இந்தத் தலைப்பில் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆவல். இந்த மந்திரம், ஆன்மீகம் போன்றவற்றில் பல காலமாக எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில் சம்சாரியாக இருப்பதை விட சன்யாசியாகவே இருக்க விரும்பினேன். இதற்கு காரணம் என்ற ஒன்றைத் தேடுவதை அல்லது சொல்வதை விட இதெல்லாம் கிரகாச்சாரம் என்று சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டு விடலாம்.
இறைவனின் விருப்பம் போலும். வயது ஏற ஏற இல்லறத்தின் பால் ஈர்ப்பு அதிகமாகி துறவறமாவது ஒன்னாவது, அது எப்படியோ நாசமாக போகிறது என்று தலை முழுகி விட்டேன். இப்போது மீண்டும் ஆன்மீக ஈடுபடு ஏற்பட்ட போதும், இல்லறத்தை விட விரும்பவில்லை. கடவுள் அவதாரங்கள் கூட இல்லறத்தில்தான் நல்லறம் கண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தில் மேலான நிலையை அடைந்த சாதாரண முனிவர்கள் முதல் பிரம்ம ரிஷிகள் வரை இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வீடு பேறு அடைந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் மேலான நிலையை அடைவதற்கு இல்லறம் ஒரு தடை அல்ல. நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது அழித்துவிடின் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப எந்த பாவ காரியங்களும் செய்யாமல் இருந்தாலே நாம் ஓரளவேனும் ஆன்மீக வாதிகள்தான். இதற்கு நீட்டலான குடுமி வைப்பதோ, மழித்தலான மொட்டை அடிப்பதோ தேவையில்லை. அப்படி செய்து நாம் ஆன்மீக வாதிகள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
சரி, இனி இன்றைய தலைப்பிற்கு வருவோம். குரு உபதேசம். எனது இரண்டாவது பாடத்தில் ஒரு குருவின் துணையில்லாது வித்தை கற்கும் யோகம் யாருக்கு அமையும் என்பதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். எனது பாடங்களில் அதுதான் இன்று வரை அதிகமாக படிக்கப் பட்ட பாடமாக இருக்கிறது.
எல்லோருக்கும் இந்த யோகம் அமையாதே. அப்படிப் பட்டவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாக குரு அமைவாரா, அதற்கு கிரக நிலைகள் ஒத்துழைக்குமா என்று அலசி ஆராய்வது. இது அடுத்தப் பதிவில் வரும். இதை பதிவிடுவதற்கு இன்னொரு காரணம். இந்த வகுப்பறை மாணவர்களில் ஒருவர், தனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், லௌகீக வாழ்க்கையில் இருந்து சிறிது சிறிதாக விலகி ஆன்மீகம் பக்கம் போக விரும்புவதாகவும், எனக்கு குரு உபதேசம் கிடைக்குமா, இதைப் பற்றி ஒரு பதிவிடுமாறு கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கினங்கவும் இந்த பதிவு.
அடுத்து, நான் தினமும், இரண்டு வேளை மந்திர ஜபம் செய்கிறேன். இந்த ஜபம் செய்வது ஆரம்பித்த பிறகு எனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி பின்னொரு நாளில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இன்றைய தலைப்பிற்கு போகும் முன் இந்த மந்திரங்களைப் பற்றிப் பார்த்து விடுவோம். சிலர் நினைத்துக் கொண்டிருப்பது. இந்த மந்திரங்கள் துறவிகளுக்காக மட்டும்தான் இருக்கிறது, இல்லறம் கடைபிடிப்பவர்களுக்காக இல்லை என்று. உண்மையில், இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என்று சில மந்திரங்கள் இருக்கின்றன. துறவிகளுக்குரிய மந்திரங்களும் இருக்கின்றன. நல்ல குரு அமைந்தால் அவரவர் அவரவருக்குரிய மந்திரங்களை உபதேசமாகப் பெற்று ஜபித்து பயனடையலாம்.
குருவின் துணையுடன் மந்திரங்கள் உபதேசிக்கப் பெற்று ஜபிக்க ஆரம்பித்தால் விரைவில் பலன் கிடைக்கும். அதை எப்படி முறையாக ஜபிப்பது என்பன போன்ற விஷயங்களும் தெரிய வரும்.
மந்திரம் என்றதும் ஏதோ பில்லி சூனியம், ஏவல், இடுகாடு, பூதப் பிரேத பிசாசுகள் என்ற மாயை நம்மில் சிலருக்கு இருக்கிறது. இது மாந்திரீகத்தில் சிறு பகுதிதான். இதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன.
நான் ஏற்கனவே சொன்னதைப் போல் துறவிகளுக்கு இல்லற ஆசை ஏற்படாமல் இருக்கவும், காம உணர்வு தோன்றாமல் இருக்கவும், அப்படிதோன்றினாலும் அதை அடக்கி வைக்கவும் மந்திரங்கள் இருக்கின்றன.
கெடு பலன்களைக் கொடுக்ககூடிய கிரகங்கள் பிரீதியாக கிரக மந்திரங்கள் இருக்கின்றன. பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும், திருமணமாகாத ஆண்களுக்கு ஒரு இனிய மங்கை நல்லாள் (கிள்ளை மொழியாள் என்றும் சொல்ல நினைத்தேன், அப்படியென்றால் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவரோ என்று யாராவது கேட்கக்கூடும், அதனால் சொல்லவில்லை) கிடைப்பதற்கான மந்திரங்களும் இருக்கின்றன.
தரித்திரம் தாண்டாமாடும் இடத்தில், அஷ்ட லெட்சுமியே வந்து குடியிருக்கக் கூடிய அளவுக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இன்னும் பலவும் இருக்கின்றன. என்னென்ன மந்திரங்கள், அவை எப்படி வேலை செய்கின்றன போன்றவை வேறொரு பதிவில் சொல்கிறேன். Not here and not now because it is beyond scope of this lesson. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது.
இந்த மந்திரங்களெல்லாம் நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து அவர் உபதேசம் பெற்று முறையாக ஜபித்தால் நல்ல பலன் காணலாம். ஒரு நல்ல குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறுவதற்கான கிரக நிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதை இன்னும் ஓரிரு நாளில் பதிவிட எண்ணியுள்ளேன். அப்போது படித்து பயனடையலாம்.
இப்போது யாருடைய பொறுமையையும் சோதிக்கும் வகையில் நீட்டி முழக்காமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment