For Read Your Language click Translate

30 December 2014

ஒதிமலை----> சுப்பிரமணியர்

அந்த மலை சுமார் மூவாயிரம் அடிக்கும் மேல் இருக்கும்.  பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எங்கும் ஒரு வீடோ, மனிதர் வசிக்கும் இடமோ இல்லை.  எங்கும் விளை நிலங்கள்.  எல்லா மறைவிலிருந்தும் விலகி தனித்து நின்றது.  அடிவாரத்தில் ஒரு சிறிய விநாயகர் சந்நிதி.  அவருக்கு பின்னால் இருந்து மேல் நோக்கி செல்லும் படிகள், சுமார் ஒரு ஆயிரத்து எண்ணூறு இருக்கும். மலையின் உடலெங்கும் முள் செடிகளும், மூலிகை செடிகளும் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சிறிய மரங்களும்.  அமைதியாக சிறிது தூரம் நடந்தவுடன் களைப்பு மேலிட ஒரு இடத்தில் அமர்ந்து எங்கிருந்தோ வரும் காற்றும் அதில் கலந்து வந்த மலையின் பச்சை இலை வாசனையும் உடலுக்குள் புகுந்து புது தெம்பை கொடுக்க, அதுவரை அமைதியாக இருந்த பக்தர் அந்த மலையை பற்றி விளக்கினார்.

இந்த மலை போகர் சித்தருக்கு சொந்தமானது.  அவர் பல காலங்களாக இங்கு தங்கி இருந்து இங்கு உறையும் இறைவனை பூசித்து வந்தார்.  இங்கு இருக்கும் போது தான் இறைவன் உத்தரவால் பழனி மலையில் நவ பாஷாண முருகர் விக்ரகம் செய்ய கிளம்பினார்.  அதற்கு முன் இந்த மலையின் நான்கு திசைகளிலும் யாகம் வளர்த்து பூசை செய்தார்.  அதோ ஒரு ஐந்து பனை மரங்கள் சேர்ந்தால் போல் தெரிகிறதே,  அந்த பூமி தான் ஈசான மூலையில் யாகம் வளர்த்த இடம்.  பாருங்கள், அந்த பூமி பக்கத்தில் இருக்கும் மற்ற நிலங்களை விட சற்று வெளுப்பாக இருக்கும்.  இன்றும் அந்த பூமியை விவசாயத்துக்கு உபயோகிப்பதில்லை.  அந்த பூமியில் எங்கு தோண்டினாலும் உள்ளிருந்து மண் சாம்பல் நிறத்தில் வெளி வரும்.  அது யாக சிஷ்டம் என்கின்றனர்.  அரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  அந்த இடத்தை "பூதிக்காடு"  என்று அழைக்கின்றனர்.  கீழே இறங்கி செல்லும் போது நாம் அங்கு செல்லலாம்.

போகர் பூசை செய்த காலங்களில், இங்கு உறையும் பெருமானுக்கு பன்னிரண்டு கரங்களும், ஆறு முகமும் இருந்ததாக தகவல்.  இங்கிருந்து இறங்கி சென்ற சித்தருக்கு சற்று தூரம் சென்றதும், பழனி செல்லும் வழி தெரியாமல் தடுமாறவே, இறைவனை கூப்பிட்டாராம்.  இறைவனும், ஒரு முகம், நான்கு கரங்களுடன் இறங்கி வந்து ஒரு எல்லை வரை சென்று வழி காட்டிவிட்டு, "இதற்கு மேல் நான் வர முடியாது, இனிமேல் நீ விசாரித்து சென்று விடு" என்று கூறி அங்கேயே தங்கி விட்டாராம். அதனால், அந்த இடத்தில் உறையும் இறைவன் நான்கு கரங்களும், ஒரு முகமும் கொண்டு அருள் பாலிக்கிறார்.  அந்த இடம் "வேலாயுதம் பாளையம்" என்று தற்போது அழைக்கப்படுகிறது.  வழி தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும், வழி காட்டும் இறையாக அங்கு குடிகொண்டுள்ளார்.

