இந்த சிறப்புப் பகுதியில் சித்த மருத்துவ சுவடிகள், மற்றும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டு வைத்தியம் என்று வழக்கில் சொல்லப்படும்் மருத்துவத்தை விளக்கும் சுவடிக்கட்டு ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளைமின்பதிப்பாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம். இவற்றை மின்பதிப்பாக்கம் செய்தவர் முனைவர் நா.கண்ணன். இந்த ஓலைச் சுவடிகளை தமிழகம் நீலகோட்டையைச் சேர்ந்த திரு.ஷண்முகவரதன் அவர்களைச் சார்ந்தவை. இந்த ஓலைகளைக் காண இங்கே செல்லவும்.
சித்த மருத்துவத்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்களின் கட்டுரைகள் இப்பகுதியில் வெளியிடப்படுகின்றன.
1. முனைவர் இர.வாசுதேவன், M.A.,M.Phil.,Ph.D.
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும்
தமிழர் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது, இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு உருவானது, தமிழ் மருத்துவம். தமிழ் மருத்துவத்தின் களமாக விளங்குபவை தமிழ் இலக்கியமும், சித்தர் இலக்கியமுமாகும்.
தமிழ் மருத்துவம் தொன்மை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளவை சிந்துவெளி முத்திரைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் போன்றவையாகும். அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் கிடைக்கின்றன. குறிஞ்சிப் பாடலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள மூலிகைப் பட்டியலே தமிழ் மருத்துவப் புலமைக்குச் சன்றாக அமைகின்றது.
தாவரமாகிய எள்ளுக்கு தோன்றும் ‘மகுளி’ நோய், யானைக்குத் தோன்றும் ‘வயா’ நோய், மரணத்தை வெல்லும் மருந்துகள், அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோயாளிக்குப் படுக்கை அறை, நோய் அண்டாதிருக்க சுகாதாரப் பாதுகாப்பு, மருந்துப் பொருள் பாதுகாப்பு, மருத்துவ உறுப்புகள் போன்றவை கூறப்பட்டுள்ளன.
மதுரை எரிவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்றால், பாண்டியனோ பொற்கொல்லனோ இல்லை! மதுரை எரிந்ததற்குக் காரணமாக இருந்தது, தமிழ் மருத்துவம்! என்பேன். வியப்பாக இருக்கிறதல்லவா! ஆமாம்! பத்து விரை, முப்பத்திரண்டு ஓமாலிகைகளைக் கொண்ட மருத்துவ நீரில் நீராடியதால், மாதவி பேரழகு உடையவளாகத் திகழ்ந்தாள்! அவளைக் கண்ட கோவலன் தனது மனத்தை இழந்து மாதவி பின் சென்றான். பொருள் இழந்தான். கோவலன் மதுரைக்குச் சென்றான்.
சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது.
சங்க காலத்தில் ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.
கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து, பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.
அதைப்போல, நாடு கடந்து சென்ற சுவடிகள், 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை,
சந்தான கரணி - முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்ப்பிக்கச் செய்வது.
ஆனால், இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.
தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் “எண்ணாயிரம்” நூல் இருந்ததைக் கண்டதாகவும், சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது, ஆங்கே அந்நூல் இல்லை! என்றும், தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.
எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.
முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர், அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி, உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.
அதேபோல், அகத்தியர் - 81000, அகத்தியர் - 51000, அகத்தியர் - 30000, அகத்தியர் - 21000, அகத்தியர் - 18000, அகத்தியர் - 8000, பரஞ்சோதி - 8000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கர மாமுனி கிரந்தம், மாபுராணம் போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஆனால், பழனியிலுள்ள ஒரு மருத்துவ நூலாசிரியர், அகத்தியர் எண்ணாயிரத்தில் அனைத்து இரகசியங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், 3ஆவது காண்டம், முதல் பிரிவு 272 முதல் 276 வரை என்று குறிப்புரை தந்துவிட்டு, மேலும் அந்நூலை அச்சிட அந்நூலை வைத்திருப்பவர் கொடுக்க மறுத்துவிட்டார் என்கிறார். இந்த நூலே திருமூலர் எண்ணாயிரமாகவும் இருக்கலாம்.
