபசரிவசுதான். முந்திய பிறவியில் நீ சொர்க்கலோகத்தில், பித்ருக்களின் மானச கன்னியாக மாட்சியுடன் இருந்தாய். ஒருமுறை, நீ அறியாமல் செய்த தவற்றின் பயனாக, அவர்களின் சாபத்தால், ஒரு மீனின் வயிற்றில் மகளாகப் பிறந்தாய்.
"நீ சகல சாமுத்ரிகா லட்சணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு சிறந்த பெண். இன்று, இந்த நேரம் மிகவும் சுபமான சர்வ முகூர்த்த நேரம். இவ்வாறு, சர்வ லட்சணங்களும் நிறைந்த ஒரு பெண்ணுடன் நான் இந்தச் சர்வ முகூர்த்த வேளையில் உறவுகொண்டால், உலகுக்கெல்லாம் ஒளியாக விளங்கக்கூடிய ஒரு உத்தமமான குமாரன் பிறப்பான். நீ அதற்கு உடன்படுகின்றாயா? " என்று கேட்டார், முனிவர்.
சத்தியவதி திகைப்பில் ஆழ்ந்தாள்.
"சுவாமி, நான் இன்னும் பருவம் அடையாத இளம் கன்னிப் பெண். என் தந்தையின் பாதுகாப்பில் வளரும் இளம் பெண். நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்துமா? " என்று கேட்டாள்.
"சத்தியவதி, என் பெயர் பராசரன். பராசர முனிவர் என்று எல்லாரும் என்னை அழைப்பார்கள். நீயும் நானும், இன்று, இந்த நதியின் நடுவில் சந்திக்க வேண்டுமென்பது இறைவன் வகுத்த விதி. அதேபோல், உனக்கும், எனக்கும் பிறக்கப்போகும் அருந்தவப் புதல்வன் உலகம் போற்றும் உத்தம மகா முனிவராக விளங்குவான் என்பதும் இறைவனின் சித்தம்தான் " என்றார்.
"சுவாமி, ஏன் உடம்பில் இருந்து மிகவும் அருவருப்பான மீனின் துர்நாற்றம் வீசுகின்றதே ? " என்று கவலையுடன் கேட்டாள் சத்தியவதி.
பராசர முனிவர் அன்புடன் சிரித்தார்.
"சத்தியவதி, என் தவத்தின் சக்தியால், மாபெரும் அருஞ்செயல்களை நீ இன்று காண்பாய். உன் உடம்பில் வீசிய மீனின் துர்நாற்றம் இனிமேல் மறைந்து, நீ சுகந்த மணம் வீசும் " யோஜன கந்தி " யாக விளங்குவாய். ( யோஜனை = ஒரு காத தூரம்; கந்தம் = நறுமணம். ஒரு காத தூரத்துக்கு அவளின் நறுமணம் வீசுவதால் இந்தப் பெயர் உண்டானது ). மேலும், இந்த சர்வ முகூர்த்த வேளையில், நாம் இருக்கும் இந்த இடம் முழுவதும், மூடுபனியால் மூடப்பட்டு விடும். யாருமே நம்மைப் பார்க்க மாட்டார்கள். " என்று கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதும், சத்தியவதி அவரது விருப்பத்துக்குச் சம்மதித்தாள்.
அவள் தன் பரிசலை அந்த யமுனை ஆற்றின் மத்தியில் இருந்த ஒரு சிறு தீவில் நிறுத்தினாள். அந்தத் தீவு இலந்தை மரங்கள் நிறைந்ததாக இருந்தது. சத்தியவதி, அந்த இலந்தை மரத் தீவில், அடர்ந்த மூடுபனிக்கு நடுவே, பராசர முனிவரின் விருப்பத்துக்கு இணங்கினாள்.
அப்போது......
வேத வியாசர் ஒரு அழகிய குழந்தையாக அந்த இலந்தை மரக் காட்டில் அவதாரம் செய்தார்.
(வேத வியாசர் பிறப்பிலேயே அதிசய சக்திகள் வாய்க்கபெற்ற அவதார புருஷர் என்பதால், அவர் தன் தாயின் வயிற்றில் பத்து மாதம் வாசம் செய்யவில்லை)
அக்கணத்தில், தேவர்கள் மகிழ்ச்சியுடன் மலர்மாரி பொழிந்தனர்.
அப்போது.....
மச்சகந்தியான சத்தியவதியின் உடம்பிலிருந்து வீசிய மீனின் துர்நாற்றம் மறைந்தே போனது. அதற்குப்பதிலாக, தேவலோகத்து நறுமணமோ என்று வியக்குமாறு அவளது உடம்பிலிருந்து மனோரஞ்சிதமான நறுமணம் வீசியது. (அதன் பயனாக, பின்னர் சத்தியவதியின் பெயர் " யோஜன கந்தி " என்று விளங்கியது.)
பராசர முனிவரின் அருளால், குழந்தை பிறந்த மறுகணமே, சத்தியவதி மீண்டும் கன்னிப்பெண்ணாகவே விளங்கினாள்.
தன் முன்னே, அழகே உருவாகக் கிடந்த பச்சிளம் குழந்தையைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கினாள் சத்தியவதி.
பராசர முனிவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு,
தன் குழந்தையை வாரி அணைக்கப்போனாள்.
ஒரே நொடியில், ஏழு வயதுப் பாலகனாக் வளர்ந்து நின்ற அந்தப் பாலகன், தன் தாயைப் பார்த்து,
"அம்மா, என்னைத் தொடாதே " என்று கூறினான்.
சத்தியவதி திகைத்து நின்றாள். ( தொடரும் )
No comments:
Post a Comment