இங்கு மலை மேல் மீதும் உள்ள ஐந்து முகம், எட்டு கரங்களுடன் அபயம் என்று வருபவர்களை காத்து அருள் புரிந்து, வழி காட்டுகிறார்.  இந்த கோவிலில் ஒரு வித்யாசமான முறை ஒன்று கடை பிடிக்க படுகிறது.  இங்கு உறையும் இறைவனுக்கு அபிஷேக,  ஆராதனை, நிவேதனம், கற்பூர ஆரத்தி எடுத்த பின், பூசாரி "யாருக்காவது உத்தரவு கேட்க வேண்டுமா" என்று கேட்பார்.  அனேகமாக வந்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து உத்தரவு கேட்பார்கள். அவரவர் செய்த கர்மா வினைபடியும், நேரப்படியும், கேட்கப்படும் விஷயத்தின் தன்மையை பொருத்தும் முருகர் உத்தரவு கொடுப்பார்.  நீங்களே அதை பார்க்கலாம்.  நேரம் வரும்போது சொல்கிறேன்.  போய் அமருங்கள்.  உங்களுக்கு என்ன கேட்கவேண்டுமோ கேளுங்கள். என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்", என்று சற்று அர்த்த புஷ்டியுடன் சொன்னார்.

மனம் பிரச்சினைகளில் தவித்துக்கொண்டு எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருந்ததால் அத்தனை தகவலையும் உள் வாங்கி "சரி! நேரம் வரட்டும்! பார்க்கலாம்" என்று அமைதியானான்.

யாகத்துக்கான சாமான்களை தலையில் சுமந்து கொண்டு நான்கு பேர் மலை ஏறி சென்றனர்.  போகும் வழயில் பக்தரிடம் "வணக்கம்" சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு அதில் இருந்த ஒருவர் மட்டும் தள்ளி அமர்ந்திருந்த அவனை பார்த்து "வணக்கம் சாமி!" என்று சொன்னார்.  "யார் என்றே தெரியாது! நமக்கு ஏன் வணக்கம் சொல்கிறார்" என்று யோசித்து, மரியாதை நிமித்தமாக "வணக்கம் ஐயா!" என்று பதிலுரைத்தான்.

அவர்கள் சென்ற பின் பக்தர் "உங்களுக்கு வணக்கம் சொன்னாரே, அவரை யார் என்று நினைத்தீர்கள்? பார்க்க கூலி வேலை செய்வதாகத்தான் தோன்றும்! இங்கு உறையும் இறைவனின் அடியார்.  பல முறை அந்த இறைவனை பாலகனாக இந்த படிகளில் அமர்ந்திருக்க பார்த்துள்ளார்.  நடு இரவில், அதிகாலை பூசைக்கு சாமான்களை கொண்டு ஏறும் போது "முருகா காப்பாற்று" என்ற ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு ஏறுகிற நாட்களில், ஒரு பத்து வயது பையன் ரூபத்தில் இந்த படிகள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து இருந்து கடக்கும் போது "நிதானமா பார்த்து போ" என்று குரல் கொடுப்பான்.  இதை பல முறை அனுபவித்துள்ளவர் அவர்.  அவனை பார்ப்பதற்கென்றே யார் நடு நிசியில் கூப்பிட்டு மலை மேல் சாமான்களை ஏற்றவேண்டும் என்றாலும், எத்தனை அசதியிலும் ஓடி வருபவர்.  இன்னும் எத்தனையோ அதிசயங்கள் இங்கு உண்டு.  போக போக புரியும்.  வாருங்கள் மலை ஏறலாம்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு நடந்தார்.

