For Read Your Language click Translate

02 January 2015

உணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்!



‘83 வயதான ஒரு முதியவர் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவோ, நீரோ உட்கொள்ளாமல் நம் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்’ என்று யாராவது சொன்னால், நமக்கு அது அண்டப் புளுகாகவே தோன்றும்.

ஆனால் அவர் பற்றிய தகவல்கள் மேலை நாடுகளையும் எட்டி, 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் ‘தெய்வீக சக்திகளுள்ள சிறுவன்’ (The Boy with Divine Powers) என்ற ஒரு ஆவணப்படத்தில், அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?. அது மட்டுமல்ல. Independent Television Network (ITN ) என்ற தொலைக்காட்சி 2010–ம் ஆண்டில், அவரை வைத்து நடத்திய ஆராய்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதே ஆண்டு ‘ஆரம்பத்தில் ஒளி இருந்தது’ ( In the Beginning There Was Light ) என்ற ஆஸ்திரிய நாட்டு ஆவணப்படத்தில் அவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். யாரவர்?

அவர் பெயர் பிரஹலாத் ஞானி (Prahlad Jani ) . ராஜஸ்தானில் பிறந்த அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி காடுகளில் வசித்தவர். அவருடைய எட்டாம் வயதில் ஒரு தெய்வீக சக்தியுடைய பெண் (அவர் அம்பாள் என்று கூறுகிறார்), நேரில் வந்து அவர் நாக்கைத் தொட்டுப் போனதாகவும், அதற்குப் பின் அவருக்கு உணவோ, நீரோ தேவைப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்குப் பிறகு அவர் ஒரு பெண்ணைப் போலவே சிவப்பு சேலை உடுத்திக் கொண்டு, பெரிய மூக்குத்தி குத்திக் கொண்டு, வளையல் அணிந்து கொண்டு வாழ ஆரம்பித்திருக்கிறார்.

1970–ம் ஆண்டு முதல், குஜராத் காட்டுப்பகுதியில் உள்ள அம்பாள் கோவில் ஒன்றின் அருகே பிரஹலாத் ஞானி வசித்து வருகிறார். அவரை அந்தப் பகுதியினர் மாதாஜி என்றழைக்கிறார்கள்.

அவர் தொண்டைப் பகுதியில் ஒரு துளை இருக்கிறது. ‘அது அம்பாள் ஏற்படுத்தியது என்றும், அதன் மூலம் உடல் தனக்கு வேண்டிய சக்தியை உள்ளே ஈர்த்துக் கொள்கிறது என்றும்’ பிரஹலாத் ஞானி கூறுகிறார். ‘முக்கியமாக சூரிய ஒளியில் உள்ள சக்தியை ஈர்த்துக் கொள்வதால் தான், தன்னால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடிகிறது’ என்று அவர் சொல்கிறார்.

‘உணவின்றி மனிதன் ஒருசில வாரங்கள் உயிர்வாழ முடியும். நீரின்றி ஒருசில நாட்கள் உயிர்வாழ முடியும்’ என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு மேல் மனிதன் உயிர் வாழ்வதென்பது முடியவே முடியாது என்று உடலியல் மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் மூளை இயங்கத் தேவைப் படும் குளுக்கோஸ், உணவில் இருந்தே கிடைக்கிறது. குளுக்கோஸ் மூளைக்குக் கிடைக்க சில வினாடிகள் தடைப்பட்டாலும், அது உடலுக்கும் உயிருக்கும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவ உண்மை.

அப்படி இருக்கையில், வருடக்கணக்கில் ஒருவரால் உணவு, நீர் இல்லாமல் இருக்க முடிகிறது என்பதைக் கேள்விப்பட்ட போது, அது உண்மை தானா?, இல்லை இதில் பித்தலாட்டம் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய சில மருத்துவர்கள் முன்வந்தார்கள். அவர்கள் பிரஹலாத் ஞானியை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள்.

Defense Institute of Physiology and Allied Sciences ( DIPAS ) என்கிற மருத்துவ அமைப்பு, அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் ஆஸ்பத்திரியில் (Sterling Hospital in Ahmedabad ) 2003–ம் ஆண்டு சுதிர் ஷா (Sudhir Shah ) என்ற மருத்துவர் தலைமையில் அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இந்தக் குழுவில் சில மருத்துவ நிபுணர்களும் இருந்தார்கள்.

