இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த சிட்டுக்குருவி சில இடங்களில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில் அவை இருந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியாமாக நகரங்களின் சில பகுதிகளில். ஏன் குறைந்து போயின என்பதை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்து கொள்ள முடியும். ஒரு உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பலகாலமாக, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் அவ்வளவு இருந்தன, தற்போது இவ்வளவாகக் குறைந்து போய் விட்டன என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லையெனில் அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்து விட்டது என்று சொல்லமுடியாது. நாமாக ஒரு காரணத்தையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது. ஆனால் இங்கு நடந்ததென்னவோ அதுதான்.
மேலை நாட்டின் மீது உள்ள மோகத்தினால் அவர்களைப் போல உடையணிந்து கொண்டோம். அவர்கள் சாப்பிடுவதையும், குடிப்பதையும் இங்கே கொண்டு வந்து நாமும் சுவைக்க ஆரம்பித்தோம். பரவாயில்லை. ஆனால் அவர்கள் நாட்டில் நடைபெற்ற நீண்ட கால பறவைகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளிவந்த முடிவுகளை நம் நாட்டில் உள்ள பறவைகளுக்கும் பொருந்தும் எனக் கருதுவது முட்டாள்தனமான ஒன்று. இதற்குச் சிறந்த உதாரணம் இந்தியாவில் சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்குக் காரணம் செல்போன் டவர்கள் எனச் சொல்வது. ஸ்பெயினில் சில காலம் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில், செல்போன் டவர்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகளும் கூட அங்குள்ள சிட்டுக்குருவிகளில் எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்காலாம் என்று சொல்லப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை வைத்துக்கொண்டு, அது நம் நாட்டுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. உணவையும் உடையையும் அவர்களைப் பார்த்து “காப்பி அடித்ததைப்” போல இதையும் செய்ய முடியாது.
ஆனால், இந்தியாவில் சிட்டுக்குருவியின் வீழ்ச்சிக்கு சில அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தக்காரணத்தையே கற்பித்தனர், அவர்களின் கூற்றை நம்பிய பல வெகுசன ஊடகங்களும், இந்தக்காரணத்தையே பிரபலப்படுத்தியதால், இப்போது யாரைக்கேட்டாலும் “சிட்டுக்குருவி குறைந்து விட்டதா? அதற்குக் காரணம் செல்போன் டவர்கள் தான்” சொல்லுகின்றனர். இது நமது அறிவியல் மனப்பான்மையின்மையையே காட்டுகிறது. இதைப்போன்ற அறிவியல் ஆதாரமற்ற செய்திகள் பரவாமல் இருக்க வேண்டுமானால், உண்மையான காரணங்களை அலசி ஆராய்ந்து எடுத்துரைப்பது மிகவும் இன்றியமையாதது. அதைத்தான் திரு ஆதி. வள்ளியப்பன் இந்நூலில் செய்துள்ளார். சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை முறை, அவை நமது பண்பாட்டில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரசியமான செய்திகளை இந்நூலில் தருகிறார். அதுவும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையில்.
மேலைநாடுகளில் ஏற்பட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சியால் இங்கு இந்தியாவில் நாம் பெற்ற படிப்பினை என்ன? நம் நாட்டில் சுமார் 1300 பறவையினங்கள் உள்ளன. அவற்றினைப் பற்றிய நீண்டகால ஆராய்ச்சி, கணக்கெடுப்புப் பணி முதலிய அறிவியல் பூர்வமாக தகவல் சேகரிக்கும் திட்டங்களை வெகுவளவில் ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும். கானமயில் (Great Indian Bustard) என்ற ஒரு பறவையினம் ஒரு காலத்தில் தமிழகத்தில் வெட்டவெளிகளிலும், பரந்த புல்வெளிகளிலும் திரிந்து கொண்டிருந்தன. ஆனால் வேட்டையாடப்பட்டதாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் அவற்றின் வாழிடம் இல்லாமல் போனதாலும், இன்று அப்படி ஒரு பறவை இங்கு இருந்தது என்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பிணந்திண்ணிக்கழுகுகள் (Vultures) இன்று ஓரிரண்டாகக் குறைந்து, காண்பதற்கு அரிதான ஒன்றாகிவிட்டன. இன்று நம் கண்களுக்கெதிரே சில இடங்களிலிருந்து காணாமல் போன சிட்டுக்குருவியை முன்னுதாரனமாகக் காட்டி, பல இடங்களில் அற்றுப்போய்க்கொண்டிருக்கிற பல அரிய பறவையினங்களை காப்பாற்றும் எண்ணத்தை பொதுமக்களுக்கு ஊட்டவேண்டும்.
புறவுலகின் பால் நாட்டம் ஏற்பட, மனிதனையல்லாத உயிரினங்களின் மேலும், அவை வாழுமிடங்களின் மீதும் கரிசனம் ஏற்பட, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க, வித்தாக அமைவது பறவைகளைப் பார்ப்பது (Birdwatching) போன்ற செயல்கள். அதுவும் சிறு வயது முதலே இவ்வகையான இயற்கையை ரசித்துப் போற்றும் செயல்களில் ஈடுபடுவது புறவுலககினை மதிக்கும் தலைமுறையினை உருவாக்கும். புறவுலகின் பால் நமக்கு உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சிட்டுக்குருவி போன்ற மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுற்றித்திரியும் பறவைகளைப் பார்ப்பதிலிருந்து தொடங்கலாம். அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடலாம். அதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் இந்நூல் நிச்சயமாக ஊட்டும்.
ஆதி வள்ளியப்பன் எழுதிய “சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்” நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை. இதன் PDF இதோ.நூல் விவரம்:
ஆதி வள்ளியப்பன் (2012). சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும். தடாகம் & பூவுலகின் நண்பர்கள் வெளியீடு. பக்கங்கள் 88. விலை ரூ. 70. இந்நூலை வாங்க தொடர்பு கொள்க: தடாகம். தொலைபேசி எண் +91-89399-67179
இணைய வழியில் வாங்க உரலி இதோ
No comments:
Post a Comment