பாதி தூரத்தில் ஒரு பிள்ளையார் சன்னதி.  வெளியே வெயில் கொளுத்தினாலும், அவர் சன்னதியில் நல்ல குளிர்ச்சி.  ஒரே ஆச்சரியம்.  அந்த மலையில் காலடி எடுத்து வைத்த பின் முதன் முறையாக அந்த பிள்ளையாரிடம் "இறைவா! அனைத்து விக்னங்களையும் விலக்கி எல்லாம் சுபமாக முடிய உன் அருள் வேண்டும்" என்று பொதுவாக வேண்டிக்கொண்டான்.  பார்த்துக்கொண்டிருந்த பக்தர், வெளியே வந்ததும், அந்த சன்னதிக்கு பக்கத்தில் கீழ் நோக்கி ஓடி செல்லும் ஒரு ஒற்றை அடிப்பாதையை காட்டி, "இது போகர் குகைக்கு செல்லும் வழி, மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.  பின்னர் போய் பார்க்கலாம்"  என்று கூறி செங்குத்தான மலை படிகளில் ஏறத்தொடங்கினார்.

இத்தனை நேரம் நடந்த நிகழ்ச்சிகளை, தெரிவிக்கப்பட்ட விஷயங்களை மனதுள் அசை போட, இந்த மலையில் அதிசயமான நிறைய விஷயங்கள் இருக்கும் போலிருக்கே என்று அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.  "போதும், ஆராய்ச்சியில் இறங்கி ஒரு முறை பிரச்சினையில் மாட்டிகொண்டது போதும்" என்று மனது சொல்லியதினால், உடனே அந்த எண்ணத்தை விலக்கினான்.

மலை உச்சியை அடைந்த போது அவனுக்குள் மிச்சம் இருந்த சக்தியும் வற்றி விட்டது.  கோவில் வளாகத்துக்குள் சென்று கை கால் கழுவி சுத்தம் செய்துகொண்டு சன்னதியின் முன் சென்று நின்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.  உலகத்தில் உள்ள மொத்த அழகையும் எடுத்து தன்னுள் அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன், அபய கரத்துடன் "வா பக்தனே" என்று வரவேற்பதுபோல் நின்று கொண்டிருந்தார், அங்கு உறையும் எம்பெருமானார் சுப்பிரமணியர்.  அபிஷேகம் முடிந்து, செய்திருந்த அலங்காரம் அவர் அழகை மேலும் மெருகூட்டியது.  அதில் பூசாரியின் கை வண்ணம் தெரிந்தது.

(ஒதிமலை சுப்பிரமணியர்) (நன்றி திரு வேல்முருகன் என்கிற அடியவருக்கு)

உள் சென்று, சாஷ்டாங்கமாக இறையின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய, பக்தர், பூசாரியிடம் அவனை காட்டி "இவர் தான் யாகம் செய்ய ஏற்பாடு செய்ய சொன்னார்.  பூசையை முடித்துவிட்டு நாம் அதை பற்றி பேசலாம்.  எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டதா?" என்றார்.

அந்த பூசாரி பொதுவாகவே ரொம்ப அமைதியானவர்.  இவனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, "எல்லாம் வந்து விட்டது.  அபிஷேகத்துக்கான பால் மட்டும் இரவில் வரும்.  நாம் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்" என்றார்.

"முதலில் ஹோம குண்டத்தை தயார் பண்ணுங்கள்" என்று பக்தரிடம் சொல்ல, அவர் இவனை அழைத்து சென்று, அங்கு குவித்து வைக்கபட்டிருந்த கற்களை எடுத்து இவன் கையில் கொடுத்து "அதோ அங்கே பசுஞ்சாணம் தெளித்து இருக்கும் இடத்தில், உங்கள் கையால் வையுங்கள்" என்று கூறி கொடுத்தார்.
அதை வாங்கியவன் "இந்த முதற் கல் நல்ல தடுப்புக்கும், கவசத்துக்கும் தொடக்கமாக இருக்கட்டும்" என்று பிரார்த்தித்துவிட்டு  இறைவன் நேர் பார்வை படும் இடத்தில் கொண்டு வைத்தான், யாகம் ஓதிமலையப்பர் மேற்பார்வையில் நடக்க போகிறதென்று அறியாமலே.

சித்தன் அருள் ....................... தொடரும்!

No comments:

Post a Comment