மருத்துவ பரிசோதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்றது. ஒரு மூடப்பட்ட அறையில் பிரஹலாத் ஞானியை தங்க வைத்தனர். பின்னர் முழு கண்காணிப்பில் வைத்து நடத்திய பரிசோதனையின் முடிவில், அவருடைய எடை சற்று குறைந்ததே ஒழிய மற்றபடி எல்லா விதங்களிலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

இந்த செய்தி வெளியான பின்னர் தான் 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில், அவர் பற்றிய செய்தி வெளியாகியது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த பத்து நாள் பரிசோதனை முழுமையானது அல்ல என்றும், அவருடைய எடை குறைந்தது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூற ஆரம்பித்தார்கள்

அதனால் DIPAS அமைப்பு 2010–ம் ஆண்டு, அதே மருத்துவர் சுதிர் ஷா தலைமையில் 35 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு மூலம் மறு பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. அதற்கு பிரஹலாத் ஞானியும் ஒத்துக் கொண்டார். 2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22–ந் தேதியில் இருந்து மே மாதம் 6–ந் தேதி வரை பரிசோதனை நடைபெற்றது.

இந்த பரிசோதனை முறை முழுமையான விஞ்ஞான பூர்வமாக இருந்தது. அவர் தங்கி இருந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவரை தினமும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் முதலான எல்லா பரிசோதனைகளும் செய்தார்கள். அவர் தன் உடலுக்குத் தேவை என்று சொன்ன சூரிய ஒளியில் அவரை இருக்க வைத்த சமயத்தில் கூட கேமரா அவரை விட்டு விலகவில்லை. எல்லாம் வீடியோவில் பதிவானது. சிறுநீர், மலம் கழிக்கத் தேவை இருக்காத காரணத்தால், பரிசோதனை நாட்களில் அவருடைய அறையை ஒட்டி இருந்த கழிவறையையும் பூட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் அனில் குப்தா என்ற வேறொரு அமைப்பைச் சேர்ந்த ஒரு மருத்துவ பேராசிரியர் கண்காணிப்பில் நடைபெற்றது.

பதினைந்து நாட்கள் பரிசோதனை முடிவில், உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, சிறுநீரகம், இதயம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மற்ற உடல்நலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளில் பிரஹலாத் ஞானியின் உடல் நலம், ‘அவர் வயதில் பாதி மட்டுமே உள்ள, தினசரி உண்டு, நீரருந்தி வாழும் சராசரி மனிதனின் உடல்நலத்தை விட பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதை, அந்த மருத்துவ ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. DIPAS அமைப்பு அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியமான காரணம் பிரஹலாத் ஞானி உண்மையா போலியா என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டிய விரிந்த பார்வை ஒன்று இருந்தது.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எப்படி என்று அறிந்தால், பல நாள் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும் விண்வெளி வீரர்கள், இயற்கை சீற்றங்களால் சில இடங்களில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என்கிற காரணம் தான் அது. ஆனால் அந்த சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தை அவர்களால், பிரஹலாத் ஞானி மூலம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பிறகு தான் ITN தொலைக்காட்சியும், ஆஸ்திரிய ஆவணப்படமும் அவரைப்பற்றி விரிவாகச் சொல்லி பிரபலப்படுத்தின.

யோகக் கலையில் உண்மையாக தேர்ச்சி அடைந்த இந்திய யோகிகள், ‘காற்று மற்றும் சூரிய ஒளி ஆகிய இரண்டினால் மட்டுமே வாழ முடிந்தவர்கள்’ என்று கூறுவார்கள். அவர்களுடைய யோக சக்திகளின் சாத்தியக்கூறுகளை, பதஞ்சலியின் யோக சூத்திரங்களை படித்தவர்கள் மிகவும் நன்றாக அறியக்கூடும். அது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பிடியில் அடங்கக்கூடியவை அல்ல. இங்கு நாம் குறிப்பிட்ட பிரஹலாத் ஞானி இந்த யோகசக்தி அல்லாமல், வேறெந்த அபூர்வ சக்தி படைத்தவராகவோ, மேலான ஆன்மிக ஞானம் பெற்றிருந்தவராகவோ நமக்குத் தெரியவில்லை.

ஆனால் ‘எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத் தானே’ என்று அடிக்கடி சொல்லும் நமக்கு, அந்த ஒரு சாண் வயிற்றின் தேவைகளில் இருந்து விடுபட்ட ஒருவரைப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுவது இயல்பே அல்லவா!

    –தொடரும்.

No comments:

Post a Comment