For Read Your Language click Translate

11 July 2014

கேது திசை

கேது திசை

கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கேது ஒரு பாவ கிரகம் என்பதால் அவர் உப ஜயஸ்தானங்களான 3,6,10,11 ல் அமையப் பெற்றிருந்தாலும் 1,5,9 ல் அமைந்து குருபார்வையுடனிருந்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோயில் கட்டும் பணிகளில் ஈடுபாடு தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு கொடுக்கும். கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் கேது திசை காலங்ளில் ஒரளவுக்கு நன்மையான பலன்களை அடைய முடியும்.

பொதுவாகவே கேதுதிசை காலங்களில் நற்பலனை அமைவதை விட கெடு பலன்களே அதிகம் உண்டாகும். கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெற்றோ, பாவகிரக சேர்க்கைப் பெற்றோ அமைந்து கேதுதிசை நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய அவலங்களை எதிலும் மந்தம், இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். குறிப்பாக கேது திசை  காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் திருமணம் செய்தால் இல்வாழ்வில் ஈடுபாடு உண்டாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். 8ல் கேது ஒருவருக்கு அமைந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி என்ன வியாதி என்றே கண்டு பிடிக்க முடியாத நிலை உண்டாகும். குழப்பங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும் இத்திசை காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும் கேது பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டு தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும். வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும், கல்வியில் சுமாரான நிலையிருக்கும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளுக்காக செலவு செய்யும் அமைப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை, சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து உயரக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

அதுவே கேது பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் வயிறு கோளாறு, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள், பெற்றோருக்கு  சோதனையை உண்டாக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தேவையற்ற பழக்க வழக்கங்கள், காதல் என்ற வலையில் சிக்கி சீரழியும் வாய்ப்பு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஊர் விட்டு ஊர் சென்று அலைந்து திரியும் சூழ்நிலை, தற்கொலை எண்ணம் போன்றவை உண்டாகும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு நெருங்கியவர்களை இழக்கும் நிலை, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகும்.

கேது திசையில் கேதுபுக்தி
    
கேதுதிசையில் கேது புக்தியானது 4&மாதம் 27&நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும் அமைப்பு, அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை வகுக்கும் யோகம் எடுக்கும் காரியங்களில் வெற்றி, தான தருமம் செய்யும் யோகம் ஆலய தரிசனங்கள் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

   கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கெடூர செயல்களை செய்யும் நிலை, விதவைகளால் பிரச்சனை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்கு, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

கேது திசை சுக்கிர புக்தி
   
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2&மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும்  அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம்,  உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம் எதிர்பாராத செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம், இடம் விட்டு இடம் சென்று சுற்றி திரியும் நிலை, சர்க்கரை நோய் உண்டாகும்.

கேது திசா சூரிய புக்தி
    
கேது திசையில் சூரிய புக்தி யானது 4&மாதம் 6&நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு மூலம் அதிகார பதவிகளை வகுக்கும் யோகம் மனைவி பிள்ளைகளால் சிறப்பு, புண்ணிய யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு, பூர்வீக சொத்துகளால் அனுகூலம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண் விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.

கேது திசா சந்திர புக்தி
   
கேது திசையில் சந்திர புக்தியானது 7&மாதங்கள் நடைபெறும். 

இத்திசை காலங்களில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் மன உறுதியும், எடுக்கும் காரியங்களில் வெற்றியும், தாராள தன வரவும் ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல உணவு வகைகளை சாப்பிடும் யோகம், வீடு மனை வண்டி வாகன யோகம், ஜலத்தொடர்புடையவைகளால் லாபம் தாய் மற்றும் தாய் வழியில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிறு கோளாறு, ஜலதொடர்பான உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளில் பகை விரோதம், வீடு மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

கேது திசா செவ்வாய் புக்தி

கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4&மாதம் 27&நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வீடு மனை  பூமியால் அனுகூலம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சகோதரர்களுக்கு சற்றுதோஷம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செவ்வாய் பலமிழந்திருந்தால் வண்டி வாகன விபத்துக்களால் ரணகாயம், திருடர் பயம், வயிற்று போக்கு, மனைவி பிள்ளைகளிடையே கலகம் ஜீரம்,  அம்மை,  கட்டி, புண்,  பகைவரால் தொல்லை உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடைய« பகை வீண்பழிகளை சுமக்கும் நிலை உண்டாகும்.
   
கேது திசை ராகு புக்தி

   கேது திசை ராகு புக்தியானது 1வருடம் 18நாட்கள் நடைபெறும். 

கேது திசையில் ராகுபுக்தி என்பதால் அவ்வளவு அனுகூலமான பலன்களை அடைய முடியாது. பெண்களால் கலகம், விதவை பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள் அடிமைத் தொழில், குடும்பத்தில் நோய், இடம்  விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கேது திசையில் குருபுக்தி
    
கேது திசையில் குருபுக்தியானது 11&மாதம் 6&நாட்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி, பூரிப்பு, தன தான்ய விருத்தி, உறவினர்களால் அனுகூலம், திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத தனவரவு, பெரிய மனிதர்களின் தொடர்பு, புத்திர வழியில் பூரிப்பு, செல்வம் செல்வாக்கு உயர்வு உண்டாகும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுப காரியத்தடை, பிராமணர்களின் சாபம், கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.

கேது திசை சனிபுக்தி

   கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம் லாபம் கிட்டும். திருமணம் புத்திர பாக்கியம் அமையும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவிகள் கிட்டும். பொன் பொருள், வண்டி வாகனம் சேரும். சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கஷ்டஜீவனம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேது திசையில் புதன் புக்தி

கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் புக்தி கூர்மை, ஆடை ஆபரண சேர்க்கை தாய் வழி மாமன் மூலம் அனுகூலம்,  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் கணக்கு, கம்பியூட்டரில் ஆர்வம் உயர்வு உண்டாகும். வண்டி வாகனம் சேரும். தானதர்மம் செய்யும் பண்பு  வண்டி வாகனங்களால் சேரும் யோகம் உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, தாய் மாமன் வழியில் விரோதம், கருசிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்பு தளர்ச்சி, தலைவலி, போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேதுவுக்குரிய பரிகாரங்கள்

தினமும் விநாயகரை வழிபடுதல், கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல், சதூர்த்தி விரதம் இருத்தல், வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும் படி அணிதல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.

No comments:

Post a Comment