ஆங்கில மருத்துவம் அறிமுகமாகாத காலத்துக்கும் முன், தமிழ் மருத்துவம் கண்டறிந்த முறைகள், இன்னும் அறிய முடியாதவைகளாக இருக்கின்றன.
நரை திரை மூப்பு; ஆஸ்துமா; காசம்; எய்ட்ஸ்; சோரியாஜீஸ்; புற்று; மூட்டுவாதம்; பக்கவாதம்; இதயநோய்; சர்க்கரை நோய்; கிட்னிக் கோளாறு; முதிர்வு நோய்கள் போன்றவற்றுக்கும் மருந்துகள் காணப்படுகின்றன.
தமிழ் மருத்துவத்தின் சிறப்பாக அமைந்திருப்பவை இரண்டு. இன்று நோய் தடுப்பு. மற்றொன்று நோய் எதிர்ப்பு. மேலை மருத்துவ முறைகளில் காணப்படும் மருத்துவ முறைகளைப் போலத் தமிழ் மருத்துவத்திலும் மருத்துவ வகைகள் காணப்படுகின்றன. அவை,
1. அறுவை மருத்துவம்
2. இசை மருத்துவம்
3. ஒட்டு மருத்துவம்
4. குழந்தை மருத்துவம்
5. நெஞ்சக நோய் மருத்துவம்
6. வர்ம மருத்துவம்
7. பன்முக மருத்துவம்
8. கற்ப மருத்துவம்
9. மகளிர் மருத்துவம்
10. உணவு மருத்துவம்
11. நோயில்லா நெறி
12. நம்பக மருத்துவம்
13. மூலிகை மருத்துவம்
14. கண் மருத்துவம்
15. நரம்பு மருத்துவம்
16. எலும்பு மருத்துவம்
17. மூளை மருத்துவம்
18. தோல் மருத்துவம்
19. மதன மருத்துவம்
என்பவை குறிப்பிடத் தக்கவை.
பன்னூறு ஆண்டுகளாகப் போற்றப் பட்டு வந்துள்ள தமிழ் மருத்துவத்தை முழுவதுமாகக் கண்டறிய வேண்டுமானல், கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மங்கோலியா, திபெத், உருஷ்யா, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் காணப்படுகின்ற மருத்துவ நூல்களை ஆராய வேண்டியிருக்கின்றன.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம், திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.
தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது, சீன மருத்துவம்.
வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர்வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள், தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேலி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து, மருத்துவ நூல் இயற்றப்பெற்றதாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.
தமிழ் மருத்துவ நூல்கள், செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.
உதாரணமாக, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், பிள்ளைத் தமிழ், உலா, பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், வாகடம், சூத்திரம், திறவுகோல், சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.
தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள்,கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டிவைத்துள்ளன.
தமிழ்ப் பல்கலைக் கழகம் - 5000
சரசுவதி மஹால் நூலகம் - 396
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் - 270
சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு - 478
உஸ்மான் கமிட்டி - 594
உ.வே சாமிநாதர் நூலகம் - 15
விருத்தாசலம், வீர சைவ மடம் - 15
பாண்டிச் சேரி, பிரஞ்சு- இந்திய கலைக்கூடம் 80
மதுரை, தமிழ்ச் சங்கம் - 24
திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம் - 165
சென்னை, கீழ்த்திசை சுவடி நூலகம் - 579
இவையல்லாமல், தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், பரம்பரை மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.
இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும், தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,
உ.வே.சா போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மத்திய கலாச்சாரத் துறையும் தமிழ் நாடு அரசும் கேட்டுக் கொண்டதற்கிணங்க பேராசிரியர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், ஜோதிடர்கள், புதிரை வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான், பண்ணையார், கோவில்கள், பழைய பொருள்களை வாங்கி விற்பவர், புலவர்கள் போன்றவர்களிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் இரண்டு இலட்சம் ஓலைச் சுவடிகளும், சங்கரம் கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும்.
