For Read Your Language click Translate

10 June 2014

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 1
- சசிகுமார்
    

 SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.

பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.

சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்துப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டது. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.

இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் "Big Bull". அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)

இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான்.

சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது. கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.

ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.

ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் "இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் " என்று சொன்னானாம்.

அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து பார்ப்போம்

No comments:

Post a Comment