Saturday, December 17
சனிப் பெயர்ச்சி என்பது என்ன?
சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.
சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்க்ள் தெரியாது.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.
இடது புறத்திலிருந்து மூன்றாவதாக உள்ளது சனி கிரகம். வலப் புறத்திலிருந்து மூன்றாவதாக நீல நிறத்தில் இருப்பது பூமி. |
சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.
கொள்ளளவில் சனி கிரகம் பூமியை விட 700 மடங்கு பெரியது |
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து திருவான்மியூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிற ஒருவர் திருவான்மியூரில் இருக்கிற தனது உறவினரிடம் செல் போனில் சில நிமிஷங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி யில் இருக்கிறேன், ராயப்பேட்டையில் இருக்கிறேன், மயிலாப்பூரில் இருக்கிறேன் என்று தாம் கடக்கும் இடங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவதாக வைத்துக் கொள்வோம். கிரகங்களும் இவ்விதமாகத் தான் வானத்து ராசிகளைக் கடந்து செல்கின்றன.
சனி கிரகம் A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது - இதுவே சனிப் பெயர்ச்சியாகும். இப்படத்தில் 1. சூரியன். 2. பூமி. |
சனி கிரகத்தின் இன்னொரு தோற்றம் |
வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.
சனி கிரகத்தின் வளையங்களில் ஒரு பகுதி |
படம்-1 ஹப்புள் எடுத்தது |
படம்-2 ஹப்புள் எடுத்தது |
1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.
ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.
ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. ’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.
சனி கிரகத்தை டிசம்பர் 22 ஆம் தேதி தென் கிழக்கு வானில் அதிகாலை 5 மணி வாக்கில் காணலாம் (கீழே வரைபடம் காண்க). அடிவானில் சந்திரன் பிறையாகத் தெரியும். அதற்கு மேலே பக்கம் பக்கமாக இரு ஒளிப் புள்ளிகள் தெரியும். இடது புறம் இருப்பது சனிக் கிரகம். வலது புறம் இருப்பது சித்திரை (Spica) நட்சத்திரமாகும்.
டிசம்பர் 22 காலை 5 மணி: தென் கிழக்கு அடிவானில் சந்திரன். பிறைக்கு மேலே இடது புறம் சனி, வலது புறம் சித்திரை (Spica) |
No comments:
Post a Comment