ஆனால், அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் அரசோ பிற நிறுவனங்களோ மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் நூல்களிலும் மறைந்து கிடக்கின்றன. ஒரு சில முறைகள் மரபு வழி மருத்துவர்களின் பாதுகாப்பில் முடங்கிக் கிடக்கின்றன.
தமிழ் மருத்துவப் பாதுகாப்பிற்காக எடுக்கும் முயற்சி முறையாக இருக்க வேண்டுமானால், தமிழ் மருத்துவச் சுவடிகளும், பழைய நூல்களும் இலக்கப் பதிவாக மாற்றி, மின்காந்த இலத்திரன் முறைக்கு மாற்றியாக வேண்டும்.
தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால், கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.
1) கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே, சித்த மருத்துவம் என்னும் பெயரை ‘தமிழ் மருத்துவம்’ என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
2) தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம், சரக்குகள், பாடாணங்கள், மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.
3) மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில், ஸ்தல விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்.
4) மூன்றே பொருளால் ஆனது பிண்டம் என்பதற்குச் சான்றாக, மூன்று பொருள்களால் ஒரு உயிரையே உருவாக்கும் முறையைக் “கும்ப முறை’ என்று, கூறப்பட்டுள்ளது. அந்த முறையை ஆராய வேண்டும்.
5) மூன்றே பொருளால் ஆனது அண்டம், பிண்டம், சீவன், வாதம், நோய், மருந்து என்பதன் உட்பொருளைக் கண்டறிய வேண்டும். முப்பு, குரு மருந்து ஆகியவற்றை ஆராய வேண்டும்.
6) சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில், பல, செய்யுள் வடிவிலேயே இருப்பதனால், அவை, பொருள் விளங்காமல் இருக்கின்றன். அதனால், அவை, பிழையான நூல்கள் எனக் கருதப் படுகின்றன.
7) ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
8) இந்தியாவில் ஆயுர்வேதக்கல்வியைக் கற்பிக்க மூன்று பல்கலைக் கழகங்களும் பல கல்லூரிகளும் மொத்தம் 196 துறைகளும் இருக்கின்றன. அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.
ஆனால், சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12. அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2 மட்டுந்தானா?
இந்திய மொழிகளில் தொன்மையான மொழி தமிழ். தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப் படுவதற்கு முன், தமிழுக்குப் பின் மொழியான சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையான மொழி என்று கூறி செம்மொழியென அறிவிக்கப் படுகிறது. பல்முனை நெருக்கத்திற்குப் பின் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் படுகிறது. அதுவும் எவ்வாறு? 1500 ஆண்டுகள் பழமையான மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதைவிடவும் ஒரு சிறப்பு என்னவென்றால், 500 ஆண்டுகளே ஆன இந்தி மொழி ஆட்சி மொழியாக அறிவித்திருப்பதாகும். தந்தை மாணவன்! மகன் ஆசிரியன்! அப்பனுக்குப் பாடஞ் சொன்ன சுப்பையன் கதை போலத் தமிழ், மூன்றாம் இடத்து மொழியாகப் பாவிக்கப் படுகிறது. மூன்றே பொருளால் ஆனது அண்டம் என்பது போல, மூன்றே மொழியால் ஆனது அரசியல்.
9) இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.
10) அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.
11) தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.
12) வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.
13) தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.
14) தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பிக்கப் படவில்லை. அவற்றை பதிப்பில் வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.
15) மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக் கற்று நூலாக வெளிக்கொணர வேண்டும்.
16) ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.
17) நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.
18) படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும், அழிப்பதும், மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
19) சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ, மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும். அம்மருந்துகுரிய உரிமையையும் அவர்களுக்கே அளிக்கலாம். அதனால், பல முறைகள் தமிழ் மருத்துவத்துக்குத் தெரியவரும்.
20) பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.
21) தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
22) தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். அவை, மருத்துவச் சுவடிகளை ஆராய்தல், மருந்துப் பொருள்களை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
23) தமிழர் தம் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள், கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி, சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் ஆவணப் படுத்தி, படித்து, குற்றங்குறை நீக்கி, பதிப்பித்து நூல்வடிவாக வெளியிட வேண்டும்.
24) மருத்துவ நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு ஆய்வரிக்கை வெளியிட வேண்டும்.
25) இந்திய மருத்துவக் கல்விச் சாலைகள் ஆங்கில மருத்துவத்துடம் இந்திய மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிக்க வேண்டும். இதற்கு வேண்டிய முன் நடவடிக்கைகளுக்கு ஏற்ற “மருத்துவக் கொள்கை”யை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகளும் மருத்துவத் துறையும் முன் வர வேண்டும். பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.
அழிந்து வரும் மரபு அழியாமலிருக்க விழித்தெழுவோமாக!
வாழ்க தமிழ் மருத்துவம்.
இவரது கட்டுரைகள் மேலும் சில..!
1. தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவச் சுவடிகளும் - power point slide [Article presented in 12th World Saiva Conference in Sydney, Australia]
2.ஊண் போற்றி
2. முனைவர். வே. கட்டளை கைலாசம்
திருநெல்வேலி ஒலைச் சுவடிகள்
‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன. கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர் வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்.
ஓலைச் சுவடிகள்
மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்களின் அடிப்படையில் சுவடிகளை ஓட்டுச்சுவடி, எலும்புச் சுவடி, மூங்கிற் சுவடி, லிபர் கவடி, மரப்பட்டைச் சுவடி, பூர்ச்ச மரப்பட்டைச் சுவடி, தோல் சுவடி, உலோகச் சுவடி, துணிச் சுவடி, பலகைச் சுவடி, பனைவோலைச் சுவடி, என பலவகைப் படுத்துகின்றனர். பனை மரங்களில் நாட்டுப்பனை (Borasus Flaballifer/Palmyar), சீதாளப்பனை எனப்படும் கூந்தற்பனை (Coripha umbra calibra) லந்தர்பனை (Coripha utan) ஆகிய மூன்று வகையான பனைமரங்களின் ஒலைகள் எழுதுவதற்குப் பயன்பட்டன. இவற்றில் நாட்டுப் பனையோலையே மிகுதி.
தென்னிந்தியாவில் நாட்டுப்பனை அதிகமாக ‘வளர்கிறது. இந்த ஒலைகள் மிகவும் தடிமனாகவும் நீளம் குறைந்தும் காணப்படும். இவ்வகைப் பனை மரங்களின் ஒலைகள் 4 செ.மீ முதல் 6 செ.மீ. வரை அகலமும் 60 செ.மீ. முதல் 90 செ.மீ வரை நீளமும் உள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் மேற்குக் கடற்கரை, இலங்கை, மலேசியக் கடற்கரை ஆகிய பகுதிகளில் கூந்தற்பனை மரங்கள் அதிகம் வளர்கின்றன. கூந்தற்பனையின் ஒலை மிக மெல்லியதாகவும் வழவழப்பாகவும் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது.
மூன்றாவது வகையான லந்தர்பனை ஒலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் பனை மரங்கள் இந்தியாவின் வடகிழக்கு.
பகுதிகள், பர்மா, தாய்லாந்து ஆகிய இடங்களில் அதிகமாக வளர்கின்றன. ஓலைகள் எழுதுவதற்கேற்பப் பதப்படுத்தும் முறையை ‘ஏடு பதப்படுத்துதல்‘ அல்லது ‘பாடம் செய்தல்‘ என்று கூறுவர். எழுதுவதற்குத் தயாரிக்கப்பட்ட ‘ஒலை வெள்ளாலை‘ அல்லது ‘வெற்றெடு‘ எனப்படும் புத்தக ஏடுகளாக உதவும் படி ஒலையைச் சீவிக் செம்மையாக்குவதை ஒலை வாருதல் அல்லது ஏடு வாருதல் என்பர்.
