For Read Your Language click Translate

11 June 2014

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SGL ரிசிப்ட்ஸ்களை விற்கும். அதனை NationalHousing Board நிறுவனம் வாங்கும்.  இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பத்திரங்களை விற்றப் பணம்,  ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும்.
நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய Privileged/Corporate Customer  களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம். அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல், வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு  மாற்றிக் கொள்வார்கள். பிரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த  முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா  பயன்படுத்திக் கொண்டான்.
பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக NHB காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும். ஹர்ஷத்  மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து  கொள்ளுமாறு சொல்வார்கள். நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க  வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும். ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச்  சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான்.
அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர  வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம். முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம்.
மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன், இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ?
சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன. அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப்  பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன.
SGL ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை. மற்றொரு முறையையும் தரகர்கள்  கையாண்டனர். இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான்.
Bank Receipt எனப்படும் BR மூலமும் பலக் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்தது. அது என்ன BR ?
பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம்  பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.
அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த BRல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம்  கொடுக்கும். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி, குறிப்பிட்ட தேதியில் பணத்தைப்  பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த BRல் ஒப்புக் கொடுக்கும். ஏறத்தாழ  இது ஒரு ஒப்பந்தம் போலத் தான். இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான்  மேற்கொள்ள வேண்டும்.
பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான SGL கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப்  பதிவில் பார்த்தோம். உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை. மாறாக, SGL  கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல SGL ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும்  என்றும் பார்த்தோம். இந்த முறைப் படி BR பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது. ரிசர்வ் வங்கியின்  விதிமுறைப்படி BR மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது. ஆனால் இந்த முறை தான் பத்திர
ஊழலில் மிக  முக்கியப் பங்கு வகித்தது.
இந்த SGL ரிசிப்ட்சை Public Debt Office (PDO) எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன்  பொறுப்பில் வைத்திருந்தது. குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ்  பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு  அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற  நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லாமே Paper Work காக இருந்தக் காலம்.
எனவே வங்கிகள் இந்த SGL  ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக BR எனப்படும் Bank Receipt மூலமே தங்கள்  பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது.
வங்கிகளுக்கு இந்த BR முறையில் பல வசதிகள் இருந்தன.
- BR மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன்   ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். பத்திரங்களை SGL மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது.
- பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறைக்கு BR உதவிகரமாக இருந்தது.
அது என்ன பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறை ?
இதற்குப் பெயர் Short Selling. பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் வழக்கிலிருக்கும் ஒரு முறை.
உங்களிடம் பத்திரங்களோ, பங்குகளோ இல்லாமலேயே விற்க முடியும்.
ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும். ஒரு பொருள்  நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும்.
ஆனால் பங்குகளிலும், பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும், பங்குகளையும்  விற்க முடியும். இதற்கு பெயர் தான் Short Selling.
உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத்
தோன்றுகிறது. தற்போதையச்  சந்தை விலை 1900 ரூபாய். நீங்கள் ஒரு 100
பங்குகளை (உங்களிடம் இல்லாதப் பங்குகள்) விற்கலாம். சந்தைச்  சரிகிறது.
இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது.
இப்பொழுது நீங்கள் 100  பங்குகளை வாங்கி விடலாம்.
நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 1800 = 1,80,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000
லாபம் = 10,000
இதற்கு நேர்மாறாக இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து 2000ஐ எட்டினால், உங்களுடைய நஷ்டம் 10,000
நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 2000 = 2,00,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000
இதே முறையில் பத்திரங்கள் இல்லாமலே விற்று லாபம் பார்க்கலாம்.
ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்றச் செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும். உடனே  தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு BR கொடுத்து விற்று விடும். சந்தை விலைச் சரிந்தப் பிறகு  குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் லாபம் கிடைக்கும்.
BRல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வர்த்தக முறையில்  ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும்  பயன்படுத்திக் கொண்டனர்.
அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும்  முறை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு BR.
கிரிமினல் மூளையுடைய ஹர்ஷத் மேத்தாவிற்கு இதற்கா வழி கிடைக்காமல் போய் விடும்.
 

No comments:

Post a Comment