ஆன்மீகத் தலைவரும், சிறந்த தத்துவ ஞானியுமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Biography) மற்றும் சிறப்பு கட்டுரை.
Home » வாழ்க்கை வரலாறு » ஆன்மீக தலைவர்கள் » சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 12, 1863
பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா
இறப்பு: ஜூலை 4, 1902
தொழில்: தத்துவவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.
குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்
ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.
உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்
சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.
இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.
ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று
எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.
இந்தியாவில் அவரது பயணம்
1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.
மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்
1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.
ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்
மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இறப்பு
மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.
காலவரிசை
1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.
1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.
1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.
1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.
1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.
1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.
1897: இந்தியா திரும்பினார்
1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.
1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.
One Response to சுவாமி விவேகானந்தர்