செம்மை செய்யப்பட்ட ஏடுகளின் இருபுறமும் அளவாகத் துளைகள் போடப்படும். இத்துளைகள் ஒலைக் கண்கள் எனப்படும். இரு துளையிடப்பட்ட ஒலைகளில் இடப்பக்கம் நூல் கயிறு கோர்த்தும் வலப்பக்கம் மெல்லிய குச்சியைச் செருகியும் சுவடி தொய்வடையாமல் காக்கப்படுகிறது. குச்சிக்குப் பதில் பித்தளை அல்லது இரும்பாலான கம்பியையும் பயன்படுத்துவதுண்டு. இந்தக் குச்சி அல்லது கம்பிக்கு நாராசம் என்று பெயர். இது கள்ளாணி என்றும் கூறப்படுகிறது.
ஓலைச் சுவடியில் எழுதுவதற்குப் பயன்படும் ஆணியை (styles), ஓலைதீட்டுப்படை, எழுத்து ஊசி, எழுத்தாணி என்பர். ஏட்டுச்சுவடியின் இருபக்கங்களிலும் இரண்டு மரச்சட்டங்களை சேர்ப்பர். இச்சட்டத்திற்கு கம்பை என்பது பெயர். ஏட்டிச்சுவடிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிற்றின் தலைப்பில் பனையோலையை அதன் ஈர்க்குடன் கிளிமூக்குப் போலக் கத்திரித்துக் கட்டியிருப்பர். அதற்குக் கிளி மூக்கு என்பது பெயர். சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய பலகையைத் தூக்கு என்றும் அசை என்றும் கூறுவர். கவளி என்பார் சேழக்கிழாரடிகள். தூக்குகளைத் தூக்கி செல்லும் ஆட்கள் தூக்குக் தூக்கி என அழைக்கப்பட்டனர். அரசர் கூறும் செய்தியை ஒலையில் எழுதுவார், திருமந்திரவோலை அவர்கள் தலைவன் திருமந்திர வோலை நாயகம்.
ஓலைச்சுவடி பாதுகாத்தல்
திருநெல்வேலியைச் சார்ந்த கவிராயர் ஒலைச்சுவடிகளில் எழுதி இலக்கியங்களைப் பாதுகாத்துள்ளார். எட்டையபுரம், சிவகிரி, சொக்கப்பட்டி, ஊற்றுமலை - குறு நில மன்னர்களும் வரதுங்கூராம பாண்டியன், அதிவீர ராம பாண்டியர் வடமலையப்ப பிள்ளையன் போன்றோர் ஏடுகளைத் தொகுத்துள்ளனர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், காஞ்சி ஞானப் பிரகாசர் மடம், மதுரை திருஞான சம்பந்தர் மடம் ஆகியனவும், குடந்தை, சிதம்பரம், திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களில் உள்ள வீர சைவர்களும் ஏடுகளைத் தொகுத்தும் வெளியீடுகள் புரிந்தும் தமிழ்த் தொண்டு செய்துள்ளனர். (இரா.இளங்குமரன் 1991 : 109) அரசினர் கீழை நாட்டுக் கையெழுத்து நூல் நிலையம் (கர்னல் காலின் மெக்கன்சியின் சேகரிப்பு), சரசுவதி மகால் நூல் நிலையம், மதுரைத் தமிழ்ச்சங்கம், டாக்டர் சுவாமி நாதைய்யர் நூல் நிலையம் என பல இடங்களில் சுவடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அரசு அருங்காட்சியகம், தொல்பொருள் துறை, சித்த மருத்துவக் கல்லூரி போன்று பல இடங்களில் தனியார் பலரிடம் ஒலைச் சுவடிகள் உள்ளன. வெளி நாட்டு நூலகங்களிலும் தமிழக ஒலைச் சுவடிகள் இருக்கின்றன.
