For Read Your Language click Translate

30 December 2014

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும்



நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்கு தந்துக்கொண்டிருக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும் பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான். நாம் நினைத்த நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் நினைத்தாலும், அதுவும் இறைவன் விதித்ததே. ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்ததோ அவ்வாறு அந்த குழந்தையின் ஏற்ற தாழ்வு உண்டாகிறது.

செவ்வாய்

இந்த நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிக முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாயின் பலமே காரணமாக இருக்கிறது. போலீஸ்-இராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழில்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாயின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கும் கட்டடக்கலை வல்லுனர்-பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்துபவர் போன்றவர்களுக்கும் செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது-சேர்ந்தாலும் தங்காது. ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணமானவர் இந்த செவ்வாய்தான். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான் பூகம்பம் உட்பட உலகில் நிகழ்ந்த பூகம்பம்-நிலஅதிர்வுகளுக்கு செவ்வாயின் கோச்சார நிலை காரணமாக இருந்தது என்பதை ஜோதிட ஆர்வலர்கள் அறிவார்கள். ஆங்கிலத்தில் மார்ஸ் (MARS) என்று சொல்லி செவ்வாய் அழைக்கப்படுகிறது. விஞ்ஞான தகவலின்படி செவ்வாய், சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. போலீஸ்-இராணுவதுறைக்கு செவ்வாய்தான் அதிபதி என்று நம் இந்திய ஜோதிடம் சொல்கிறது. அதன்படி மேலைநாட்டவர் செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். செவ்வாய்க்கு ஏற்ற இரத்தினம் பவழம் என்றும் ரத்தின சாஸ்திரம் சொல்கிறது. காரணம் செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. அதனால் சிகப்பு நிறமுடைய பவழம் அணிவது நல்லது என்பது, இன்றல்ல நேற்றல்ல நவீன விஞ்ஞானம் வளர்ச்சிக்கு முன்னறே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்திய ஜோதிட சாஸ்திரம் சொன்ன விஷயம் இது. அதன்படி இன்றைய நவீன விஞ்ஞானம் செவ்வாயின் நிறம் சிகப்பு என்று கண்டுபிடித்ததாக சொல்கிறது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு மிகுந்திருப்பதால் அத்தகைய சிகப்பு நிறம் செவ்வாய் கிரகத்திற்கு உண்டாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சனி

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள். ஒரு இராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகும். சனிகிரகத்தை ஜோதிட சாஸ்திரம் மந்தன் என்று அழைக்கிறது. அதாவது ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம். சுறுசுறுப்பு குறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறது. உடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாக நடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம். ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்தின் சிறப்புகள் எண்ணில் அடங்காது. ஏழையாக இருந்தவனை செல்வ-அந்தஸ்தின் உச்சிக்கு கொண்டு செல்வதும், அந்தஸ்தின் உச்சியில் இருந்தவனை நடுதெருவுக்கு கொண்டுவருவதிலும் சனி கிரகத்திற்கு நிகர் இல்லை.
சனி பகவான் ஒருவருடைய ஜென்ம இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரும் போதும், அடுத்து ஜென்மத்திற்கு வரும் போதும், அதற்கு அடுத்து 2-ம் இடத்திற்கு வரும் காலத்தையும் ஏழரைநாட்டு சனி என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறது. அதாவது, சனி ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு செல்லும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும். அதன்படி 12-ம் இடம் இரண்டரை ஆண்டுகள், ஜென்மம் இரண்டரை ஆண்டுகள், இரண்டாம் இடத்திற்கு வந்த சனி இரண்டரை ஆண்டுகள் என ஆக மொத்தம் ஏழரை ஆண்டுகள் சனி ஒரு ஜாதகரை படாதபாடு படுத்துவார். அதுபோல ஒரு இராசிக்கு நான்காம் இடத்திற்கு சனி வரும்போது அதனை அர்தாஷ்டம சனி என்றும், ஒரு இராசிக்கு எட்டாம் இடத்திற்கு சனி வரும் காலத்தை அஷ்டம சனி காலம் என்றும் ஜோதிடம் அழைக்கிறது. இந்த அர்தாஷ்ட சனி மற்றும் அஷ்டம சனி காலங்கள் வெறும் இரண்டரை ஆண்டு காலமே என்றாலும், அதன் தாக்கம்பாதிப்பு, அய்யோ போதுமடா சாமீ என்று அலறும் விதமாக ஏழரை ஆண்டு சனிக்கு இணையானதான பலனை தருவதாக இருக்கும். சனி பகவான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான் பெரும் பணக்காரனும் ஒன்றுதான்.
சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமான எதையும் விரும்பக் கூடாது. அந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மனது ஆடம்பரத்தை விரும்புமேயானால் அந்த நபரின் கதி அதோ கதிதான். மன்னாதி மன்னனையும் அர்தாஷ்டம,அஷ்டம,ஏழரை ஆண்டு காலத்தில் சிறையில் தள்ளிபடாதபாடு படவைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே கிரகம் சனி கிரகம் மட்டும்தான். இத்தகைய தன்மைகளை சனிகிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமான வாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாது. சனி கிரகத்தின் துணை ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாது. அவன்()அவள் தொட்டதெல்லாம் பொன்தான். சனி மந்தமான தன்மை கொண்ட கிரகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னாலும், சனி மிக வேகமாக அதனுடைய அச்சில் சுழல்கிறது, அது தன்னைதானே சுற்றி வர பத்தரை மணி நேரமே எடுத்துக் கொள்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சனி கிரகம் சூரியனிலிருந்து ஆறாவது கிரகம் என்று நமக்கு விஞ்ஞானிகள் இன்று சொல்கிறார்கள். ஆனால் என்றைக்கோ நம் இந்திய ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் இதை சொல்லிவிட்டார்கள் எனபது மிக பெருமைக்குரிய விஷயமாகும்.
சூரியனின் இராசி மண்டலமான சிம்ம இராசியில் இருந்து சனியின் இராசி மண்டலமான மகர இராசி மண்டலம் ஆறாவது இடமாகும். அதாவது சூரியன் இருக்கிற சிம்ம இராசிக்கு ஆறாவது இடமான மகர இராசி சனியின் இடம் என்பதை நம் இந்திய ஜோதிட சாஸ்திரம் என்றைக்கோ சொல்லிவிட்டது. இப்படியாக செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் ஒரு ஜாதகனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். இதனை கிரக யுத்தம் என்றும் சொல்லலாம். இந்த செவ்வாய்-சனி ஒரே இராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். ஆனால் எந்த கிரகங்களும் துணை இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது. செவ்வாய்-சனியும் ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும் !பகுதி-2

லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது.
லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது.
லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது.
லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.
லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் கோர்ட்டு வரை இழுத்து செல்கிறது. இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து வைக்கிறது.
லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி () கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு.
லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும்.
லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தைமகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது.
லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும்போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும்.
லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.
லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. என்னடா வாழ்க்கை என்று சலிக்க வைக்கும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். விரயங்கள் விரைந்து வரும். தூர பயணத்தில் வெகு கவனம் தேவை.

பரிகாரம்

இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்ய வேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்கு கட்டுப்படும். சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும். முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும். இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும். விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன் நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது. நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிப்படுங்கள். துன்பம் செய்ய வேண்டிய அவர்களே நம் அன்புக்கு கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளி தருவார்கள். வழிபடுவோம்வளம் பெறுவோம். வாழ்த்துக்கள்.!♦

No comments:

Post a Comment