தென அமெரிக்கக் கண்டத்தை அப்படியே மேற்கு நோக்கி நகர்த்தினால் அதன் விளிம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியுடன் நன்கு பொருந்தும் என்றார் அவர் (கீழே படம் காண்க). உலகப் படத்தை நீங்கள் உற்று கவனித்தால் அவர் சொல்வது சரியே என்று தோன்றும். ஆனால் வெஜனர் இது ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.
படத்தில் உள்ள ஐந்து கண்டங்களிலும் பரவியிருந்த தாவரங்கள், உயிரினங்கள் |
ஆப்பிரிக்கா, இந்தியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் சில வகை செடி கொடிகள் ஒரே மாதிரியாக இருப்பதையும் அக்கண்டங்களில் முற்காலத்தில் ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகள் உயிர் வாழ்ந்ததையும் அவர் சான்றாகக் காட்டினார்.
ஆல்பிரெட் வெஜெனர் (1880 -1930) |
வெஜனர் வானிலைத் துறையிலும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சிக்காக கடும் குளிர்காலத்தில் கிரீன்லாந்துக்குச் சென்றார். ஆராய்ச்சி வெற்றிபெற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது கொள்கை மறைந்து விடவில்லை.
கண்டப் பெயர்ச்சிக்குக் கடைசியில் எதிர்பாராத வகையில் கடலுக்கு அடியிலிருந்து துப்புகள் கிடைக்க ஆரம்பித்தன். பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கும் கடலடி தந்திக் கம்பிகள் (கேபிள்கள்) போடப்பட்ட்ன. ஒரு சமயம் இவை பழுதடைந்தன. ஆகவே அவற்றை மேலே தூக்கிய போது அவற்றுடன் ஒட்டிக் கொண்டு கற்களும் மேலே வந்தன. அவற்றை ஆராயந்த போது நடுக்கடல் பாறைகள் வயது குறைந்தவையாகக் காணப்பட்டன.
ஒரு ஏரியில் நட்ட நடுவிலிருந்து வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது மிகப் பழையதாக இருக்கும். ஏரியின் நடுப்பகுதியில் வண்டல் நிறையவே இருக்கும். ஏரியின் கரை ஓரமாக உள்ள வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது அண்மையில் வந்ததாக இருக்கும்.
ஆனால் இதற்கு நேர் மாறாக அட்லாண்டிக் கடலின் நடுப் பகுதிலியிருந்து எடுக்கப்பட்ட பாறை வயது குறைந்தவையாகக் காணப்பட்டன. இது பெரிய புதிராக இருந்தது. தவிர, நடுக்கடலில் வண்டல் குறைவாகவே இருந்தது. விசேஷக் கருவிகளைக் கடலுக்குள் இறக்கி ஆராய்ந்த போது அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் கடலடித் தரையில் வெப்பம் வெளிப்படுவது தெரிய வந்தது.
உலகின் கடல்களுக்கு அடியில் தொடர் சங்கிலி போன்ற மலைகள். இங்கு தான் கடலடித் தரை விரிவடைகிறது. இங்கு பாறைகள் வயது குறைந்தவை (சிவப்பு நிறம்) என்பதை இப்படம் காட்டுகிறது. |
சுருங்கச் சொன்னால் அங்கு புது நிலம் வெளிப்படுகிறது. அந்த நிலமே அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியை மேற்கு நோக்கியும் கிழக்குப் பகுதியை கிழக்கு நோக்கியும் தள்ளுகிறது என்பது தெரிய வந்தது. இதன் விளைவாக அட்லாண்டிக் கடல் மேலும் மேலும் விரிவடைகிறது.
கடலடித் தரையில் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுக்கு கடலடித் தரை விரிவு (Sea Floor Spreading) என்று பெயர். பூமியின் மேற்புறத்தில் வேறிடங்களிலும் கடலடித் தரையில் இவ்விதம் நிகழ்கிறது. அட்லாண்டிக்கில் கடலடியில் உள்ள மலை உலகின் பிற கடல்களிலும் நீண்டு அமைந்துள்ளது. வளைந்து வளைந்து செல்லும் இந்த நீண்ட மலைத் தொடரின் நீளம் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர்.
பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளிப்பட, இரு புறங்களிலும் தரை நகருகிறது |
பூமியின் காந்தத் துருவங்கள் (Magnetic Poles) பல ஆயிரம் அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது. அதாவது வட துருவம் தென் துருவமாக மாறும். தென் துருவம் வட துருவமாகிவிடும். இந்த மாற்றங்கள் கடலடித் தரையில் பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் நெருப்புக் குழம்பில் அடங்கிய நுண்ணிய இரும்புத் துணுக்குகளில் பதிவாகிறது.
ஆகவே கடலடிப் பாறை சாம்பிள்களை ஆராய்ந்த போது பூமியின் கடந்த கால வரலாறே தெரிய வந்தது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்களான பிரெடெரிக் வைன்(Frederick Vine), டிரம்மண்ட் மாத்யூஸ்(Drummond Mathews) ஆகிய இருவரும் பாறை சாம்பிள்களில் அடங்கிய தொல்காந்தப் பதிவுகளுக்கு விளக்கம் கண்டுபிடித்த போது தான் கடலடித் தரை விரிவுக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டது.
விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்ததில் பூமியின் மேற்புறம் பல சில்லுகளால் ஆனது என்பது தெரிய வந்தது. பூமியின் சில்லுகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
No comments:
Post a Comment