திருநெல்வேலி ஓலைச் சுவடிகள்
இலக்கியம், கலை, மருத்துவம், ஜாதகம், ஜோதிடம், கணிதம், நிகண்டு, நாட்டார் வழக்காறுகள் என பலவகைச் செய்திகள் எழுதப்பட்ட ஒலைச்சுவடிகள் திருநெல்வேலியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகுதியாக உள்ளன. திருநெல்வேலி பகுதியில் கவிராயர் குடும்பங்களில் மிகுந்த ஒலைச் சுவடிகள் உள்ளன. அண்ணாவிகள் எனப்படும் ஒலைச்சுவடி பள்ளி ஆசிரியர்கள் களியாட்டம், போன்றவற்றையும் நாட்டார் நாடகம் நிகழ்த்தும் அண்ணாவிகள் நாடகச் சுவடிகளையும் பாதுகாத்து வருகின்றனர். வைத்தியர்கள் எனப்படும் நாட்டு மருத்துவர்களும் ஒலைச் சுவடிகளில் இருந்து மருத்துவத்தை அறிந்து மருந்து கொடுத்து வருகின்றனர்.
ஜோதிடர்கள், புதிரை வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான் என பலர் ஓலைச் சுவடிகளைப் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வருகின்றனர். ஜமீன்தார், பண்ணையார் வீடுகள், கோவில்கள், தனியார் பலரின் வீட்டு பூஜை அறைகளிலும் ஒலைச் சுவடிகளைக் காணலாம். பழைய பொருட்களை வாங்கி விற்பவர்களிடமும் ஒலைச்சுவடிகள் உள்ளன. புலவர்கள், அண்ணாவிகள், இறந்த வீடுகளில் ஏடுபடிப்போர்கள் என பலரும் ஒலைச்சுவடிகளை வைத்துள்ளனர்.
உ.வே.சாவும் திருநெல்வேலி ஒலைச்சுவடிகளும்
தமிழ்த்தாத்தா என பெருமையாகப் போற்றப்படும் உ.வே.சாமி நாதைய்யர், பல அறிய இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றை அவருக்கு வாரி வழங்கியது திருநெல்வேலி என்பதனை “என் சரிதை” என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளார் கி.பி. 1888 ஆம் ஆண்டில் திருநெல்வேலியின் பல பகுதிகளுக்குச் சென்று ஒலைச் சுவடிகளைத் தேடியவர் உ.வே.சா. திருநெல்வேலி மேலை வீதியில் இருந்த கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை வீட்டில் ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து “தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்” என்று எழுதியுள்ளார்.
சிறீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த ஏ. இராமசந்திரைய்யர், கவிராயர் ஒருவரிடமிருந்து சீவக சிந்தாமணி ஏட்டுச் சுவடியை முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார். திருநெல்வேலியிலிருந்து சுப்பிரமணிய தேசிகர் சில ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுத்தார். திரிகூட ராசப்பகவிராயர் வீட்டில் உள்ள பழைய ஏடுகளைப் பார்த்து விட்டு செங்கோட்டை கவிராச பண்டாரம் பரம்பரையினர் வீட்டிற்கும் சென்றார் உ.வே.சா. அவர்கள் வீடுகளில் எவ்வளவோ பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. சிந்தாமணியில் சில பகுதிகள் கிடைத்தன என எழுதியுள்ளார். கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் என்னும் ஊர்களில் இருந்த கவிராயர்களிடம் இருந்த ஏடுகளைப் பார்வையிட்டு சிந்தாமணியின் சில பகுதிகளைப் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளையும் அவரது சகோதரர் கவிராஜ நெல்லையப்ப பிள்ளையும் உ.வே. சாவிற்கு பேருதவி செய்துள்ளனர். அவர்கள் வீடு திருநெல்வேலி, தெற்குப் புதுத் தெருவில் இருந்துள்ளது. சிறீவைகுண்டம் முதலிய ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏடுகள் இருந்ததாய் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி தெற்குப் புதுத் தெரு கிருஷ்ணவாத்தியார், தொல்காப்பியச் சுவடியைக் கொடுத்துள்ளார்.
