இந்திய தர்க்க, நியாய சாஸ்திரம் -#1
முன்னர் சாண்டில்யன் எழுதிய 'மன்னன் மகள்' நாவலைப் பற்றிய விமரிசனத்தில் 'கௌடில்யரின் தர்க்க சாஸ்திரம்' என்று காணப் பட்டிருந்தது.
அந்த நாவலின் நாயகனாகிய கரிகாலன், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் படித்தவன். அர்த்த சாஸ்திரம் என்பது இந்தியர்களுடைய பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்று.
'பொருள் நூல்' என்று இதனைத் தமிழில் கூறுவார்கள்.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பனவற்றைத் தமிழில் நாம் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்கிறோம்.
இதில் பொருள் நூலாக விளங்குவது அர்த்தசாஸ்திரம்.
இதைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறோம்.
தர்க்க சாஸ்திரம் என்பது இன்னொரு துறை.
இதுவும் இந்தியர்களின் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றுதான்.
ஆங்கிலத்தில் இதை Logic என்று சொல்கிறோம்.
தமிழில் 'அளவை சாஸ்திரம்' என்று சொல்கிறோம்.
தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து அந்தத் தொடரில் நான் எழுதிய மடல்களைத் தொகுத்து அனுப்பியுள்ளேன்.
அதன் பின்னர் இந்தியர்களின் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லி யிருந்தேன். நியாய சாஸ்திரம் என்றும் குறிப்பிடுவார்கள்.
அளவை சாஸ்திரம் என்றும் இதனைச் சொல்வார்கள்.
Logic என்பது ஆங்கில மரபு.
இந்திய அளவை சாஸ்திரம் மிகவும் வளமுடையது. கல்லைக் கசங்கிப் பிழிந்து சாரத்தை எடுப்பது போன்ற தன்மை படைத்த தர்க்க முறைகள் நம்மிடம் இருக்கின்றன.
கையில் இருப்பதைக் கையால் உணர்ந்து கண்ணாலும் காண்பது போன்ற நேரடியான உண்மையை 'ஹஸ்தாமலக நியாயம்' என்று சொல்வார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பது எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும்.
ப்ரத்யக்ஷப் பிரமாணம் என்பது கண்ணால் காண்பதே உண்மை, அதுவே அத்தாட்சி என்னும் நியாயம்.
கண்ணால் பார்க்கமுடியாதது; அதை அனுமானத்தில் தெரிந்து கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் முறைகளும் சில இருக்கின்றன.
மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது.
எங்கு புகை யிருக்கிறதோ அங்கு நெருப்பு இருக்கும்.
நெருப்பில்லாமல் புகையாது.
மலையின் உச்சியில் புகை இருக்கிறது.
ஆகவே மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது.
இந்த விஷயத்தில் நெருப்பு இருப்பதை நாம் காணவில்லை. ஆனால் புகையை வைத்து நெருப்பும் அங்கு இருப்பதாக அனுமானம் செய்து விடுகிறோம்.
இதில் Fallacy என்பது உண்டு.
மலையின் உச்சியில் இருப்பது புகைதான் என்பது என்ன நிச்சயம்? மூடு பனியாக இருக்கலாம். மேகமாக இருக்கலாம்.
பல தவறான வாதங்களும் உண்டு.
எல்லா மனிதர்களும் மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாக் குரங்குகளும் மிருக இனத்தைச் சேர்ந்தவை.
ஆகவே மனிதரெல்லாம் குரங்கு.
இது தவறான தர்க்கவாதம்.
ஆராய்ச்சி நெறி முறைகளில் இந்திய நியாய சாஸ்திரம் மிகவும் அதிகமாக உதவக் கூடியது.
தர்க்கசாஸ்திரத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
அந்த மாதிரி நேரத்தில் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஆள் நானாகத்தான் இருக்கும்.
பார்க்காததையும் ஊகித்தறியும் சில தார்க்கீக முறைகளில் ஒன்றைச் சொன்னேன்.
ஒரு ஆசாமி இருக்கிறான்.
அவன் பெயர் குண்டு ராமன்.
உடல் மிகவும் பருமனாக வாட்டசாட்டமாக இருந்ததால் அவனுக்கு அப்பெயர்.
ஆனால் அவன் உணவு சாப்பிட்டதை யாரும் பார்த்ததேயில்லை.
பகல்பூராவும் அவன் பாட்டுக்கு அவன் பார்க்கவேண்டிய வேலையைப் பார்ப்பான். இல்லையெனில் தூங்கிக்கொண்டிருப்பான்.
தர்க்கவாதி ஒருவர் சொன்னார்:
"குண்டு ராமன் பகலுண்ணான்;
இரவுண்பான்".
இரவுண்பான் என்பது அவருடைய முடிபு.
எப்படி அதனைச் சொல்கிறார்?
தர்க்கவாதி மேலும் சொல்கிறார்:
"உணவு உண்ணாதான் உடல் மெலிந்திருப்பான். குண்டு ராமன் மெலிய வில்லை. மாறாக பருமனாக இருக்கிறான்".
தர்க்கவாதி இன்னும் சொல்கிறார்:
"உணவை அதிகமாக சாவகாசமாக உண்டால் உடல் பருமனாக ஆகும்".
"குண்டுராமன் பகலில் உண்ணாததால் வேறு ஏதோ நேரத்தில் உண்ண வேண்டும்".
"அதுவும் யாரும் பார்க்காத நேரமாக இருக்கவேண்டும்".
"ஆகவே குண்டுராமன் இரவில் உண்பவனாக இருத்தல் வேண்டும்".
துணிபு: 'பகலுண்ணான், இரவுண்பான் குண்டுராமன்'.
இந்த தார்க்கிக்க வாதத்தை நான் என்னுடைய சொந்தச் சொற்களால் சொந்தமான பாணியில் சொல்லியிருக்கிறேன்.
உங்களில் யாருக்கும் இந்திய தர்க்க சாஸ்திரம் பரிச்சயமாக இருந்தால் நீங்கள் வேறு விதமாகப் படித்திருக்கக்கூடும்.
இதற்கு தர்க்கசாஸ்திரத்தில் ஒரு பெயர் உண்டு:
'அருத்தாபத்தி நியாயம்'.
இன்னும் வரும்......
No comments:
Post a Comment