உ.வே.சா. திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் இருந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயர் வீட்டிலும் ஒலைச் சுவடிகளைப் பார்த்துள்ளார். 200 ஆண்டுகள் பழமையான பத்துப் பாட்டு ஏடுகளைக் கண்டார். சிந்தாமணியும் கொங்குவேள் மரக்கதையும் சில பிரபந்தங்களும் அங்கு இருந்ததுள்ளன.
சிறீவைகுண்டம், வெள்ளுர், கரிவலம்வந்த நல்லூர், ஆழ்வார் திருநகர், நான்குநேரி, களக்காடு, விக்கிரமசிங்கபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, தென்காசி என பல ஊர்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளைப் பார்த்துள்ளார். பல்லாயிரக் கணக்கான ஒலைச் சுவடிகளைக் கண்ட உ.வே.சா. தனக்குத் தேவையான காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை மட்டும் சேகரித்துப் பதிப்பித்துள்ளார். மற்றவற்றின் நிலை என்ன ? நிகண்டுகள், மருத்துவம், ஜோதிடம் என பல்வகைச் சுவடிகளும் திருநெல்வேலிப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட வேண்டும். முக்கூடற் பள்ளு, குற்றாலக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய சுவடிகள் திருநெல்வேலி பகுதியில் உள்ளன.
நாட்டார் வழக்காற்று ஒலைச்சுவடிகள்
மொழி, இனம், ஜாதி, மதம், இடம், வேலை, பால் போன்ற ஏதாவது ஒரு பொது, பண்பு கொண்ட ஒரு குழுவினரை ‘நாட்டார்‘ என்பர். வழக்காறுகள் என்பது இத்தகைய மக்கள் மத்தியில் நிலவும் வாய்மொழி இலக்கியம் அல்லது வெளிப்பாட்டிலக்கியம், பொருள் சார் பண்பாடு, சமூகப் பழக்க வழக்கங்கள், நிகழ்த்து கலைகள், போன்றவற்றைக் குறிக்கும். நாட்டு புற இலக்கியம், பாமர இலக்கியம், கிராமப் புற இலக்கியம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுவனவற்றை நாட்டார் இலக்கியம் என்பர். கதைப் பாடல்கள், கழியல் ஆட்டப் பாடல்கள், நாட்டார் நாடகப் பாடல்கள், அழிப்பாங்கதைப் பாடல்கள், கும்மிப்பாடல்கள், திருமண வாழ்த்துப் பாடல்கள், சித்த மருத்துவம், மந்திரப் பாடல்கள் போன்றவை எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் திருநெல்வேலிப் பகுதியில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஜோதிடம், விலங்கு, பறவை மருந்தும், கணிதம் என பல நாட்டார் சுவடிகள் இன்றும் உள்ளன.
கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளில் அகச்சான்றுகளாகக் காணப்படும் குறிப்புகள் கொண்டு தமிழக ஊர்களைச் சேர்ந்த (கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள், இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்கள் மிகுதி) சுவடிகள் இவை எனத் தெரிய வருகிறது. (நிர்மலா தேவி 1996:28) இவை வில்லுப்பாட்டுக் கதைச் சுவடிகள். திருநெல்வேலிப் பகுதியில் இசக்கியம்மன், வண்டி மலைச்சியம்மன், பேச்சியம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், பார்வதியம்மன் கதை, சுடலை மாடன்கதை, முத்துப்பட்டன் கதை, மாரியம்மன் கதைப்பாடல் சுவடிகள் பலவேஞ் சேர்வைக்காரர் கதை, தடிவீர காமி கதை, சங்கிலிப் பூதத்தாற் விற்கதைப் பாட்டு, போன்ற பல கதைப் பாடல் சுவடிகள் வில்லிசை புலவர்கள் பலரிடமும் உள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை வ.உ. சிதம்பரம் பிள்ளை எஸ். வையாபுரி பிள்ளைக்கு வழங்கியுள்ளார்.
கட்டபொம்மன் கும்மிப்பாடல் பாளையங்கோட்டை திரு. சுப்பையா கோனார் அவர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளது. பணங்குடி, வள்ளியூர், நான்குநேரி, கூடன்குளம், உவரிக்குட்டம், திசையன்விளை, சாத்தான்குளம், இராதாபுரம், தென்பத்து - வடபத்து, மாநாடு, திருச்செந்தூர், குரும்பூர், உடன்குடி, தாமிரபரணியின் தென்கரை வடகரை நாடுகள், காயல் - கொற்கை, கயத்தாறு, பாஞ்சாலம் போன்ற பகுதிகளில் வரலாறு பொதிந்துள்ள ஆயிரக்கணக்கான சுவடிகள் இப்பொழுது கிடைத்து வருகின்றன. (ஆ. தசரதன் 1988 : 102) பேராசிரியர் வையாபுரி பிள்ளை இராமப் பையன் அம்மானையைப் பதிப்பித்தார். நா. வானமாமலை வரலாற்றுக் கதைப் பாடல் சுவடி பதிப்பிற்கு வழி காட்டியவர். ஏ.என்.பெருமான், தி. நடராசன், சு.சண்முகசுந்தரம் போன்ற பலர் கதைப் பாடல் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்துள்ளனர்.
அழிப்பாங்கதைப் பாடல்கள் போன்ற பல நாட்டார் வழக்காற்றுச் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தவர் ஆ.தசரதன். இவர் நாட்டார் வழக்காற்றுச் சுவடிகளைச் சேகரிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றார். கழியல் ஆட்டப்பாடல்கள், கும்மிப் பாடல்கள், கிறித்துவ நாட்டார் நாடகங்கள் என நாட்டார் சுவடிகளைச் சேகரித்து வருபவர் ஆய்வாளர் வே. கட்டளை கைலாசம். மேலும் பல ஆய்வாளர்கள் நாட்டார் வழக்காற்று ஒலைச் சுவடிகளைத் திருநெல்வேலி பகுதியிலிருந்து சேகரித்து வருகின்றனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், ஆசியவியல் நிறுவனமும் பல சுவடிகளைப் பதிப்பித்துள்ளன.
இன்னும் பலரிடம் ஒலைச் சுவடிகள் மூடங்கிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வர வேண்டும். இன்றைக்கும் எத்தனை கிராமங்களில் நாட்டுப்புறத்து வீடுகளில் எத்தனை சந்து பொந்துகளில் என்னென்ன ஏடுகள் கறையானுக்கு இரையாகி வருகின்றனவோ? மிஞ்சிய மீதம் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ? ஐயரவர்கள் செல்லாத இடங்கள் இன்னும் எத்தனையோ? அங்கெல்லாம் என்னென்ன இலக்கியங்கள் புழுங்கி மடிந்து கொண்டிருக்கின்றனவோ யார் கண்டார்கள்? விஷயம் தெரியமாலும், பண்டித புத்திரர்களின் அறியாமையினாலும் ஏடுகள் எப்படிச் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனவோ பரிதாபம்” என (மீ.ப. சோமு 1980:11) கூறுவது சிந்தனைக்குரியது. மத்திய அரசின் கலாச்சார துறையின் தேசிய ஓலைச்சுவடிகள் மையம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து ஓலைச் சுவடிக் கணக்கெடுப்பை இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒன்று முதல் ஐந்தாம் தேதிவரை நடத்தியது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு லட்சம் ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சங்கரன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் முப்பதினாயிரம் ஓலைச் சுவடிகள் இருப்பதாய் அறியப்பட்டுள்ளது. (தினமலர் 7.2.2006 ப.7).
முற்றும்

No comments:
Post a Comment